Tuesday, 28 October 2014

சுரங்கனார் அருவி

 சுரங்கனார் அருவி

அருவியின் அழகு
தேனி மாவட்டம், கூடலூர் அருகே சுரங்கனார் அருவி அமைந்து உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மலையின் உச்சியில் இருந்து அருவியில் தண்ணீர் கொட்டும் அழகிய காட்சியை படத்தில் காணலாம்.

Sunday, 5 October 2014

அரியலூர் மாவட்டத்தின் வரலாறு

அரியலூர் மாவட்டத்தின் வரலாறு

 

அரியலூர் மாவட்டம் ஒரு புதிய மாவட்டம், இது ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 2007 நவம்பர் 23 முதல் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் அரியலூர், செந்துறை மற்றும் உடையார்பாளையம் ஆகிய மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு சிமெண்ட் ஆலைகள் அதிகம் உள்ளன. இந்த மாவட்டத்தின் பெருஞ்சிறப்பு கங்கைகொண்ட சோழபுரம். தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்த இராஜராஜசோழனின் மகன் இராஜேந்திர சோழன் பெரிய கோயிலை போன்றே கட்டிய கோயில். இம்மாவட்டத்தின் மற்றொரு பெருஞ்சிறப்பு.

திருக்கோயில்கள்

அருள்மிகு ஆலந்துறையார்(வடமூலநாதர்) திருக்கோயில், கீழப்பழுவூர், அரியலூர்
அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில், திருமழபாடி, அரியலூர்
அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில், கங்கை கொண்ட சோழபுரம், அரியலூர்
அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில், கல்லங்குறிச்சி, அரியலூர்
அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில், உடையவர் தீயனூர், அரியலூர்

முக்கிய ஆறுகள் : கொள்ளிடம், மருதியாறு, வெள்ளாறு.
முக்கிய நகரங்கள் : அரியலூர், ஜெயங்கொண்டம்.
புகைவண்டி நிலையங்கள் : அரியலூர், ஒத்தக்கோவில், வெல்லூர், செந்துறை, ஆர்.எஸ். மாத்தூர், ஈச்சங்காடு.

அரியலூர் மாவட்டத்தின் சிறப்புகள்

சுண்ணாம்புக்கல், பாஸ்பேட், நிலக்கரி உள்ளிட்ட கனிம வளம் கொண்ட மாவட்டம்.
மாநிலத்தின் செம்மண் படிவங்கள் முந்திரிப் பயிர் சாகுபடிக்கு ஏற்றது.
வேட்டக்குடி கரைவெட்டி ஏரி பல்வேறு பறவையினங்கள் வந்து செல்லும் சரணாலயம்.
அணைக்கரைப் பாலம்: 150 வருட பழமையான இப்பாலம், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது. இது தஞ்சாவூர் - கும்பகோணம் நகரங்களை சென்னை மார்க்கத்தில் இணைக்கிறது.

பரப்பு - 1,949.31
மக்கள் தொகை - 6,95,524 | ஆண்கள் - 3,46763 | பெண்கள் - 3,48761
உயரம் - கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 249 மீட்டர் (820 அடி)

சென்னையின் வரலாறு

சென்னையின் வரலாறு

 

சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக  நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று.

17 ஆம்  நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை, உலகின் நீளமான  கடற்கரைகளுள் ஒன்று. சென்னை, கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம். பல விளையாட்டு  அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. சென்னையின் பொருளாதாரம்  பலத்தரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது.

ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. மேலும் ஊர்தி மற்றும் ஊர்திகளின் உதிரிப்பாகங்கள் உற்பத்தியிலும் நாட்டின் 35 விழுக்காடு சென்னையை அடிப்படையாகக் கொண்டுள்ளன. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

வரலாறு
சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ, மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது.

1639 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது  உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவர் உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை விற்ற அய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது.

சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள புனித மேரி தேவாலையம் சென்னையில் உள்ள மயிலாப்பூர், பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. புனித தாமஸ் இங்கு கி.பி. 52 முதல் 70 வரை இங்கு போதித்ததாக  கருதப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர், 1522 ஆம் ஆண்டு சாந்தோம் என்ற பெயரில் ஒரு  துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612 ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது.

1639 ஆம் ஆண்டில் ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது. ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த கோட்டையை மையமாக கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. 

சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன.
1522 ஆம் ஆண்டில் இங்கு வந்த போத்துக்கீசர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி போத்துக்கீசர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612 ஆம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது.

1688 ஆம் ஆண்டில் சென்னை முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம்  இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையை சென்னை பெற்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்திய குடியிருப்பு பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான சென்னை மாகாணம் என்ற பெயர் பெற்றது. 1746 ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு கைப்பற்றியது.

1749 ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947 ஆம் ஆண்டு இந்தியா  விடுதலை அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலைநகரானது. சென்னை மாகாணம் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

நகரின் பெயரான மதராஸ் 1996 ஆம் ஆண்டு சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956 ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது. 1996 ஆம் ஆண்டு தமிழக அரசாங்கம் மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் சென்னை என மாற்றம் செய்யப்பட்டது.

வெங்கடபதி சகோதரர்களரிடம் இருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தைபிரித்தானியர் வாங்கியதால், தங்கள் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னப்பட்டணம் என அழைக்கவேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனை சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது.

புவியியல்
இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சென்னை, தமிழகத்தின் வடகிழக்கு கோடியில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அருகில் உள்ளது. சென்னை நகரின் கிழக்கில் வங்காள விரிகுடா உள்ளது. சென்னை நகரத்தின் பரப்பளவு 174 கி.மீ. சென்னை மாவட்டமும், திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளும் சென்னை மாநகரப் பகுதிகளாக கருதப்படுகின்றன. சென்னை நகரின் அருகாமையில் மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஸ்ரீஹரிக்கோட்டா ஆகிய ஊர்கள் உள்ளன

கூவம், மற்றும் அடையாறு ஆகிய நதிகள் சென்னை நகரின் வழியாக பாய்கின்றன. புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகளிலிருந்து நகருக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. சென்னையில் உள்ள மெரினா கடற்கரை  உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை ஆகும். 13 கி.மீ. நீளம் உள்ள இக்கடற்கரை, மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையின் வடகோடியில் கூவம் கடலில் கலக்கும் இடத்திற்கு தெற்கில் உள்ள பகுதி மெரினா கடற்கரை என்றும், அதன் தெற்கில் அடையாறு கடலில் கலக்கும் பகுதிக்கு வடக்கில் உள்ள பகுதி சாந்தோம் கடற்கரை என்றும், அடையாற்றின் தெற்கில் உள்ள பகுதி எலியட் அல்லது பெசன்ட் நகர் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது.

சென்னை நகரின் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை வட சென்னையில் உள்ளன. மத்திய சென்னை, சென்னையின் முக்கியப் பகுதியாகும். தென் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. சென்னை மாநகரின் நிர்வாகம் சென்னை மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது மாநகராட்சியின் தலைவர் மேயர் - சைதை சா. துரைசாமி சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சி 1688 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

இது இந்தியாவில் மட்டுமின்றி இங்கிலாந்து அல்லாத காமன் வெல்த் நாடுகளின் மாநகராட்சியைக் காட்டிலும் பழமையானது.
தமிழகத் தலைமைச்செயலகம் இங்கு உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்தது. பின் 13 மார்ச் 2010 அன்று ஓமந்துரார் அரசினர் தோட்டத்தில் 400 கோடிகளுக்கு மேல் செலவில் கட்டப்பட்ட பசுமை கட்டத்தில் மாற்றப்பட்டுள்ளது. இது உலகின் முதல் பசுமை சட்டமன்ற கட்டடமாகும். மேலும் சென்னையில் 18 தமிழக சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

வட சென்னையில் திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி), இராயபுரம் ஆகிய தொகுதிகளும், மத்திய சென்னையில் வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய தொகுதிகளும், தென் சென்னையில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர்,மைலாப்பூர்,வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளும் உள்ளன.

இந்திய பாராளுமன்றத்தின் மூன்று தொகுதிகள் சென்னையில் உள்ளன. அவை வட சென்னை, மத்திய சென்னை , தென் சென்னை ஆகியவை.
தமிழகம், மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் உயர்நீதிமன்றம் சென்னையில் உள்ளது.தமிழகக் காவல் துறையின் பிரிவான சென்னை மாநகரக் காவல்துறை சென்னையில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கிறது. சென்னை மாநகர் முப்பத்தாறு காவல் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 121 காவல் நிலையங்கள் சென்னை மாநகரப் பகுதியில் உள்ளன.

பொருளாதாரம்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் முதலே தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாக சென்னை விளங்கி வருகிறது. பல இந்திய நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், தமிழகத்தின் தலைநகராகவும் சென்னை விளங்குவதால், பல தேசிய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் சென்னையில் உள்ளன. 1990களிலிருந்து, சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.
தென் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. தரமணியில் உள்ள டைடல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். மேலும் சில தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் நகரங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது.

மக்கள்
சென்னையின் மக்கள் தொகை சுமார் 7.45 மில்லியன் ஆகும். ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் விகிதம் உள்ளனர். கல்வியறிவு விகிதம் 80.14%. நகரின் 25 விழுக்காடு மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர். சென்னையில் தமிழ் மொழி பேசுவோரே பெரும்பான்மை, இதைத்தவிர ஆங்கிலம், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, மார்வாரி, வங்காளி, பஞ்சாபி போன்ற மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. அனால் தமிழிற்கு அடுத்த படியாக, இந்திய மொழிகளில், தெலுங்கே அதிக அளவில் பேசப்படுகிறது.

கலாச்சாரம்
சென்னையில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாக சென்னையின் கலாசாரம் விளங்குகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது. சென்னையில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் முழுவதும் இசைத் திருவிழா இசை ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தினந்தோறும் சென்னையின் பல இடங்களில் கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. சென்னை அடையாறில் உள்ள கலாக்ஷேத்ராவில் உலகின் பல நாடுகளை சேர்ந்தவர்களும் வந்து பரதநாட்டியமும் மற்ற பாரம்பரியக் கலைகளும் பயின்று செல்கின்றனர்.

சென்னையில் கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் திரைப்படத் துறை இந்தியாவில் பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக மிகப் பெரியது. இட்லி, வடை, தோசை போன்ற தென்னிந்திய உணவு வகைகளும், சமீபத்தில் மேற்கத்திய நாகரிகத்தின் பாதிப்பால் பீட்ஸா, பர்கர் போன்ற உணவு வகைகளும் சென்னையில் பிரபலமாய் உள்ளன.

சென்னையில் மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மற்றும் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் போன்ற பல பழங்கால கோயில்கள் உள்ளன. புனித ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் கட்டிடம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் போன்று ஆங்கிலேயரின் பாதிப்பில் உருவான கட்டடங்களையும் அதிகமாகக் காணலாம். சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியால் பல நவீன கட்டடங்கள் பெருகி வருகின்றன.

போக்குவரத்து
சென்னை விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும் தெற்கு, மற்றும் தென்கிழக்காசியா, வளைகுடா நாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கு விமானப் போக்குவரத்து உண்டு. சென்னை விமான நிலையம், இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் சரக்கு விமான நிலையமாகும்.
சென்னை துறைமுகம் இந்தியாவில் முக்கிய துறைமுகங்களுள் ஒன்று. மேலும் சென்னையின் வடக்கில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் நிலக்கரி, தாதுக்கள் போன்ற பொருட்களின் போக்குவரத்து நடைபெறுகிறது.

சென்னையில் பறக்கும் ரயில் நிலையம், சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை எழும்பூர் ஆகியவை சென்னையின் இரு முக்கிய ரயில் நிலையங்கள். சென்னை சென்ட்ரல், சென்னையின் வடக்கு, மற்றும் மேற்குப்பகுதிகளுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. சென்னை எழும்பூர், மற்ற தமிழக நகரங்களுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. சென்னை புறநகர் இருப்புவழி மூன்று மார்க்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - தாம்பரம் ஆகியவை. இவை தவிர சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

சென்னை நகரிலிருந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்கு சென்று வர சாலை வசதிகள் உள்ளன. ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் சென்னை, கொல்கத்தா, பெங்களூர், திருச்சி, பாண்டிச்சேரி, திருவள்ளூர் ஆகிய நகரங்களுடன் இணைக்கின்றன. சென்னை கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும்.

கல்வி
சென்னையில் உள்ள ஐ.ஐ.டியும் அதன் எதிரில் உள்ள அண்ணா பல்கலைக்கழகமும், இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுள் சிலவாகும். இவை தவிர பல தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ளன. வருடந்தோறும் பள்ளி இறுதித் தேர்வுகளில் இந்தியாவிலேயே சென்னை மாணாக்கர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதைக் காணலாம்.

சென்னையில் உள்ள கன்னிமரா பொது நூலகம் தேசிய களஞ்சிய நூலகங்களுள் ஒன்று. இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகம் ஆகும். இதன் அடிக்கல் 1890-இல் நாட்டப்பட்டு, 1896-இல் துவங்கி வைக்கப்பட்டது; அப்போதைய மதறாஸ் மாநிலத்தின் கவர்னரான கன்னிமரா பிரபுவின் பெயர் இந்நூலகத்திற்கு சூட்டப்பட்டது. செப்டம்பர் 15, 2010 அன்று அண்ணா நூற்றாண்டு நூலகம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது; 3.75 இலட்சம் சதுர அடிப் பரப்பில் ஏறத்தாழ 180 கோடி செலவில் கட்டப்பட்டது.

விளையாட்டு
சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் : சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் 50,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இந்திய கிரிக்கெட் அணி இங்கு தான் முதன் முதலாக டெஸ்ட் போட்டியை வென்றது. ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள கெம்பிளாஸ்ட் கிரிக்கெட் மைதானம் மற்றொரு முக்கிய மைதானம்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் அரங்கத்தில் வருடந்தோறும் ஜனவரி மாதம் சர்வதேச ஏ.டி.பி பந்தயமான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபறுகின்றன. விஜய் அமிர்தராஜ், இராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன் போன்று சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்த பல இந்திய ஆட்டக்காரர்கள் சென்னையைச் சேர்ந்தவர்களே.

ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் கால்பந்து, தடகளப்போட்டிகள் போன்றவை நடைபெறுகின்றன. இதன் வளாகத்தில் உள்ள உள்ளக விளையாட்டரங்கில் கூடைப்பந்து, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் போன்ற போட்டிகள் நடத்தும் வசதிகள் உள்ளன. 1996 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது.

எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம் 4000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இது செயற்கை தரை கொண்டது. 1995ஆம் ஆண்டு இங்கு சாம்பியன் கோப்பை பந்தயத்தொடர் நடந்தது. மூன்று கோல்ஃப் விளையாடும் இடங்கள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் மோட்டர் பந்தய போட்டிகள் நடைபெறும் களம் உள்ளது.

உயிரியல் பூங்காக்கள்
கிண்டியில் உள்ள உயிரியல் பூங்காவில் மான்கள், பாம்புகள், ஆமைகள் ஆகியவை உள்ளன. ஆளுனர் வசிக்கும் ராஜ் பவனிலும், அதை ஒட்டியுள்ள ஐ.ஐ.டி வளாகத்திலும் குரங்குகளும் மான்களும் துள்ளி விளையாடுவதைக் காணலாம். வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் சுமார் 80 மிருக வகைகள் உள்ளன. சென்னையின் தெற்கில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதலைப்பண்ணை உள்ளது. இங்கு முதலைகள், ஆமைகள், பாம்புகள் ஆகியவை வளர்க்கப்படுவதுடன் ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.

கும்பக்கரை நீர்வீழ்ச்சி

கும்பக்கரை நீர்வீழ்ச்சி

 

தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ளது கும்பக்கரை நீர்வீழ்ச்சி. தேனி மாவட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் இதுவும்

ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்நீர்வீழ்ச்சி கொடைக்கானல் அருகில் உள்ள பாம்பாறு பகுதியில் தோன்றி பாறைகளிடையே

பாய்ந்து கீழே நீர்வீழ்ச்சியாக விழுகிறது. இந்த நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையாக உள்ளது. மழைக் காலத்தில் நீர்வீழ்ச்சியில்

விழும் தண்ணீர் அதிகமாகவும், கோடை காலத்தில் குறைவாகவும் இருக்கிறது. நீரின் வேகம் அதிகமாகும் போது அருவியில் குளிப்பதற்குத் தடை

விதிக்கப்படுகிறது.

நீர்வீழ்ச்சியின் பகுதிகள்

கும்பக்கரை நீர்வீழ்ச்சிப் பகுதியில் இந்த நீர்வீழ்ச்சி தவிர தண்ணீர் செல்லும் தடங்களிலுள்ள வழுக்குப் பாறை, யானைக் கெஜம், உரல் கெஜம், பாம்பு கெஜம்

என்று அழைக்கப்படும் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நீராடி மகிழ்கின்றனர். இந்த தண்ணீர் தடப்பகுதிகளில் சில இடங்களில் குளிப்பது ஆபத்தானது என்று

தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகரிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இந்த நீர்வீழ்ச்சிக்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் தமிழ்நாடு அரசுப்

போக்குவரத்துக் கழகம் பேருந்துகளை இயக்குகிறது.

காளிகேசம் அருவி

காளிகேசம் அருவி

 

காளிகேசம் அருவி தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் அருவியாகும். இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இது மேற்கு தொடர்ச்சி மலையின் நீருற்றுகளிலிருந்து பெருக்கெடுத்து வரும் ஆறு பூதப்பாண்டியிலிருந்து 15கிமீ தொலைவில் அருவியாக பாய்கின்றது. இந்த ஆற்றில் கோடை காலத்திலும் தண்ணீர் வற்றுவதில்லை. இவ்வருவியின் அருகில் போட்டாணி குகை என்றழைக்கப்படும் குகை அமைந்துள்ளது. இதை தற்போது சுற்றுலா பயணிகள் சமையல் செய்ய பயன்படுத்துகின்றனர்.

குரங்கு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்

குரங்கு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்

 

 பொள்ளாச்சி : மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால் குரங்கு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. அதில் குளிக்க அனுமதி எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் உள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது குரங்கு அருவி.உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்வார்கள். இதனால் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இந்த அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும்.

 கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து குறைவாகவே இருந்தது. அந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் தலையை நனைத்து சென்றனர்.  தொடர் வறட்சி காரணமாக மார்ச் இறுதியில் அருவி தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. அதன்பின் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக குறைந்த அளவு தண்ணீர் கொட்டியது. இந்நிலையில் கடந்த சிலநாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. வால்பாறை, பரம்பிக்குளம், டாப்சிலிப் பகுதியில் தொடர்ந்து மழைபெய்து கொண்டிருக்கின்றது. இதனால் குரங்கு அருவியில் தண்ணீர் கொட்ட துவங்கியுள்ளது.

இந்நிலையில் புலிகள் காப்பக பகுதியில் சுற்றுலாவுக்கு விதித்திருந்த தடையை நீக்கி உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இருந்தாலும், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சுற்றுலா பகுதிகளுக்கு, சுற்றலா பயணிகளுக்கு அனுமதி குறித்து இன்னும் அறிவிக்கப்பட வில்லை. உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து,  சுற்றுலா பயணிகள் பலர் நேற்று குரங்கு அருவிக்கு வந்தனர்.  ஆனால் அவர்களை வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. வால்பாறையிலிருந்து வாகனங்களில் பொள்ளாச்சி நோக்கி வருவோர் குரங்கு அருவியில் கொட்டும்  அழகை ரசித்து செல்கின்றனர். குரங்கு அருவிக்கு செல்ல அனுமதி விரைந்து வழங்கப்பட வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

கொடைக்கானல் அருவி

கொடைக்கானல் அருவி

 

கொடைக்கானல் என்னும் சொல், காட்டின் முடிவு, கொடிகளின் காடு, கோடை கால காடு, காட்டின் அன்பளிப்பு என பல பொருள் தரும். இயற்கை இன்னும் இயற்கையாகவே இருக்கும் இடம் கொடைக்கானல். மரங்களுக்கு அடைக்கலம் தரும் மலைகள்; இதுவரை பார்த்திராத பறவைகள்; என ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம் தரும் இடம். மேற்குத் தொடர்ச்சி மலையில், கடல்மட்டத்திலிருந்து 22 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 2133 மீட்டர் (6998அடி) உயரத்தில் உள்ளது கொடைக்கானல். மலைகளின் இளவரசி என்றும் இதனை அழைப்பவர்கள் உண்டு.

சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் :
** பிரையண்ட் பார்க்
** தொலைநோக்கிக் காப்பகம் மற்றும் கோக்கர்ஸ் வாக்
** தூண் பாறைகள்
** குணா குகைகள்
** தொப்பித் தூக்கிப் பாறைகள்
** மதி கெட்டான் சோலை
** பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி)
** குறிஞ்சி ஆண்டவர் கோயில்
** செட்டியார் பூங்கா
** படகுத் துறை
** சில்வர் நீர்வீழ்ச்சி

கொடைக்கானல் ஏரி

ஏரியில் படகில் மிதந்தபடி ஏகாந்தமாய் பயணிப்பதில் கிடைக்கும் ஆனந்தமே தனிதான். இயற்கையின் அழகையெல்லாம் கொட்டி வைத்திருக்கும் ஏரியழகின் ரம்மியம் தனித்துவமானது. கொடைக்கானலின் மையப்பகுதியே இந்த ஏரிதான். இதன் சுற்றுச் சாலை 5 கி.மீ. ஏரியின் அளவு 24 ஹெக்டேர் மதுரை மாவட்டத்தின் ஆட்சியராகப் பணியாற்றிய சர் வேரி ஹென்றி லெவிஞ்சி (1819-1885) என்பவர்தான் இந்த ஏரியை திருத்தி அழகுப்படுத்தினார். அவரது ஆட்சிக் காலத்தில்தான் ஏரியில் மீன்கள் விடப்பட்டன. முதன் முதலில் 1932 இல்தான் சுற்றுலாப் பயணிகளுக்கான சேவை தொடங்கியது. இப்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் படகுக் குழாமும் செயல்படுகிறது.

கரடிச் சோலை அருவி

கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து சென்று களைத்துப் போய்விட்டீர்களா? அதோ தெரியுது பாருங்கள் அதுதான் கரடிச்சோலை அருவி. இங்கு வந்து கரடிகள் நீர் அருந்தியதால் சோலையுடன் கரடியும ஒட்டிக்கொண்டது. கொடைக்கானல் ஏரியிலிருந்து 2 கி.மீ. தூரமும் பேருந்து நிலையத்திலிருந்து 1.6 கி.மீ தூரத்திலும் கரடிச் சோலை உள்ளது.

ஃபேரி அருவி

மலையில் அருவி இல்லாமலா! இந்த அழகுமிகுந்த அருவி பயணிகளுக்கு உவகைதரும் உல்லாச இடம். கொடைக்கானல் ஏரியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இந்த நீரருவி அமைந்துள்ளது.

பம்பர் அருவி

பம்பர் அருவியிலிருந்து கீழ்ப்பாய்ந்து வரிசையான பாறைகள் வழியே நெளிந்து பொங்கிப் பெருகும் தண்ணீரின் அழகு வசீகரத்தின் உச்சகட்டம். இந்த அருவிக்கு கிராண்ட் கேஸ்கட் என்றொரு பெயரும் உண்டு. பம்பர் ஹவுஸ் பின்புற வழியில் தொலைவாக உள்ள ஒரு செங்குத்துச் சரிவின் வழியாக இந்த அழகிய அருவியை அடையலாம். கொடைக்கானலிலிருந்து நீங்கள் 4 கி.மீ. பயணிக்கத் துணிந்தவர் என்றால் பம்பர் அருவியை அடையலாம்.

வெள்ளியருவி

கொடைக்கானல் ஏரி வழிந்தால் உருவாகும் அருவி இது. ஆர்வம் உள்ளவர்கள் வெள்ளியருவியில் குளித்து மகிழலாம். இதைக்காண ஏரியிலிருந்து 8 கி.மீ. செல்ல வேண்டும்.

தலையாறு அருவி

கொடைக்கானலுக்குச் செல்லும் மலைத்தொடர் சாலையில் 13 ஆவது கி.மீட்டரில் இந்த அருவி பாய்கிறது. இதற்கு எலிவால் அருவி என்ற பெயரும் உண்டு. இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றான இதன் உயரம் 975 அடி. அவ்வளவு உயரத்திலிருந்து நீர் கொட்டும் அழகை என்னவென்று சொல்வீர்கள்?

குட்லாடம்பட்டி அருவி

குட்லாடம்பட்டி அருவி

 

குட்லாடம்பட்டி அருவி, மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த குட்லாடம்பட்டி கிராமத்திற்க்கு வடக்கே சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சிறுமலையில் மழை பெய்யும் காலங்களில், இந்த அருவியில் தண்ணீர் கொட்டும். இதுபோன்ற நேரங்களில் சுற்றுலா பயணிகள் ஏராளமான அளவில் இங்கு குவிகின்றனர். இந்த அருவியில் வருடத்தில் ஐந்து முதல் எட்டு மாதங்கள் வரை தண்ணீர் வரத்து இருக்கும். வாரம் முழுவதும் மக்கள் வந்தாலும்கூட சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

கோவைக் குற்றாலம்

கோவைக் குற்றாலம்

 

கோவைக் குற்றாலம் சிறுவாணி நதியில் அமைந்துள்ள ஓர் அருவியாகும். கோவையிலிருந்து 37 கிமீ தொலைவில் அடர்ந்த கானகத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழிலுக்கும் தெளிவான நீரோட்டத்திற்கும் புகழ் பெற்றது. பாதுகாக்கப்பட்ட கானகப்பகுதியில் அமைந்துள்ளதால் மாலை 5 மணிக்குப் பிறகு பயணிகளுக்கு அனுமதி கிடையாது. வெயில் காலங்களில் இப்பகுதி நல்ல குளிர்ச்சியான காற்றையும், குளிர்ந்த நீரையும் தருவதால் பொதுமக்கள் சுற்றுலா மேற்கொள்ள ஏற்றதாக விளங்குகிறது. இங்கு மலையில் மிக உயரத்திலிருந்து அதிக அழுத்தத்துடன் நீர் விழுவதால் மக்கள் இங்கு அதிக கவனமுடன் குளிக்க வேண்டியுள்ளது.

இந்த அருவி காருண்யா பல்கலைக்கழகம் காருண்யா பல்கலைக்கழகத்திலிருந்து 6 கி. மீ தொலைவில் உள்ளது. சடிவயல் சோதனைச்சாவடியில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவையிலிருந்து சிறுவாணி மற்றும் சடிவயல் செல்லும் பேருந்துகள் இங்கு செல்கின்றன. அருகாமையிலுள்ள பிற சுற்றுலாத்தலங்கள் : பரம்பிக்குளம், ஆழியார், சோலையார், பாலார் மற்றும் ஆனமலை வனச்சரகம்.

உலக்கை அருவி

உலக்கை அருவி

 

உலக்கை அருவி தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் இயற்கை அருவியாகும். இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமுமாகும். கன்னியாகுமரியில் இருந்து ஏறத்தாழ 40 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது. தோவாளை தாலுக்காவிலுள்ள அழகியபாண்டிபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள இந்த அருவியில் எல்லா மாதமும் நீர் வந்து கொண்டு இருக்கும். காடுகள் வழியாகச் செல்லும் ஒதுக்கப்பட்ட பாதைகள் மூலமே இந்த அருவியை அடைய முடியும். அருவியில் குளிப்பதற்கும் இயற்கை அழகை ரசிப்பதற்குமாகவே பல சுற்றுலாப் பயணிகள் இங்கே வருகின்றனர்.

அருவியை சுற்றிப் பசுமையான காடுகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும். கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பசுமை மாறா காடுகளும் மலைகளும் வற்றாத ஓடைகளும் காணப்படுகின்றன .இந்நீர்வீழ்ச்சி மலை அடிவாரத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது, எனவே உலக்கை அருவிக்கு செல்வதென்பது ஒரு சிறந்த மலையேற்ற பயிற்சி செய்வது போன்றதாகும். அருவித் தண்ணீர் வரும் இடம் பார்ப்பதற்கு ஓர் உலக்கை போல் இருப்பதால் இதற்கு உலக்கை அருவி எனப் பெயர் வந்தது என்பர்.

ஆகாயகங்கை அருவி

ஆகாயகங்கை அருவி

 

ஆகாயகங்கை அருவி இந்தியாவின் தென் மாநிலமான தமிழ் நாட்டில், நாமக்கல்லுக்கு அருகில் உள்ள கொல்லி மலையிலுள்ள அய்யாறு ஆற்றின் மீது அமைந்துள்ளது.

கொல்லி மலையில் அமைந்துள்ள அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் ஆகாயகங்கை அருவி உள்ளது. இங்கு செல்ல தமிழக அரசின் சுற்றுலா துறை படிக்கட்டுக்கள் அமைத்துள்ளது.

அருவியிலிருந்து வெளிவரும் நீரானது கிழக்கு நோக்கி பாய்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் புளியஞ்சோலை பகுதியை அடைகிறது.
இந்த மலை 2000 மீட்டர் உயரம் கொண்டதாகும். இந்த மலைக்கு செல்வதற்கு நாமக்கலில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் இங்கு ஒரு உயிரியல் பூங்காவும், படகு சவாரியும் உள்ளன.

முக்கிய இடங்கள் விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்


முக்கிய இடங்கள்

விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள் 

 

விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாவட்டமாகும். செஞ்சிக் கோட்டை, கல்வராயன் மலை ஆகியவை விழுப்புரத்துக்கு அருகில் உள்ள சுற்றுலா தளங்களாகும். திருக்கோயிலூர், திருவக்கரை முதலியவை அருகில் உள்ள புகழ்பெற்ற வணக்கத் தளங்கள் ஆகும். தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து பிரிந்த மாவட்டம் விழுப்புரம். மயிலம் முருகன் கோயில், திருநங்கைகள் கூடும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில், சிங்கவரம் ஒற்றை கற்கோயில், செஞ்சிக்கோட்டை, சடையப்ப வள்ளல் பிறந்த திருவெண்ணை நல்லூர், ஆழ்வார்கள் பாடிய உலகளந்த பெருமாள் கோயில் உள்ள திருக்கோயிலூர், அழகிய மரக்காணம் கடற்கரை, மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் எனப் பார்க்க வேண்டிய சிறப்பிடங்களின் பட்டியல் நீள்கிறது.

திருக்கோயிலூர்

'அன்பே தகளியாக;ஆர்வமே நெய்யாக' என்ற பெரியாழ்வாரின் பாடல் பெற்ற தலம், திருக்கோயிலூர். முதலாழ்வார் மூவர் உலகளந்த பெருமாளைப் பாடிப் பரவியுள்ளனர். இங்குப் பெருமாளுடன் புஷ்பவல்லித் தாயாரும் கோயில் கொண்டுள்ளார். இது தவிர மற்றொரு சுற்றுலாத் தலமும் இருக்கிறது. பெண்ணையாற்றின் நடுவே உள்ள கபிலர் குன்றில் சங்க இலக்கியக் கவிஞர் கபிலர் கடைசிக் காலத்தில் தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. மாநில தொல்பொருள் ஆய்வுத் துறையினரின் பாதுகாப்பில் இக்கோயில் இருக்கிறது. கடலூர் - சித்தூர் பெருவழிச் சாலையில் விழுப்புரத்திலிருந்து 37 கி.மீ. தொலைவில் உலகளந்த பெருமாள் தரிசனம் கிடைக்கும்.

மேல்மலையனூர்

சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான இடம் இது என்று ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணி கூறுகிறது. மேல் மலையனூர் சுடுகாட்டில் வீற்றிருக்கும் அங்காளம்மனிடம் தோஷம் பீடித்த சிவன் பிச்சைக்காரனாகப் பிச்சை பெற்று தோஷம் நிவர்த்தியானதாகக் கூறப்படுகிறது. இதைக் குறிக்கும் மயானக் கொள்ளைத் திருவிழா புகழ்பெற்றது. மாசி அமாவாசையில் நடத்தப்படும் இத்திருவிழா, பத்து நாட்கள் நிகழும். இங்கு அமாவாசை இரவில் தங்கினால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேல்மலையனூர் மகா ஏரியிலிருந்து பிறக்கும் சங்கராபரணி ஆறு, செஞ்சி வழியாகச் சென்று பாண்டிச்சேரி கடலில் கலக்கிறது. ஏரிக்கரையிலுள்ள துர்க்கை அம்மனும், சர்க்கரை விநாயகர் கோயிலும் பிரசிசத்தி பெற்றவை.

திருவெண்ணைநல்லூர்

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்களே. அந்தக் கம்பனை ஆதரித்துப் போற்றிய சடையப்ப வள்ளல் பிறந்த ஊர். பழமை வாய்ந்த சிவன் கோயில் ஒன்று இங்குள்ளது. விழுப்புரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் திருக்கோயிலூர் சாலையில் அமைந்துள்ளது திருவெண்ணைநல்லூர்.

திருவக்கரை

திருவக்கரை என்றதும் கல்மரங்கள் ஞாபகத்திற்கு வரும். இங்குள்ள சோழர்கால சிவன் கோயில் புகழ்பெற்றது. பௌர்ணமி தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூடும் கோயில். இக்கிராமத்தில் புராதன காலத்தின் சாட்சியாகக் கல்மரங்கள் காணக் கிடைக்கின்றன.

மண்டகப்பட்டு

மக்களை ஆண்ட மன்னர்களின் கலை ஈடுபாட்டிற்கு அளவேயில்லை. காலத்தால் அழியாத சிற்பக்கலை உன்னதங்களாகக் காட்சிக்கு கவரி வீசுகின்றன குடைவரைக் கோயில்கள். மகேந்திரவர்ம பல்லவன் உருவாக்கிய புகழ்பெற்ற குடைவரைக் கோயில் இங்குள்ளது. விழுப்புரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், செஞ்சியிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் தொல்பொருள் துறையினரின் பாதுகாப்பில் இருக்கிறது.

எண்ணாயிரம்

இந்த ஊரில் 8000 சமணர்கள் வாழ்ந்துள்ளனர். இதனால் 'எண்ணாயிரம்' என்ற பெயர் ஊருக்கு வந்திருக்கிறது. மாமன்னன் இராஜராஜ சோழன் கட்டிய நரசிம்மஸ்வாமி கோயில் இங்குள்ளது. மற்றொரு நரசிம்மப் பெருமாள் கோயிலையும் இங்கே தரிசிக்கலாம். பெருமாள் பக்தர்கள் பார்க்க வேண்டிய திருத்தலம்.

மயிலம்

ஒரு சிறிய மலைக்குன்றில் எழுந்தருளி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு நிகழும் பங்குனி உத்திரத் திருவிழாவைக் காண தமிழகம் முழுவதுமிருந்து பக்தி சிரத்தையுடன் பக்தர்கள் கூடுவார்கள். விழுப்புரத்திலிருந்து 35 கி.மீ. தொலைவில் பாண்டிச்சரி - திண்டிவனம் சாலையில் அமைந்துள்ளது மனங்கவர்ந்த மயிலம்.

மேல்நாரியப்பனூர் தேவாலயம்

புனித அந்தோணியாரின் சீடரான குஞ்சான் என்பவர் கட்டிய மிகவும் பழமை வாய்ந்த தேவாலயம் இது. சின்ன சேலத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் சென்னை - சேலம் நெடுஞ்சாலையில் மேல் நாரியப்பனூர் தேவாயலம் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறது.

.மேல் சித்தாமூர்

தமிழ்நாட்டில் வாழ்ந்த திகம்பர சாமிகளின் தலைமையகம். ைகாஞ்சி என்பவர் தலைமைக் குருவாகத் திகழ்ந்துள்ளார். இங்குள்ள இரண்டு சமணக் கோயில்கள் ஒன்றில் பர்சவானந்தரும், மற்றொன்றில் மயிலானந்தரும் வீற்றுள்ளனர். மயிலானந்தர் ஆலயத்தில் உள்ள பெரிய கற்பாறையில் பஹீபாலி, பர்சவானந்தர், ஆதிநாதர், மஹhவீரர் மற்றும் அம்பிகா யஷீ ஆகிய சிற்பங்கள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன. இந்தச் சமண ஆலயங்கள் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. இந்த நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டவை. திண்டிவனத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் மேல் சித்தாமூர் அமைந்துள்ளது.

கூவாகம்

கூத்தாண்டவர் கோயில். இந்தியா முழுவதும் வாழும் திருநங்கைகள் வழிபடும் கோயில். வருடத்திற்கு ஒருநாள் கூடி மகிழும் கோயில். வருடந்தோறும் 15 நாள் சித்திரைத் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. அந்த நாட்களில் காட்சி ஊடகங்களின் கவனமெல்லாம் அங்கே இருக்கும். இத்திருவிழாவிற்குப் பின்னணியில் மகாபாரதக் கதை அடிப்படையாக இருக்கிறது. தேசமெங்கும் பரவிக் கிடக்கும் திருநங்கைகள் கூத்தாண்டவர் கோயிலில் கூடி அரவாணை எண்ணி தாலிகட்டிக் கொள்கிறார்கள். அடுத்த நாளே தாலியறுப்புச் சடங்கையும் நடத்துகிறார்கள். இதிகாசம், போர், வன்முறை, நம்பிக்கை துரோகம், திருவுருக்கள் ஆகியவற்றை பகடி செய்யும் மூன்றாம் பாலினத்தின் சமூக விமர்சனமாகப் பார்க்கிறார்கள் நவீன சமுகவியலாளர்கள்.

திருநறுங்கொண்டை

சமணம் செழித்திருந்த ஊர். இந்தச் சின்னஞ்சிறு கிராமத்தில் ஒரு சமண குகையும், பர்சவநாதர் மற்றும் சந்திரபிரபா ஆகிய இருவரும் வீற்றிருக்கும் சமண ஆலயங்களும் உள்ளன. இங்குள்ள குகை ஒரு காலத்தில் வீரசங்கத் துறவிகள் தங்கிய துறவி மடமாக இருந்தது. இக்கோயிலில் மிகப்பெரிய அளவில் வெண்கலச் சிலைகளின் தொகுப்பைக் காண முடியும். இங்கே ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் நிகழும் ஆண்டுத் திருவிழாவிற்குத் தமிழகம் முழுவதிலுமிருந்து சமணர்கள் கூடுவார்கள். உளுந்தூர் பேட்டையிலிருந்து வடமேற்கே 16 கி.மீ. சென்றால், இந்தச் சமண கிராமத்தை அடையலாம்.

அவலூர்பேட்டை

முருகப் பெருமான் கோயில் கொண்டுள்ள சிற்றூர். இங்கு நிகழும் பங்குனி உத்திரத் திருவிழா வெகு விமரிசையானது. மேல்மலையனூரிலிருந்து பத்தாவது கி.மீட்டரில் அவலூர்பேட்டை அமைந்துள்ளது.

எசலம்

சோழமன்னன் முதலாம் இராஜேந்திர சோழன் கட்டிய கோயில். இங்கு இராமநாதேஸ்வரர் கோயில் கொண்டுள்ளார். இம்மாமன்னனைப் பற்றி வடமொழி கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டு சோழ அரச இலச்சினையும் பொறிக்கப்பட்டுள்ளது.

கமலக்கண்ணியம்மன் கோயில்

இதுவொரு நாட்டார் கோயில். இங்கு பலிபீடம் ஒன்றும் மற்றும் நாயக்கர் கால சுவர் ஓவியங்களும் உள்ளன. செஞ்சி ராஜகிரி மலைக்கோட்டை வழியில் இந்த சின்னஞ்சிறு கோயில் உள்ளது.

பச்சையம்மன் கோயில்

நீங்கள் நிற்கும் இந்தக் கோயில், சித்தர்கள் வழிபட்ட திருக்கோயில். இதன் பின்புறமுள்ள பச்சை மலை 7 ஜடாமுனிகளின் உருவங்களைப் போலக் காட்சியளிக்கிறது. கொல்லிமலையில்கூட கிடைக்காத அரிய மூலிகைகள் இங்குண்டு. இம்மலையின் உச்சியில் விக்கிரகங்களே இல்லாத விந்தைக் கோயில் ஒன்றுள்ளது.

குளங்கள் (செஞ்சிக் கோட்டை)

அனுமன் கோயிலுக்குச் செல்லும் வழியில் கீழ்க்கோட்டைக்கு வெளியே உள்ள கோயில் குளங்களும், கண்ணைக் கவரும் அழகிய வடிவங்களும் உள்ளன. இவற்றில் சக்கரகுளம், செட்டிகுளம் ஆகிய இரு குளங்களும் புகழ்பெற்றவை. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் மராட்டியர்கள் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் இக்குளம் வெட்டப்பட்டுள்ளது. இக்குளத்தின் வடபுறம் உள்ள சிதைச் சதுக்கம் ராஜாதேசிங்கினுடையது என்று நம்பப்படுகிறது.

மரக்காணம் கடற்கரை

உப்பு விளையும் பூமி உப்பிட்ட ஊரை உள்ளளவும் நினைக்க வேண்டும். புதுவையிலிருந்து 22 கி.மீ. தொலைவில், வானூர் வட்டத்தில் கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ளது. மரக்காணம் கடற்கரையும், மீனவர் குடியிருப்பும் கொள்ளை அழகு.

சிங்கவரம்

குடைவரைக் கோயில், மாவீரன் ராஜாதேசிங்கு வழிபட்ட ரெங்கநாதர் இக்குன்றின் உச்சியில் கோயில் கொண்டுள்ளார். குடைவரைக்கோயில் தனிச்சிறப்பான தென்னிந்தியக் கோயில் கட்டடக் கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதரைவிட, இந்த ரெங்கநாதர் நீளமானவர் என்று கதப்படுகிறது. சிங்கவரம் ரெங்கநாதர் 24 அடி நீளத்திற்கு பள்ளி கொண்டுள்ளார். அவரும், பள்ளியறையும் ஒரே கல்லில் உருவானவை. மகேந்திரவர்ம பல்லவனின் கலை ஆர்வத்தில் விளைந்த அற்புதம் இது.

தளவானூர்: - சத்ரு மல்லேஸ்வரம்

தளவானூர் குடைவரைக் கோயிலும் மகேந்திர வர்மன் கல்லில் உருவாக்கிய அதிசயம் தான். இந்தக் கோயிலில் சிற்பங்கள் மற்றும் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன. பார்த்துப் பரவசம் கொள்ள வேண்டிய கலை செழித்த கற்கோயில் இது.

திருநாதர் குன்று

இரண்டு சமணக் குகைகள் பெரிய கற்பாளம். அதில் ஒரு சேர செதுக்கப்பட்டுள்ள 24 தீர்த்தங்கரர்களின் திருவுருக்களும் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு பாணியில் அமைந்துள்ளன. ஒற்றை இணைப்பாகத்தில் உள்ள 24 தீர்த்தங்கரர்களையும் இங்கு மட்டும் காண முடியும். இதனருகே கிடக்கும் பாறையில்தான் சமணத் துறவி சந்திரநந்தியார் 57 நாட்கள் உண்ணாநோன்பு இருந்து உயிர் நீத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. செஞ்சி நகரிலிருந்து 2 கி.மீ. பயணித்தால் மேற்குப் பக்கத்தில் தெரியுது பாருங்கள். அதுதான் திருநாதர் குன்று.

திருவாமாத்தூர்

அபிராமேஸ்வரர் வீற்றிருக்கும் சோழர் காலத்து பழமையான கோயில் இங்குள்ளது. 1500 ஆண்டுகால பழமை. இந்தக் கோயில் இராஜராஜ சோழன் மற்றும் சீரங்கதேவ மஹhராயர் ஆகிய இருவருக்கும் இடைப்பட்ட காலத்தில் பல கைகள் மாறியுள்ளதாகக் தெரிகிறது. பழமையின் வேர்களோடிய இக்கோயில், அம்மன் முத்தாம்பிகை.

தும்பூர்

நாகம்மன் கோயில் கொண்டுள்ள சிற்றூர் தும்பூர். இதுவொரு பழமையான கோயில். 1450 ஆண்டு புராதனமானது.

செஞ்சிக் கோட்டை

சப்த கன்னிகளில் ஒன்றாக திகழும் செஞ்சியம்மனின் பெயரால் விளங்கும் இக்கோட்டை சுமார் 700 ஆண்டுகள் பழமையானது. இக்கோட்டை ஆனந்தக் கோனாரால் அமைக்கப்பட்டு பல அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்து பின்னர் பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் வசம் இருந்தது. தற்போது இக்கோட்டை மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறையின் பராமரிப்பில் உள்ளது. கிருஷ்ணகிரி, சந்திரகிரி மற்றும் ராஜகிரி ஆகிய மூன்று சீரற்ற மலைக்குன்றுகளை மாபெரும் செஞ்சிக்கோட்டையின் மதில்கள் அரவணைத்துக் செல்கின்றன.ராஜகிரி மலை மட்டுமே (800 அடி உயரம்) தனியாக எவற்றோடும் பொருந்தாமல் நிற்கும் குன்று. தற்போது கட்டப்பட்ட ஒரு பாலம் 20 மீ வரை ஆழமுள்ள சுனையை இணைக்கிறது.

போர்வீரர் தங்குமிடங்கள் குதிரைலாயங்கள்

நிகழ்காலத்தில்தான் நாம் இருக்கிறோமா? என்று வியந்து போவீர்கள். உயரம் குறைந்த கவிகை மாடங்கள். வளைவு வளைவான நுழைவாயில்கள், தனியறைகள், குதிரைகள்இளைப்பாறவும் போர்வீரர்கள் தங்கவும் கட்டப்பட்டுள்ளன. கல்யாண மகாலுக்கு அருகிலுள்ள இந்த கவின்மிகு அறைகளில் தொல்பொருள் ஆய்வுத்துறையின் பயிற்சி முகாம் அமைக்ப்பட்டுள்ளது.

ஆனைக்குளம்

போர் வீரர் குடியிருப்பு வரிசைக்கு தெற்கில் உள்ள யானைக்குளம் மாடங்கள் அழகின் ரகசியங்கள் செஞ்சிக் கோட்டைக்குப் போய் யானைக் குளம் பார்க்காமல் திரும்பி விடாதீர்கள்.

சதத் உல்லாக்கான் மசூதி

சதத் உல்லாக்கான் எழுப்பிய மசூதி. தேசிங்குராஜனை போரில் வென்று கோட்டையைக் கைப்பற்றியதன் நினைவாக கட்டப்பட்டது. கி.பி. 1717 - 18 இல் எழுப்பப்பட்டதாகப் பார்சிய கல்வெட்டு தெரிவிக்கிறது.

நெற்களஞ்சியம் - உடற்பயிற்சிக்கூடம்

விஜய நகர கட்டடக் கலை பாணியில் அமைந்த செஞ்சிக் கோட்டையின் பெருமைமிகு கட்டடங்கள் ராஜகிரி மலையின் கீழ் கல்யாண மகாலுக்கு அருகிலுள்ள நெற்களஞ்சியம் பிரமாண்டமானது. தாராளமான நுழைவாயிற் பகுதி. இதன் சுவர்கள் மூன்று மீட்டர். பீப்பாய் போன்ற அரைவட்ட கவிகை மாடத்தை நெற்களஞ்சியத்தின் வடகிழக்கில் காணமுடியும். உடற்பயிற்சி செய்யவும் நெற்களஞ்சியக் கட்டடம் பயன்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

வெங்கட்ரமணா கோயில்

பரந்து விரிந்துள்ள கோயில், இங்குள்ள முனைப்பான தூண்களும், அழகுமிகு சிற்பங்களும் நாயக்கர்களின் அழகியல் தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. அந்தக் கோயிலில் நின்று பார்க்கும்போது, அழகின் மகத்துவம் உங்களுக்குப் புரியும்.

வேணு கோபாலஸ்வாமி கோயில்

கலை எழில் மிகுந்த சிற்பங்கள் நிறைந்த கோயில் இது. கிருஷ்ணன் புல்லாங்குழல் இசைப்பது, அவரை கயிறு கட்டி இழுப்பது போன்ற சிற்பங்கள் இங்குள்ளன. இந்தக் கோயிலின் முகப்பு வாயிலில் மிகச்சிறந்த பூச்சு வேலையோடு மெருகேற்றப்பட்ட மென்மையான தளம் உள்ளது. இது வேணுகோபாலஸ்வாமி கோயிலின் சிறப்புத் தன்மையை பறைசாற்றுகிறது.

ராஜகிரி மலைகோட்டை

இந்தோ - இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்ட அரச தர்பார் மண்டபம் இம்மலையின் உச்சியில் உள்ளது. மேல் வளைவுகள் வரிசையாக அமைய, குவிமாடம் மூடிய கூரை என்று இம்மண்டபத்தின் வடிவமைப்பு நம்மை அசத்திவிடும். ரசிக்கத்தக்க மற்றொரு கட்டடம் போர்த் தளவாடக் கிடங்கு, இம்மலை மீது நாயக்கர் கால கட்டடக் கலையமைப்பைக் கொண்ட ரெங்கநாதர் கோயில் ஒன்றும் இருக்கிறது. இங்கு சென்றால் 4 மீட்டர் நீளமும் 2 மீட்டர் சுற்றளவும் கொண்ட பெரிய இரும்பு பீரங்கி ஒன்றையும் பார்த்து வரலாம்.

கிருஷ்ணகிரி கோட்டை

ராஜகிரியின் வடக்கேயுள்ள மலைக்குன்றில் கருங்கல் பாறைகளின் மீது அமைந்துள்ள கிருஷ்ணகிரி கோட்டை.. கற்படிகள் வழியாக நடந்து கோட்டையை அடையலாம். இங்கு காண்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன. இரு பிரமாண்டமான தானியக் களஞ்சியக் கட்டடங்கள், தூண்களில் உருவான மண்டபம், இரண்டு கோயில்கள், செங்கல் மாளிகை, வட்டமான பார்வையாளர் தர்பார் மற்றும் சிறு பீரங்கியும் உள்ளன. நீங்கள் சுற்றி முடிப்பதற்குள் அசந்து போய்விடக் கூடும்.

சுற்றுலா பயணிகள் கூட்டம் ஊட்டியில் குளு குளு சீசன்

சுற்றுலா பயணிகள் கூட்டம்

ஊட்டியில் குளு குளு சீசன் 

 

 ஊட்டி,:.ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டியில் நிலவும் குளு குளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தொடர்ந்து மே மாத இறுதியில் பருவமழை துவங்கும். மழை காரணமாக குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை முற்றிலும் குறைந்து விடும். இந்நிலையில் இந்தாண்டு மே மாத இறுதியில் துவங்க வேண்டிய பருவமழை துவங்கவில்லை. மாறாக ஜூன் இரண்டாவது வாரத்தில் தான் மழை துவங்கியது. இருப்பினும் மழை தொடர்ச்சியாக பெய்யவில்லை. இதனால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையாமல் அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஊட்டியில் குளிர்ந்த காற்றுடன் இதமான காலநிலை நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்த வண்ணம் உள்ளனர். தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதே போல் தொட்டபெட்டாவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. தொட்டபெட்டாவில் உள்ள நுண்ணோக்கி மூலம் பார்வையிட சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தெரியுமா உங்களுக்கு? சின்னமலையின் சிறப்பம்சம்

தெரியுமா உங்களுக்கு?

சின்னமலையின் சிறப்பம்சம்

 

ஏசுபெருமானின் பனிரெண்டு சீடர்களில் ஒருவரான புனித தோமையார் வாழ்ந்த இடம்தான் சைதாப்பேட்டை சின்னமலை. இயேசுவின் அருட்போதனைகளை பரப்புவதற்காக அவரது சீடர்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணமானார்கள். அந்த வகையில் இந்தியா நோக்கி பயணம் செய்தவர்தான் புனித தோமையார். இவர், கடல் வழி முழுமையாக கண்டுபிடிக்கப்படாத அந்த காலத்திலேயே கேரளா வழியாக சென்னைக்கு வந்து சேர்ந்திருக்கிறார். ஏசுபெருமான் கூறிய பிரசங்கங்களைத் தொகுத்து நமக்கு பைபிளாக வழங்கியது அந்த காலகட்டத்தில்தான்.    சைதாப்பேட்டை சின்னமலையில் தங்கியிருந்த போது அவர் அமர்ந்து ஜெபம் செய்த பாறை, அதில் அவர் செதுக்கிவைத்த சிலுவை, தாகம் எடுத்தபோது பாறையைப் பிளந்து அவரே உருவாக்கியதாக கூறப்படும் நீரூற்று போன்றவை சின்னமலையின் சிறப்பாக சொல்லப்படுகிறது. இதற்காகவே இதை காண்பதற்காக ஏராளமானோர் தினமும் இங்கு வந்து செல்கின்றனர்.

மேலும், மாட்டுக் கொட்டகையில் மரியன்னை ஏசுவை பெற்றெடுக்கும் காட்சி, ஏசுவிற்கு தண்டனை வழங்கும் பொருட்டு மன்னரின் முன்னிலையில் விசாரிக்கும் காட்சி, முள்முடி தரித்து சிரசில் குருதி ஒழுக சிலுவையை சுமந்து செல்லும் காட்சி, சிலுவையில் அறையும் காட்சி, இறுதியாக கல்லறையில் கிடத்தப்பட்டிருக்கும் காட்சி என பல்வேறு நிகழ்வுகளை நேரில் பார்ப்பது போன்ற வகையில் தத்ரூப சிலைகளாக இந்த பாறைகளின் மீது வடித்திருக்கிறார்கள். மேலும், இங்கு பச்சைப்பசேல் என படர்ந்திருக்கும் செடி, கொடி, மரங்களும் வாகன இரைச்சல் கேட்காத அமைதியான சூழலும் நாம் சென்னையில்தான் இருக்கிறோமா என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றன. இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இதை பார்ப்பதற்கென்றே தினமும் வந்து செல்கிறார்கள்.

பார்வை நேரம்: காலை 5 மணி முதல் மதியம் 1.30 மணி வரை, மதியம் 3.30 மணி முதல் இரவு 8 மணி வரை. கட்டணம் எதுவும் கிடையாது.

மதுரைக்கு மஹால் திருமலை நாயக்கர் அரண்மனை

மதுரைக்கு மஹால்

திருமலை நாயக்கர் அரண்மனை

 

மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ‘திருமலை நாயக்கர் மஹால்’. இதன் உட்புறத் தோற்றத்தில் எல்லோரையும் கவர்ந்து இழுப்பது உயரமான, பருமனான தூண்கள்தான். தொட்டு, தடவிப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு பிரமாண்டம்! தூண்களுக்கு மேற்புறம் யாழி உருவமும், மாடம் போன்ற தோற்றமும், மிக நுணுக்கமான வேலைப்பாடுகளும் அற்புதமாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன.

நாயக்கர்கள் மதுரையை ஆண்ட காலத்தில், கி.பி.1636ல் மன்னர் திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட இந்த மஹாலை ‘திருமலை நாயக்கர் அரண்மனை’ என்றும் சொல்வார்கள். இன்றைக்கும் மன்னர் அமர்ந்த சிம்மாசனம் காட்சிக்கு இங்கே வைக்கப்பட்டிருக்கிறது. இரவில் இங்கே காண்பிக்கப்படும் ‘ஒலி-ஒளி காட்சி’யில் மஹாலின் உட்புறத் தோற்றத்தைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சி! 

புராதன சின்னமாகிறது திருமால்கோனேரி மலை ஒரே இடத்தில் கிமு, கிபி ஓவியங்கள்


புராதன சின்னமாகிறது திருமால்கோனேரி மலை

ஒரே இடத்தில் கிமு, கிபி ஓவியங்கள்

 

மதுரை, : சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமால்கோனேரி மலை புராதன சின்னமாக தொல்லியல் துறையால் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. மதுரையை சுற்றியுள்ள மலைகளில் பாரம்பரிய சின்னங்கள், கல்வெட்டுக்கள், சமணர்களின் வாழ்வு நிலை, ஓவியங்கள் என ஏராளமான பொக்கிஷங்கள் உள்ளன. இம்மலைகளை கண்டறிந்து தொல்லியல் துறை புராதன சின்னங்களாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. அந்த வரிசையில், சிவகங்கை மாவட்டம் திருமால்கோனேரி மலை தொல்லியல் துறையால் விரைவில் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட உள்ளது. இந்த மலையில் 5ம் நூற்றாண்டில் வரையப்பட்ட ஓவியங்கள், தமிழீ எழுத்துக்கள் (அப்போதைய தமிழ் எழுத்து வடிவம்), 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சமணர்களின் மந்திரமாக இருந்த ஸ்வஸ்திக் சின்னம், சமணர் படுக்கைகள், விளக்குத்தூண் என பல்வேறு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன.

தமிழீ எழுத்துகளில் சமண படுக்கைகளை செய்து கொடுத்தவரின் பெயர் ‘எரு காட்டுஊர் கோன் கொன்றி பாளிய்’ என எழுதப்பட்டுள்ளதை காணமுடிகிறது.விநாயகர், மீனாட்சி சுந்தரேஸ்வரர் மகிழ்ச்சி நிலையில் கைகோர்த்து ஒரு காலை மடித்து உட்கார்ந்திருக்கும் சிற்பம் குடவரை சிற்பமாக காண கிடைக்கிறது.  இம்மலை தொல்லியல் துறையால் ஆய்வு செய்யப்பட்டு பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட தகுதியுள்ளது என மதுரை மண்டல அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்டு தமிழக அரசிற்கு ஒப்புதல் அனுப்பப்பட்டுள்ளது.

தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குனர் கணேசன் கூறியதாவது:


தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள பாரம்பரிய சின்னங்களிலேயே சிறப்பு வாய்ந்தது திருமால்கோனேரி மலை. இங்கு கி.மு.க்கு முற்பட்ட ஓவியங்களும், கி.பி.யில் வரையப்பட்ட ஓவியங்களும் ஒருங்கே அமைந்துள்ளன. இங்கு மட்டும்தான் சமண படுக்கையின் மேல் சமணர்களின் சின்னமான ஸ்வஸ்திக் உள்ளது. தமிழகத்தில் உள்ள சமணர் படுக்கைகளில் வேறு எங்கும் இச்சின்னம் இல்லை. பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் வாணிப வழித்தடமாக இருந்ததற்கான சான்றும் உள்ளது. அந்த காலத்தில் குன்றத்தூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது.

குடவரை கோயிலை ஒட்டி 13ம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டுள்ள பாகம்பிரியாள் சமேத மலைகொழுந்தீஸ்வரர் கோயில் சுவர் முழுவதும் பழமையான தமிழ் எழுத்துக்கள், வட்டெழுத்துக்களை காணலாம். இந்த கோயில் சிவகங்கை சமஸ்தானத்தின் கீழ் வருகிறது. அதனால் மலை முழுவதையும் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க இயலாத நிலை உள்ளது. கோயிலை தவிர்த்து மலை, பாரம்பரிய சின்னமாக விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. அதனை தொடர்ந்து சுற்றுலாத் துறையுடன் இணைந்து மேம்பாட்டு பணிகள் விரைவில் செய்யப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

 

துறைமுகம்


மன்னார் வளைகுடா அருகே இது அமைந்துள்ள தூத்துக்குடி துறைமுகம் ஒரு இயற்கைத் துறைமுகம். இப்பகுதி புயல் கிளம்ப முடியாத பூகோள அமைப்பைக் கொண்டுள்ளது. இங்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்தும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலிருந்தும் வரக்கூடிய கப்பல்களுக்கு இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்குகிறது. 600 அடி முகத்துவாரத்தோடும், ஆறுபக்கவாட்டுத் தளங்களோடும் திகழும் இத்துறைமுகம் சரக்குகள் ஏற்றுமதி இறக்குமதி வசதிக்காக 23 கிரேன்களும், 18 போர்க்லிப்ட் கருவிகளும், 4 பிரும்மாண்டமான சரக்கு லாரிகளும், 4 ரயில் என்ஜின்களும், சுமார் 50 ஆயிரம் டன்கள் சரக்குகள் வைப்பதற்குரிய பாதுகாப்புக் கிட்டங்கிகளும் கொண்டுள்ளது.

1974 ஆம் ஆண்டு இந்நகரிலுள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலையின் அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்ய 125 இலட்ச ரூபாய் செலவில் எண்ணெய்த் துறை ஒன்று தனியாக இங்கே ஏற்படுத்தப்பட்டது. 1இங்கு 6 கப்பல்கள் தங்குவதற்கான தளங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கென்று தனியாக நிலக்கரி துறையும், மணிக்கு 2000 டன் நிலக்கரி இறக்குமதி வசதியுடைய தானியங்கியும் 1983 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இங்கு மணிக்கு 700 லிட்டர் பெட்ரோலிய எண்ணெப் பொருள்களை இறக்குமதி செய்யத் தேவையான சிறப்புக் கருவிகள் இத்துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

திருச்செந்தூர்


   தூத்துக்குடியிலிருந்து 2கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது திருச்செந்தூர்.அறுபடை வீடுகளில் ஒன்றாகவும் கோவிலின் அருகே கடற்கறையை கொண்டுள்ள ஓரே முருகன் கோவில் என்னும் சிறப்புக்குரியது.இங்கு வருவோர் தங்குவதற்கு வசதியாக கோவிலின் அருகே விடுதிகள் குறைந்த கட்டணத்தில் அமைந்துள்ளது.சூரபத்மனைப் போரில் வென்று செந்தில் நின்று சிரிக்கும் கோயில் இதுதான். ஐப்பசி மாதம் இங்கு நடக்கும் சூரசம்காரம் திருவிழா பிரபலமானது.

சிந்தலக்கரை 


  எட்டயபுரத்திலிருந்து 6 கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது சிந்தலக்கரை.இம் மாவட்டங்களில் உள்ள சக்தி பீடங்களில் இது முதன்மையானது.இத்தலத்தில் அமைக்கப்பட்டுள்ள வெட்காளியம்மன் உருவச்சிலை மிகப்பிரமாண்டமானது.இந்தியாவில் வேறெங்கும் இவ்வளவு பெரிய காளிசிலை இல்லை.

பாரதியார் நினைவு மண்டபம்


   தூத்துக்குடியிலிருந்து சுமார் 35கீ.மீ தொலைவில் மகாகவி பாரதியார் பிறந்த இடமான எட்டயபுரம் உள்ளது.அவரது நினைவை போற்றும் விதமாக கட்டப்பட்டது பாரதியார் நினைவு மண்டபம் மிக எழிலுடன் காட்சியளிக்கின்றது. 1945 ஆம் ஆண்டு பிரபல எழுத்தாளர் கல்கியால் கட்டப்பட்டது.1981இல் பாரதியின் நூற்றாண்டு விழாவின்போது தமிழக அரசு இந்த நினைவிடத்தைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது.

குலசேகரபட்டிணம்


      அழகிய கடற்கரை கிராமமான குலசேகரப்பட்டினம் குலசை என அழைக்கப்படும் குலசேகரப்பட்டினம்  திருச்செந்தூரிலிருந்து 20 கிமி தொலைவிலும் உள்ளது.இயற்கை எழில் கொஞ்சும் கடலோர கிராமமான குலசேகரப்பட்டினத்தில் இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தப்படியாக நவராத்திரி பண்டிகை படு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.பொதுவாக எல்லா கோயில்களிலும் சிவனுக்கும், அம்பாளுக்கும் தனித்தனி சன்னதிகள் இருக்கும். ஆனால் இக்கோயிலில் சக்தி மயமாக சிவனும், சிவமயமாக சக்தியும் இருந்து அருள்பாலிக்கின்றனர்.

மணப்பாடு


  தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரைக் கிராமமாகும். இது மணவை என்றும் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.கடற்கரை. பக்கத்திலேயே கடல் மணலால் அமைந்த சிறு மலை போன்ற மேடு. உச்சத்தில், ஒரு தேவாலயம். பின்னால், கலங்கரை விளக்கம். இடத்தின் அமைப்பைப்போல, இடத்தின் வரலாறும் ஆச்சரியப்படுத்தும்.இங்கு ஒரு குகையும், நாழிக்கிணறும் திருச்செந்தூரில் உள்ளது போல் இருக்கிறது. மணல்மேடு முழுவதும் நிறைய சிலுவைகள்.

அய்யனார் சுனை


    திருச்செந்தூரில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. பாலைவனம் போன்ற இப்பகுதியில் அய்யனார் கோயிலும் அருகில் ஊற்று ஒன்றும் உள்ளன. இதனை அய்யன் சுனை என்று அழைக்கிறார்கள்.இங்கு செல்பவர்கள் தங்குவதற்கு விடுதிகளும் உள்ளது.சுனைக்கு செல்லும் வழியில் அழகான பாரஸ்ட் ஓன்றும் அமைந்துள்ளது

ஸ்ரீவைகுண்டம்


     திருநெல்வேலியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கும் இங்குதான் கண்ணபிரான் கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலின் மாபெரும் கோபுரமும் பெயர் பெற்றது. திருவேங்கட முதலியார் என்பவரால் கட்டப்பட்ட மண்டபத்தில், யாளிகள், யானைகள், வீரர்கள் போன்ற அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. வீரபாண்டிய கட்டபொம்மன் காலத்தைச் சேர்ந்த 6 கல்வெட்டுகளும் இங்கு உள்ளன.பார்க்க வேண்டிய இடங்கள் வைகுண்ட பெருமாள் திருக்கோயில்,சிவன் கோயில்,முதவிலுள் ஹயிரத் மசூதி,புனித சந்தியாகப்பர் ஆலயம்,நாராயணப் பெருமாள் கோயில் ஆகியவை இங்கு காணவேண்டிய இடங்கள்...இங்குள்ள சிலைகள் அனைத்தும் மிக துல்லியமாக செதுக்கப்பட்டுள்ளது.

வ.உ.சி நினைவில்லம்


    செக்கிழுத்த செம்மல் வ.உ.சி பிறந்த ஊர்தான் ஒட்டப்பிடாரம். வெள்ளையருக்கு எதிராகச் சொந்தமாக சுதேசிக் கப்பல் வாங்கி ஓட்டிய மாபெரும் தியாகச் செம்மல். வ.உ.சி வாழ்ந்த இல்லம் நினைவகமாக தழிழக அரசால் அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. 167.12 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்நினைவிடத்தில், அவரது திருவுருவச்சிலை, அரிய புகைப்படங்கள், வாழ்க்கை வரலாறு போன்றவை இடம் பெற்றுள்ளன. முகவரி: 2/119, வ.உ.சி தெரு, ஒட்டப்பிடாரம்.அவர் சிறையில் இருந்த போது அவர் இழுத்த செக்கு சென்னையில் பாதுகாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது

பாஞ்சாலங்குறிச்சி


    ஓட்டபிடாரத்திற்கு அருகிலுல்ல பாஞ்சாலங்குறிச்சி தான் ஆங்கில சகாப்தியத்தை எதிர்த்து முதலில் வாளெடுத்துப் போர்புரிந்த மாவீரன் கட்ட பொம்மன் பிறந்தது ஊர். அவர் வீற்றிருந்த கோட்டை அழிவுற்றதால் 1974 ஆம் ஆண்டு அரசினால் இவர் நினைவாக கட்டப்பட்ட நினைவிடம் இங்குள்ளது.இது அரசினால் பராமரிக்கப்பட்டு வருகிறது கட்டபொம்மன் தனது தெய்வமாகக் கருதி வழிபட்ட ஜக்கம்மா கோயிலும் இங்கு உள்ளது. பார்வையாளர் நேரம்: காலை 8-1 மாலை 2-6 மணி வரை. கட்டணம் பெரியோர் ரூ1. சிறுவர்கள் 0.50 பைசா.

ஆதிச்சநல்லூர்


 சீனிக் கல் பாறைகள்  நிரம்பிய மேட்டு நிலம் ஆகும் இப்பறம்பு அமைந்துள்ள இடத்தைத் தொட்டடுத்து ஆதிச்சநல்லூர் என்ற சிற்றூர் அமைந்திருப்பதால் இது ஆதிச்சநல்லூர்ப் பறம்பு என வழங்கப்படுகிறது. தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள மிகத் தொன்மையான ஊர். சுடுமண் பாத்திரங்களும், முதுமக்கள் தாழிகளும் தொல்பொருள் ஆய்வுத் துறையால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த ஊர் தற்போது தொல்லியல் துறையின் மேற்பார்வையில் உள்ளது.


வாஞ்சி மணியாச்சி


  ஆங்கிலேயர் காலத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷ்துரையை, வாஞ்சி நாதன் இந்த இரயில் நிலையத்தில்தான் சுட்டான். அத்தோடு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தான். இந்தத் தியாகத்தைப் போற்றும் வகையில்தான், இந்த ஊரை வாஞ்சி மணியாச்சி என்று அழைக்கும் பழக்கம் வந்தது.

திருப்புளியங்குடி


   திவ்யதேசம் என்று அழைக்கப்படும் இந்த ஊர், ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 2கி.மீ. தொலைவிலும் நகரத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவிலும் உள்ளது. ஸ்ரீ வைகுண்டம் தூத்துக்குடி சாலையில் மூன்று திருப்பதிகள் உள்ளன. இவற்றில் காசினை வேண்டா பெருமாள் குடி கொண்டுள்ளார்.

கொற்கை துறைமுகம்


   தற்போது இது ஒரு சாதாரண கடற்கறை கிராமம்தான். ஆனால், 12 ஆம் நூற்றாண்டில், சங்ககாலப் பாண்டிய மன்னர்கள் காலத்தில் பரபரப்பான துறைமுகம் இருந்தது. திருச்செந்தூரிலிருந்து 29கி.மீ.தொலைவில் இருக்கும் இந்தத் தொன்மைச் சிறப்பு வாய்ந்த ஊரின் வரலாற்றை மேலும் கண்டறிய அகழ்வாராய்வுகள் நடந்தவண்ணம் உள்ளன.

தெய்வச் செயல்புரம்


   தூத்துக்குடியிலிருந்து 25கீ.மீ தொலைவில் உள்ள இவ்டத்தில் 78அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் ஆலயம் நிறுவப்பட்டுள்ளது.
இது மிக உயரமான சிலை என கருதப்படுகிறது.

திருக்கோலூர்


  ஆழ்வார்த்திருநகர் மற்றும் தென் திருப்பேரைக்கு இடையில் திருக்கோலூர் உள்ளது. இங்கு செல்ல பரல்குளம் பேருந்து நிலையத்தில் இறங்கி 1 கி.மீ. தூரம் செல்ல வேண்டும்.

கயத்தாறு


   இவ்வூரில் உள்ள புளிய மரத்தில்தான் 16.10.1799 அன்று மாவீரன் கட்டபொம்மனை ஆங்கிலேய அரசு தூக்கிலிட்டுக் கொன்றது. இங்குள்ள மக்கள் தங்கள் குழந்தைகள் வீரத்துடன் வளர்க்க வேண்டும் என்று மண்னை உன்னும் பழக்கம் உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய இடங்கள் 

 

திருநெல்வேலியை 'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், 'தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், 'பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும். திருநெல்வேலி பெயர்க் காரணம் இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது.

திருநெல்வேலி என்றவுடன் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது 'திருநெல்வேலி அல்வா'தான். இந்த ஊரின் அல்வாவின் சுவையே தனிதான். அதிலும் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவிற்கு இருக்கும் ருசியே தனிதான். திருநெல்வேலிக்கு வருபவர்கள் அல்வா வாங்காமல் திரும்ப மாட்டார்கள் என்பது தனிச் சிறப்பு. திருநெல்வேலியை நெல்லை என்றும் அழைப்பர்.

அம்பாசமுத்திரம்

கோயில்கள் நிறைந்த ஊர். காசி விஸ்வநாதர் கோயில், திருமூநாந்தசாமி கோயில், அம்மையப்பர் கோயில், கிருஷ்ணர் கோயில், புருசோத்தம பெருமாள் கோயில், லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் என்று நிறையக் கோயில்கள் இங்கு உள்ளன.

ஆத்தங்கரை பள்ளிவாசல்

நெல்லையிலிருந்து 46 கி.மீ. தொலைவில் இந்தப் பள்ளிவாசல் உள்ளது. இங்கு சையத் அலி பாத்திமா மற்றும் ஷேக் முகமது இருவருக்கும் இரண்டு கோபுரக் கூடுகள் உள்ளன. இவர்கள் இருவரும் சூஃபி ஞானிகள், அனைத்து மதத்தினரும் வந்து வழிபடும் இடம் இது.

அய்யனார் சுனை

நாட்டார் தெய்வமான அய்யனார் கோயிலோடு இயற்கையான சுனையும் அமைந்த இடம். அருகில் சந்தனக்காடும் உள்ளது. பார்க்கச் சிறந்த இடம்.

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்

நெல்லையிலிருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ளது. டிசம்பர் மாதக் கடைசியில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்கும். சுமார் 35 வகைப் பறவைகள் இவ்வாறு வலசை வந்து ஜூன் ஜூலை மாதம் வரை தங்கி குஞ்சு பொரித்து பிறகு அவற்றுடன் பறந்து செல்கின்றன. மிக முக்கியமான பறவைகள் சரணாலயமாக இது இருந்து வருகிறது.

குற்றாலம்

பெயரைச் சொல்லும் போதே உற்சாகம் பிறக்கும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அருவிகள் நிறைந்த பகுதி. திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். குறு ஆல் என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டது.

குற்றால அருவிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன.

குற்றாலத்தின் பெரிய அருவி தவிர சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி, பழத்தோட்ட அருவி, புது அருவி என ஏராளமான அருவிகள் உள்ளன. எல்லா அருவிகளுக்கும் சென்று வர போக்குவரத்து வசதி உள்ளது. இந்த அருவிகளில் வரும் தண்ணீரில் மூலிகைக் குணம் கலந்திருப்பதால் இவற்றில் நீராடுபவர்களுக்கு எல்லா நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

குற்றாலநாதர் கோயில்

பெரிய அருவியின் பக்கத்தில் கோயில் கொண்டுள்ளார் குற்றாலநாதர். திரிகூட ராசப்ப கவிராயர் பாடிய குற்றாலக் குறவஞ்சியின் நாயகன் இவர்தான். தொலைபேசி - 04633-210138.

மாவட்ட அறிவியல் மையம்

தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள நாட்டின் மிக முக்கியமான அறிவியல் மையங்களில் இதுவும் ஒன்று. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையுடன் இணைந்த தேசிய அறிவியல் காட்சி சாலைகள் கழகத்தின ஒரு பிரிவு இது. இந்தியாவில் உள்ள 124 அறிவியல் மையங்களில் இதுவும் ஒன்று. இங்கு கடல் பற்றிய மூன்று நிரந்தரக் காட்சி சாலைகள், 6 ஏக்கரில் அறிவியல் பூங்கா ஆகியவை அமைந்துள்ளன. மேலும் நடமாடும் அறிவியல் பொருட்காட்சி, கோளரங்கம் தற்காலிக அறிவியல் மற்றும் நாடகக் காட்சி வசதிகளும் உள்ளன.

களக்காடு வனவிலங்கு சரணாலயம்

நெல்லையிலிருந்து 47 கி.மீ. தொலையில் உள்ள விலங்குகள் சரணாலயம் . அடிப்படையில் இது புலிகளுக்கான சரணாலயம் எனினும் சிங்கவால் மற்றும் நீளவால் குரங்குகளும் இங்கு உண்டு. வனத்துறையிடம் அனுமதி பெற்று வாகனத்தில் பயணம் செய்யலாம். செங்கால் தேரி வன ஓய்வகத்தில் உணவு உறைவிட வசதி கிடைக்கும். செப்டம்பர் முதல் மார்ச் வரை இங்கு செல்லலாம்.

கிருஷ்ணாபுரம்

நெல்லையிலிருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள பெருமாள் கோயில் இது. இக்கோயிலின் ஆளுயர சிற்பங்கள் பிரமிப்பூட்டுபவை.

மாஞ்சோலை

நெல்லையிலிருந்து 57 கி.மீ தூரத்தில் 1162 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்களின் பகுதிதான் மாஞ்சோலை. இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் 4000 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்.

குறுக்குத்துறை முருகன் கோயில்

தாமிரபரணி ஆற்றிலிருந்து கிளம்பும் பனிமுட்டம் தழுவ, முருகன் கோயில் கொண்டிருக்கும் திருஉருவ மலை. இந்தப் பாறையில் இருந்துதான் 1653 ஆம் ஆண்டு திருச்செந்தூர் முருகன் சிலை வடிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

நாங்குநரி

நெல்லையிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள அழகான ஊர். சுற்றிலும் வயல்களும் பெரிய குளமும் பசுமையான காட்சிகள். இஸ்லாமியர்களும் இந்துக்களும் பேதமின்றி கூடிவாழும் அழகிய ஊர்.

மணிமுத்தாறு அணை

நெல்லையிலிருந்து 47 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த அணைக்கட்டு. இங்கிருந்து 5 கி.மீ தூரத்தில் மணிமுத்தாறு அருவி இருக்கிறது. அணைக்கட்டில் இருந்து 10 கி.மீ. தூரத்தில்தான் மாஞ்சோலை எஸ்டேட் இருக்கிறது.

கழுகுமலை

சமண மதத்தின் மிக முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்று. சமணர்களின் சிற்பக் கலைத்திறனுக்குச் சிறந்த உதாரணம் இங்குள்ள கோயில்தான். சிவபெருமானுக்கென்று கட்டப்பட்ட குடைவரைக் கோயிலான வெட்டுவான் கோயிலும் இந்தக் கழுகுமலையில்தான் உள்ளது.

முருகன் கோயில்

முருகனுக்கு இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று நகரின் இதயப் பகுதியிலும் இன்னொன்று தாமிரபரணி நதியின் தீவுப்புறத்தில் உள்ள பாறைக் கோயிலும் ஆகும்.

அருங்காட்சியகம்

நெல்லையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாளையங்கோட்டையில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இது ஒரு பல்நோக்கு தொல்லியல் அருங்காட்சியகமாகும். அனுமதி இலவசம்.

பாபநாசம்

பாவங்கள் அனைத்தையும் நாசம் செய்யும் இடம் என்பதால் இது பாபநாசம் என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது. அகத்தியருக்கு இங்கு கோயில் உள்ளது. சிவனும் பார்வதியும் அகத்தியருக்கு நேரில் காட்சி தந்த இடம் இதுதான் என்றும் கூறப்படுகிறது. பாபநாசம் நீர்வீழ்ச்சி இதன் அருகில்தான் உள்ளது. நெல்லையிலிருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ளது.

நம்பி மலை

ஒரு குன்று. அதைச் சுற்றி அழகிய கிராமம். இந்தக் குன்றில் நம்பியாண்டவர் குடி கொண்டுள்ளார். மலை நம்பி என்றும் இவரை அழைக்கிறார்கள். குன்றிலிருந்து கிராமத்தின் முழு அழகையும் ரசிக்கலாம்.

பத்தமடை

மென்மையான கைக்குள் சுருட்டும் அளவு நேர்த்தியான கோரைப்பாய்களுக்கு பெயர் பெற்ற ஊர். நீரோடைக் கரைகளில் நீண்டு வளரும் கோரைகளால் இந்தப் பாய் பின்னப்படுகிறது. சுவாமி சிவானந்தா இந்த ஊரில்தான் பிறந்தார்.

சாலைக் குமரன் கோயில்

திருநெல்வேலி சந்திப்பில் உள்ள இந்தக் கோயில் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது என்பதற்காக 1965 இல் வெற்றி விருது பெற்றது.

கும்பருட்டி அருவி

குற்றாலத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் மேற்கு மலைத் தொடரில் இருக்கும் அருவி. இந்த அருவியை ஒட்டி நீந்துவதற்கு வசதியாகக் குளமும் உள்ளது.

பொட்டல் புதூர் தர்கா

1674 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மிகப் பழமையான தர்கா. இந்தத் தர்காவின் கட்டட அமைப்பு இந்திய கட்டடக் கலையைச் சார்ந்தது. இங்கு நடக்கும் வழிபாடும்கூட இந்துக்களின் சாயலை ஒத்ததாகவே இருக்கும். இங்கு நடக்கும் கந்தூரி திருவிழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வார்கள். தொலைபேசி - 04634-240566.

நெல்லையப்பர் - காந்திமதி கோயில்

நெல்லையின் முக்கியமான சிறப்பே நெல்லையப்பர் - காந்திமதி கோயில்தான். அம்மைக்கும் அப்பனுக்கும்தனிக் கோயில்கள் இங்கு உள்ளன. அரிய வேலைப்பாடுகள் உள்ள ஆவணங்கள், தங்க அல்லிக்குளம் இசைத் தூண்கள் ஆயிரங்கால் மண்டபம் போன்றவை இக்கோயிலின் தனிச்சிறப்புகள். தொலைபேசி - 0462 - 2339910.

சங்கரன் கோயில்

சிவனும், பெருமாளும் ஒருவராய் இணைந்திருக்கும் கோயில் என்பதால் இந்தக் கோயிலில் உள்ள மூலவர் சங்கர நாராயணர் ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தச் சிலையின் திருவடிகளை கதிரவன் தழுவுவதாகக் கூறப்படுகிறது. சிவனுக்கும் பார்வதிக்கும் தனித் தனி சந்நிதிகளும் இங்குண்டு. நெல்லையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது சங்கரன் கோயில். தொலைபேசி - 04636-222265.

முண்டன் துறை வனவிலங்கு சரணாலயம்

நெல்லையிலிருந்து 56 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த வனவிலங்கு சரணாலயம். இதன் பரப்பளவு 567 ச.மீட்டர்கள். இங்கு புலி, சிங்கவால் குரங்கு, கரடி, கேளை ஆடு, ஓநாய் போன்ற மிருகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. வனத்துறை அனுமதி பெற்று வாகனத்தில் சுற்றிப் பார்க்கலாம். முண்டன்துறை வன ஓய்வகத்தில் உணவு மற்றும் உறைவிட வசதி உள்ளது. தொலைபேசி - 04364-250594.

தென்காசி - காசி விஸ்வநாதர் கோயில்

வடநாட்டுக்கு ஒரு காசி இருப்பது போல் இது தென்னாட்டில் உள்ள காசி. தென்காசி பேருந்து நிலையம் அருகில்தான் காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. கோயிலின் நீளம் 554 அடி அகலம் 318 அடி. இதன் பிரமாண்டமான கோபுரத்தை 1456 ஆம் ஆண்டு பராக்கிரம பாண்டிய மன்னன் கட்டியுள்ளான். 1924 ஆம் ஆண்டு பேரிடி ஒன்று தாக்கியதில் இந்தக் கோபுரம் தகர்ந்து விழுந்தது. சமீபத்தில் 168 அடி உயரத்தில் மீண்டும் அந்தக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. இக்கோயிலில் 1927 ஆம் ஆண்டு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சியால் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் கழகம் இன்றும் சிறப்பாகத் தமிழ்ப்பணியில் ஈடுபட்டு வருகிறது. நெல்லையிலிருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ளது தென்காசி. தொலைபேசி - 04633-222373.

திருக்குறுங்குடி

மேற்குத் தொடர்ச்சி மலையில் நம்பி ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகிய கிராமம். புராணங்களில் நாராயணன் வந்து இவ்வூரில் தங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ட்ரினிடி கதீட்ரல் தேவாலயம்

திருநெல்வேலியின் முக்கிய அடையாளங்களில் இதுவும் ஒன்று. 1826 ஆம் ஆண்டு ரெவரன்ட் ரெகினியஸ் என்பவரால் கட்டப்பட்ட அழகிய தேவாலயம். நெல்லையிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் முருகன் குறிச்சி என்ற இடத்தில் அமைந்துள்ளது.

திருவிடைமருதூர்

நெல்லையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அழகிய கோயில். இங்கு அதலநாதர் மற்றும் நரம்புநாதர் ஆகியோர் கோயில் கொண்டுள்ளனர். இக்கோயில் சேர சோழ பாண்டியர்கள் மட்டுமல்லாது விஜயநகரப் பேரரசின் கட்டுமான சிற்பக் கலைகளையும் பிரதிபலிக்கும் சாட்சியாக இருந்து வருகிறது.

வளநாடு

இந்த இடத்தை மான்களின் சரணாலயமாக அரசு அறிவித்து வருகிறது. நெல்லையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்தக் குன்றுப் பகுதியில் இந்தியாவிலேயே சிறந்த காவல்துறை துப்பாக்கிப் பயிற்சி நிலையம் ஒன்றும் உள்ளது.

திருவள்ளுவர் இரட்டைப் பாலம்

இந்தியாவிலேயே முதல் முதலாகக் கட்டப்பட்ட இரண்டடுக்குப் பாலம் இதுதான். நெல்லைச் சந்திப்பில் தண்டவாளத்தைக் குறுக்கே கடப்பதைத் தவிர்க்க இப்பாலம் கட்டப்பட்டது. இதன் நீளம் 800 மீட்டர் 25 குறுக்குத் தூண்கள் உள்ளன. இவற்றில் 13 தூண்கள் வில் வளைவாக 30.30 மீ அகலத்தில் உள்ளன. மற்ற 12 தூண்களும் 11.72 மீ அகலம் கொண்ட தாங்கிகள் ஆகும்.

வளநாடு பிளாக்பக் சரணாலயம்

தூத்துக்குடி பிளாக்பக் அருகே அமைந்துள்ள இந்தச் சரணாலயம் 16.41 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இங்கு சிங்கவால் குரங்குகள், புள்ளிமான்கள், காட்டுப்பூனை போன்றவை உள்ளன. இதைப் பார்வையிட எப்போது வேண்டுமானாலும் போகலாம்.

முகவரி - மாவட்ட வனத்துறை. திருநெல்வேலி பிரிவு. கொக்கிரகுளம். திருநெல்வேலி - 627 009.

கப்பல் மாதா தேவாலயம்

நெல்லையில் இருந்து 72 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தச் சிறிய தேவாலயம். கோவாவைச் சேர்ந்த இறையியல் திருச்சபையின் கட்டுப்பாட்டில் இது உள்ளது. கடந்த 1903 ஆம் ஆண்டு இந்தத் தேவாலயம் ஒரு பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது. இங்குள்ள கன்னிகா மடத்தில் சென்று இரவில் தங்கும் இளம் பக்தைகளுக்கு அங்குள்ள மாதாவைச் சுற்றி ஓர் ஒளிவட்டம் தெரிவதாக் கூறப்படுகிறது. ஆனால் ஓரு மெழுகுவர்த்தி கூட இந்த ஆலயத்தில் ஏற்றப்படுவதில்லை என்பதுதான் ஆச்சர்யம்.

பூலித்தேவன் நினைவகம்

ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முதன்முதலாக போர் முரசு கொட்டியவன் மாவீரன் பூலித்தேவன். 1715 ஆம் ஆண்டு பிறந்த பூலித்தேவன் 1755 ஆம் ஆண்டு ஆங்கிலத் தளபதி ஆரோனுக்கு வரி தர மறுத்து சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கினான். தொடர்ந்து ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை புறமுதுது காட்டச் செய்தான். இத்தகைய மாவீரனை சங்கரன் கோயிலில் தனது இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொண்டிருந்த போது வஞ்சகமாகக் பிடிக்க சுற்றி வளைத்தது ஆங்கிலேயப் படை. ஆனால் அவனோ அங்குள்ள குகை ஒன்றினுள் போனான். எதிரிகளிடம் சிக்கவும் இல்லை. என்ன ஆனான் என்று தெரியவும் இல்லை. இந்த மாவீரனுக்கென்று சிவகிரி வட்டம் நெற்கட்டும் செவலில் ஒரு நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய இடங்கள் 

 

திருவண்ணாமலை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம். அடுத்து நினைவுக்கு வருவது கிரிவலம். 100க்கும் மேற்பட்ட சைவத் திருத்தலங்களில் முக்கியமானது. புனித நகரமாக கருதப்படும் இந்நகரில் அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது. சென்னையிலிருந்து ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன.

அருணாச்சலேஸ்வரர் கோயில்

சிவனின் பஞ்சபூத தலங்களில், திருவண்ணாமலை அக்னி தலமாகும். மற்றபிற தலங்களில் சிதம்பரம் ஆகாயத்தையும், காளகஸ்தி காற்றையும், திருவானைக்கோவில் நீரையும், காஞ்சிபுரம் மற்றும் திருவாரூர் நிலத்தையும் குறிக்கும் தலங்கள் ஆகும். திருவண்ணாமலையில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்துகொண்டு இருக்கும். இதுதவிர ஓரு வருடத்தில் நான்கு முறை கொண்டாடப்படும் பிரம்மோற்சவங்களில், தமிழ் மாதமாம் கார்த்திகை-யில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவமே மிக சிறப்பானாதாகும். இது ஆங்கில மாதம் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் வரும்.

வழிபாட்டு நேரங்கள் : காலை சந்தி-காலை 8மணி, உச்சிகாலம்-காலை 10 மாலை 6 மணி. இரண்டாம் கால பூi -இரவு 8மணி நடுஜாமம் : இரவு 9.30 மணி. தொலைபேசி: 04175-2224915.

கிரிவலம்

புகழ்பெற்ற கார்த்திகை தீபம் தெரியும் திருவண்ணாமலையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 2609 அடி. அதாவது 800 மீட்டர் உயரம் உடையது. இம்மலையை சுற்றி 16 கி.மீ. நீளத்தில் சாலை உள்ளது. இம்மலையையே சிவனாகப் பாவிக்கும் பக்தர்கள், கார்த்திகை மற்றும் பௌர்ணமி நாட்கள், தழிழ் மாதங்களின் முதல் நாள் ஆகிய சிவனுக்கு உகந்த நாட்களில், இந்த 16 கி.மீ. தூரத்தையும் கால்நடையாக வலம் வந்து வணங்குகிறார்கள். அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் மலையைச்சுற்றி வரும் இந்த வழிபாட்டு முறைக்குத்தான், கிரிவலம் என்று பெயர். உலகெங்கிலுமிருந்து பக்தர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

சாத்தனூர் அணை

பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புகழ்பெற்ற அணைக்கட்டு. மலையும் வளமும் சூழ, இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் ரம்மியமான அணைக்கட்டுப் பகுதி இது. நீச்சல் குளம், முதலைப் பண்ணை, சிறுவர் இரயில், படகுச் சவாரி, இரும்பு தொங்குபாலம், வண்ணமீன் காட்சி என குழந்தைகளைக் கவரும் குதூகலக் காட்சிகள் ஏராளமாக உள்ளன.

ஸ்ரீ ரமணமகரிஷி ஆசிரமம்

இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற ஆன்மீகப் பேரொளியாத் திகழ்ந்தவர். 'குறைவாகப் பேசி அதிகமாகச் சாதித்தவர்' என்கிறார் இவரைப் பற்றி குறிப்பிடும் ஓஷோ. அகநிலை விசாரணையின் இறுதியாகக் கிடைக்கும் மனஓர்மை நிலையே இவருடைய தத்துவ இலக்கு. இங்குள்ள தியான மண்டபம் அமைதி, சாந்தம், எளிமை, தூய்மை ஆகியவை குடிகொண்டிருக்கும் ஆன்மீகப் பெருவெளியாகும். தொலைபேசி: 04175-237491

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம்

இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்தவர். திருவண்ணாமலையில் இருக்கும் புனிதமான இடங்களில் இந்த ஆசிரமும் ஒன்று. தொலைபேசி: 04175-224999

ஸ்ரீ யோகி ராம்சுரத் குமார் ஆசிரமம்

விசிறி சாமியார் என்று அன்பர்களால் அழைக்கப்பட்ட யோகி ராம் சுரத் குமாரின் ஆசிரமம், அமைதி நிறைந்தது. உலகம் முழுவதிலும் இவருக்கு சீடர்கள் உண்டு. கடந்த 2000 ஆம் ஆண்டு யோகி ராம்சுரத் குமார் முக்தி அடைந்தார். இப்போதும் இந்த ஆசிரமத்துக்கு சீடர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். தொலைபேசி: 04175-235984

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: கார்த்திகை மாதம், பௌர்ணமியும் கிருத்திகையும் கூடிய நாளில், திருவண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்படும் உலகப்புகழ் பெற்ற தீப்பெருந் திருவிழா.

விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

 

விருதுநகரின் பழையப் பெயர் விருதுப்பட்டி ஆகும். மதுரைக்குத் தென்மேற்கில் 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நடுத்தர நகரம் விருதுநகர். உயர்ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. நல்லெண்ணெய், மிளகாய் வற்றல் முதலியனவும் இங்கிருந்து ஏற்றுமதியாகின்றன. இங்கிருந்து ரயில் மூலம் வெளியிடங்களுக்கு ஏராளமான சரக்குகள் அனுப்பப்படுவதால், இங்குள்ள ரயில் நிலையத்தில் மிக நீளமான நடைமேடையும் சரக்கு ஏற்ற வசதியாக தனி வசதியுடன் கூடிய பகுதியும் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வூரின் சூலக்கரைப் பகுதியில் அரசு தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது.

எல்லைகள்

தென்மேற்கில் திருநெல்வேலி மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும் வடமேற்கில் தேனி மாவட்டமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.

வட்டங்கள்

இம்மாவட்டம் 8 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

    அருப்புக்கோட்டை
    காரியாப்பட்டி
    இராஜபாளையம்
    சாத்தூர்
    சிவகாசி
    ஸ்ரீவில்லிப்புத்தூர்
    திருச்சுழி
    விருதுநகர்

அய்யனார் அருவி

அடர்ந்த காட்டின் இயற்கை அழகும், பதினைந்து அடி உயரத்திலிருந்து விழும் சிறு அருவியும் அழகின் உச்சம். இங்குள்ள அய்யனார் கோயில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம். இந்தப் பேரழகை ரசித்து வர விருதுநகரிலிருந்து 12 கி.மீ. பயணிக்க வேண்டும்.

அருள்மிகு திருமேனிநாதஸ்வாமி கோயில்

தழிழகத்தில் பாண்டியர்கள் கட்டிய பதினான்கு கோயில்களில் பத்தாவதாகக் கட்டப்பட்ட கோயில். இக்கோயிலில் எட்டு வகை லிங்கங்களும் 9 வகை தீர்த்தங்களும் உள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து பார்த்திபனூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மிகப் பழமையான திருமேனிநாதனை வழிபடுவது அற்புத அனுபவம்.

அருப்புக்கோட்டை

அருப்புகோட்டையை அண்டிய சிற்றூர்கள் அரும்பு உற்பத்திக்குப் பெயர் போனவை. அருப்புகோட்டை என்பது அரும்புகொட்டை என்னும் சொல்லின் மறுவுச் சொல் எனக் கூறப்படுகிறது.

கோவில்கள்

இந்துக் கோவில்கள்

    அருள்மிகு மாரியம்மன் கோவில் அம்மன் கோவில் தெரு
    அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில்
    வாழவந்தம்மன் கோவில்
    மலையரசன் கோவில்
    நாடார் சிவன் கோவில்
    ராமர் கோவில்
    விநாயகர் கோவில்
    சிவன் கோவில்
    வடிவேல் முருகன் கோவில்
    ஆயிரங்கண் மாரியம்மன் அருள்மிகு
    உச்சினி மாகாளியம்மன் கோயில்
    முத்தையா கோயில்
    காமாட்ஷி அம்மன் கொவில் குமரன் புது தெரு
    வண்டி மலர்ஷி அம்மன் கொவில் குமரன் புது தெரு

தேவாலயங்கள்

    சி.எஸ்.ஐ தேவாலயம்
    ரோமன் கத்தோலிக் தேவாலயம்
    ஏ.ஜி. தேவாலயம்

மசூதிகள்

    வல்லவநாதபுரம் ஜூம்மா மசூதி
    நல்லூர் முகைதீன் ஆண்டவர் ஜூம்மா மசூதி

பூமிநாத சுவாமி கோயில்

பூமிநாத சுவாமி சுயம்புலிங்கமாக உள்ளார். சிவன் கோயிலில் பொதுவாக பைரவர் தெற்கு நோக்கியே நிற்பார். ஆனால், இங்கு மேற்கு முகமாக உள்ளார். நவக்கிரகங்களும் திசை மாறாமல், சூரியனைப் பார்த்தவாறு நிற்கின்றன. முருகன் கருவறையில் அசுர மயிலோடும், உற்சவர் தேவ மயிலோடும் அருள்பாலிக்கின்றனர். பங்குனி 9, 10, 11 ஆகிய மூன்று நாட்கள் சிவலிங்கம் மீது சூரிய கதிர்கள் விழுகின்றன. இங்கு தெட்சிணாமூர்த்தி ஞானத்தை அருள்பவராக வீற்றிருக்கிறார்.

இருக்கன்குடி

சாத்தூருக்கு கிழக்கில் அர்ஜீன நதியும், வைப்பாறும் சங்கமிக்கும் இருக்கன்குடியில் புகழ்மிக்க மாரியம்மன் கோயில் உள்ளது. ஆறுகளின் சங்கமத்திற்கு அருகிலேயே அம்மன் கோயில். இங்கு 21 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரப் பெருவிழா வெகு விமரிசையானது. இருக்கன்குடிக்குப் போகாமல் இருக்காதீர்கள்

குகன் பாறை

இந்தச் சிற்றூரின் மேற்கே உள்ள சிறிய மலைக்குன்றாகக் குகன்பாறை உள்ளதால், அப்பெயரிலேயே இந்தக் கிராமமும் அழைக்கப்படுகிறது. இந்த மலையின் அடிவாரத்தில் இயற்கையாக அமைந்த குகை சமணத்துறவிகளின் பள்ளியாகப் பயன்படுத்தப்பட்டது. இம்மடம் முந்நூற்றுவர் பெரும்பள்ளி என்ற பெயரில் நிறுவப்பட்டதாகவும் சீடர்கள் முந்நூற்றுவர் கோயில் பிள்ளைகள் என அழைக்கப்பட்டதாகவும் பத்தாம் நூற்றாண்டின் வட்டெழுத்து கல்வெட்டு கூறுகிறது. வேம்பக்கோட்டையிலிருந்து கழுகுமலை செல்லும் சாலையில் குகன்பாறை அமைந்துள்ளது.

காமராசர் இல்லம்

கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசர் பிறந்த வீடு நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது. எளிய குடும்பத்தில் பிறந்து ஏற்றம் பெற்றவர். தனக்கென வாழாத தகைமையாளர். பள்ளிக்கு வரும் பிள்ளைகளின் படிப்புக்குப் பசி தடையாகிவிடக் கூடாது என்பதற்காக, முதன்முதலாக மதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்திய படிக்காத மேதை. அவரது கைக்கடிகாரம், ஆடைகள் மற்றும் பயன்படுத்திய சிலபொருள்களும் நிழற்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. காமராசரின் எளிமைக்கு இதைவிட சான்று வேறெங்கும் கிடைக்காது. இந்த எளிமை இனி யாருக்கும் எப்போதும் வாய்க்கப் போவதில்லை.

பிளவாக்கால் அணைக்கட்டு அழகிய தோட்டங்கள் நிறைந்த அணைக்கட்டு. இங்கு நீரில் மிதந்தபடி இயற்கையின் பேரெழிலை ரசிக்கப் படகு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பிளவாக்கால் அணைக்கட்டு -பெரியார் அணைக்கட்டு எனவும் கோயிலார் அணைக்கட்டு எனவும் இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதுவொரு அழகிய சுற்றுலாத்தலம்.

குள்ளூர் சந்தை நீர்த்தேக்கம்

ஓர் அழகிய தலமாக வளர்ந்துவரும் நீர்த்தேக்கம். அர்ஜீனா நதியின் கிளை ஆறான கௌசிக மகா நதியின் குறுக்கே குள்ளூர் சந்தை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. பயணிகளின் மகிழ்ச்சிக்காகப் படகுவசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு ஆகஸ்ட் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை பலவகையான நீர்ப்பறவைகள் வலசை வருகின்றன.

ராஜபாளையம்

பழைய விஜய நகர அரசிலிருந்து வந்த ஒரு பிரிவு மக்கள் இப்பகுதியில் குடியேறியதால், ராஜபாளையம் என்று அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. அவர்களை பெருமைப்படுத்த இப்படி வைத்துள்ளார்கள். நூற்பாலைகள், விசைத்தறி ஆலைகள், மின்சாதனப் பொருள்கள், மரப்பட்டறைகள், மின்மோட்டார் போன்ற தொழிற்சாலைகள் நிறைந்த தொழில் நகரம்.

திருவில்லிப்புத்தூர்

தழிழக அரசின் இலச்சினையே திருவில்லிப்புத்தூர் கோபுரம்தான். காதலின் தனித்துவமான தூய வடிவம் கண்ணனின் காதலி ஆண்டாள் பிறந்த மண். பெரியாழ்வாரின் பெருமைமிகு மகள். நுண்மையான ஆணீன் மீது பெண் கொண்ட மோக உருவே ஆண்டாள் என்று நவீன பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள். ஆண்டாள் காதலில் உருகுகிறாள். பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஆண்டாள் மட்டுமே பெண். திருப்பாவை பாடிய தெய்வீக பாவை. 12 அடுக்குகளை கொண்டு 192 அடி உயரத்தில் எழுந்து நிற்கும் பிரம்மாண்டமான ராஜகோபுரம் தழிழ்நாட்டின் அடையாளம்.

சவோரியார் தேவாலயம்

புனித பிரான்சிஸ் நினைவாக, பிரான்சிஸ் அசோசியேஷன் கட்டிய தேவாலயம். ஒரு பக்கத்தில் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் ஸ்ரீ கிருஷ்ணர் வருவது போலவும், இஸ்லாத்தைக் குறிக்கும் பிறை நிலவும் கோயிலின் வடிவமைப்பின் பின்பக்கத்தில் கிறிஸ்தவத்தை உணர்த்தும் உயரமான சிலுவையும் தெரிகின்றன. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

செண்பகத் தோப்பு: காட்டு அணில் சரணாலயம்

புலி, சிறுத்தை, நீலகிரி நீண்ட வால் குரங்கு, மிளா, புள்ளிமான், காட்டுப்பன்றி, தேவாங்கு என விலங்கினங்களும், 100 வகையான பறவையினங்களும் வாழும் சரணாலயம். நடமாடும் வாலற்ற மெலிந்த உருவமுடைய விலங்குகள் இங்குண்டு. 480சதுர கி.மீ. பரப்பளவில் திருவில்லிப்புத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது.

ரமண மகரிஷி ஆசிரமம்

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி அவதரித்த திருத்தலம் திருச்சுழி. ரமணரின் ஆன்மீக கருத்துகளை பரப்புவதற்காக, இந்த ஆசிரமம் 1988இல் குண்டாற்றங்கரையில் நிறுவப்பட்து. சுந்தரம் அய்யருக்கும் திருமதி அழகம்மைக்கும் டிசம்பர் 30, 1879 இல் மகனாகப் பிறந்த ரமணரின் சிந்தனைகள் வெளிநாட்டினரைக் கவர்ந்தன. ஜெர்மனியரான பால்பிரண்டன் ரமணரின் உரைகளை மொழிப்பெயர்த்தான். அவரது ஞானத்தை உலகம் அறிந்து கொண்டது. திருச்சுழியில் ரமணர் வாழ்ந்த வீடு 'சுந்தர மந்திரம் ' என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் ரமணர் ஆசிரமம் உலகப் புகழ் பெற்றது.

சிவகாசி நகரம்

உலகமெங்கும் கொண்டாடப்படும் திருவிழா கொண்டாட்டங்களில் சிவகாசி மத்தாப்புகள் மினமினுக்கும். குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் தொழில் நகரம். நவீன அச்சுத் தொழிலின் உச்ச நகரம். பட்டாசு தீப்பெட்டி தொழிற்சாலைகள் மலிந்த நகரம். ஊரெல்லாம் சந்தோஷ வாண வேடிக்கைகளை உருவாக்கும் கரங்கள் சிவகாசியில்தான் வாழ்கின்றன.

திருத்தங்கல்

தொன்மைமிக்க நகரம். முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் எனப்படும் தமிழின் மூன்று சங்கங்களிலும் இடம்பெற்ற புலவர்களில் முடக்கூரனார், போர்கோலன் , வெண்ணாகனார் மற்றும் ஆதிரேயன் செங்கண்ணனார்ஆகியோர் இங்கு வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.இந்நகரம் விருதுநகர்-சிவகாசி சாலையில் அமைந்துள்ளது

வேம்பக்கோட்டை

தோட்டங்கள், படகு சவாரி ஆகியவற்றில் சிறந்த சுற்றுலாத் தலமாகிறது. வேம்பக்கோட்டை நீர்த்தேக்கம் மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பக்கச் சரிவின் நீரோட்டங்களிலிருந்து இதற்கான நீர் ஆதாரம் கிடைக்கிறது. வைப்பாறு ஆற்றின் ஏழு நீர்ப்பாசனப் பிரிவுகளிலிருந்து நீர் பெறுகிறது. கண்களுக்கு விருந்தளிக்கும் நீர்ப்பரப்பில் மிதந்தபடி பயணிக்கும் அனுபவமே தனிதான்

இராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

இராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

 

இந்தியாவின் புகழ்பெற்ற புனிதத் தலங்களில் ஒன்றான இராமேஸ்வரம் இந்த மாவட்டத்தில்தான் உள்ளது. தற்போதைய இராமநாதபுர மாவட்ட எல்லைக்கு உட்பட்ட திருவாடானை, பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய பகுதிகள் 15 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டியப் பேரரசிடம் இருந்தது. 1520 இல் பாண்டியர்களிடமிருந்து நாயக்கர்கள் இந்தப் பகுதியைக் கைப்பற்றினர். 1063 இல் குறுகிய காலம் மட்டும் இராஜேந்திர சோழர்கால சோழ அரசுக்கு உட்பட்டதாக இருந்துள்ளது. பிற்காலத்தில் பாண்டிய மன்னர்களின் கீழிருந்த சேதுபதி பரம்பரையினர் இராமநாதபுரத்தின் ஆட்சியை எடுத்துக்கொண்டனர். ஆங்கிலேயர்களால் ராம்நாட் என்று அழைக்கப்பட்ட இந்தப்பகுதி விடுதலைக்குப் பிறகு இராமநாதபுரம் என்று அழைக்கப்படுகிறது.

ராமநாதபுரம் அரண்மனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அரண்மனை ஆகும். சேதுபதி ராஜாவால் கட்டப்பட்ட இந்த அரண்மனை இராமலிங்க விலாசம் என்றும் அழைக்கபடுகிறது. இது ஏறத்தாழ மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை கட்டப்பட்ட அதே காலகட்டத்தில் கட்டப்பட்டதாகும். இங்குதான் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆஷ் துறையுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டார். எனவே இந்த அரண்மனை இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொடர்புடைய ஒரு அரண்மனையாக பார்க்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலம்.

அக்னி தீர்த்தம்

உயர்ந்த கோபுரம், எதிரே அமைதியான கடல், அருகே சில புண்ணிய தீர்த்தங்கள், அக்னி தீர்த்தம் இவற்றில் பிரபலமானது. இதில் நீராடினால் சகல பாவங்களும் அகலும் என்பது நம்பிக்கை. இன்னும் சில தீர்த்தங்களும் உண்டு.

அன்னை இந்திராகாந்தி பாலம் - பாம்பன் பாலம்

2.10.1988 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாலம் இது. இப்பாலமே இந்தியாவில் அமைந்துள்ள மிக நீளமான கடல் பாலமாகும். இதன் நீளம் 2.3 கிமீ. பாம்பன் ரயில் பாலம் 6,776 அடி (2,065 மீ) நீளமானது. இதை 1914 ஆம் ஆண்டு திறந்தனர். இப்பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக பாலத்தின் நடுப்பகுதியை உயரத் தூக்குவதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளனர். தொடக்கத்தில் குறுகிய அகல தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறே கட்டினர். பின்னர் இதை அகலப் பாதை தொடருந்துகள் செல்வதற்கு ஏற்றவாறு இந்திய இரயில்வே ஆகஸ்ட் 12, 2007 ஆம் ஆண்டு புதுப்பித்தது. ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 கப்பல்கள் இப்பாலத்தின் வழியாகச் செல்கின்றன.

இராமநாத சுவாமி கோயில்

இந்தக் கோயில் குறித்தப் புராதனக் கதை உண்டு. வழிபாட்டுக்கு உகந்த நேரத்தில் தான் பூஜிக்க லிங்கம் ஒன்று வேண்டும் என அனுமனிடம் இராமர் கேட்டிருக்கிறார். அனுமன் லிங்கத்தைக் கொண்டுவந்து சேர்க்கத் தாமதமாகவே சீதையே ஒரு லிங்கத்தை உருவாக்கி உள்ளார். இதனால் தாமதமாக லிங்கத்தைக் கொண்டு வந்த அனுமன் சஞ்சலம் அடையவே அவனையும் தேற்றி அந்த லிங்கத்தையும் அருகிலேயே வைத்ததாக இராமாயணம் கூறுகிறது. தற்போதும் அனுமனால் அமைக்கப்பட்ட லிங்கத்துக்கே இங்கு அதிக சிறப்பு. இராமநாதசுவாமி கோயிலின் மூன்றாவது பிரகாரம் உலகிலேயே மிக நீளமானது.

பத்ரகாளியம்மன் கோயில்

இராமேஸ்வரம் கோயிலிலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள காந்தமதனா பர்வதம் செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்தக் கோயில்.

தனுஷ்கோடி

மிக அண்மைக்காலத்தில் கடல் கொண்ட பகுதி இது. இது ஓர் அழகிய சிறு தீவு. 1964 இல் ஏற்பட்ட கடுமையான புயலின்போது இந்தத் தீவு முழுவதும் கடலுக்குள் முழ்கிவிட்டது. ஆனால் இங்குள்ள கோதண்டசாமி கோயில் மட்டும் எஞ்சி நிற்கிறது. இராமேஸ்வரத்திலிருந்து 18 கி.மீக்கு அப்பால் உள்ள தனுஷ்கோடிக்கு சாலை வழியாகவே செல்லலாம். இங்கு உள்ள கடற்கரையில் படகு சவாரி செய்யலாம். இங்குள்ள வங்கக் கடலும் இந்தியப் பெருங்கடலும் கூடுமிடம் புகழ் பெற்றது. இங்கு குளித்தால்தான் காசி யாத்திரை முடிவுறுவதாக இந்துக்கள் நம்புகின்றனர்.

தேவிப்பட்டினம்

இந்தக் கடலோரக் கிராமத்தை நவபாசாணம் என்றும் மக்கள் அழைக்கின்றனர். இந்துக்கள் தங்களின் முன்னோருக்குச் சடங்குகள் செய்யும் இடமாகவும் இது உள்ளது.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்

இங்குள்ள அனுமன் செந்தூர் காப்பில் எழுந்தருளி உள்ளார்.

ஏர்வாடி

அரேபியாவிலிருந்து 800 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணனூர் வழியாக இங்கு வந்தவர் இப்ராஹிம் செய்யத் அலியா சுல்தான். இறந்த பிறகு இவரின் நினைவாக எழுப்பப்பட்ட புகழ்பெற்ற கல்லறை இங்குள்ளது. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளி நாடுகளிலிருந்தும் இந்தக் கல்லறையை வழிபட பக்தர்கள் வருவார்கள். ஆண்டுதோறும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இங்கு நடக்கும் சந்தனக்கூடு திருவிழா பிரபலமானது. தொலைபேசி - 04576-263807.

மன்னார் வளைகுடா - கடல்வாழ் உயிரினப் பூங்கா

இந்தியாவிலேயே மிகப் பெரிய கடற்கரையைக் கொண்ட தேசிய கடல் வாழ் உயிரினங்களின் பூங்கா இங்குதான் உள்ளது. 3600 வகையான கடல் வாழ் தாவரங்களும் உயிரினங்களும் கொண்ட இந்தப் பூங்காவை இந்திய குழுவும் அமைப்பும் இணைந்து தனிப்பட்ட கவனத்திற்குரிய சிறப்புப் பகுதியாக அடையாளப்படுத்தி பயன்பாட்டு நிர்வாகச் சிறப்புத் தகுதியையும் வழங்கி உள்ளன.

ஜடாயு தீர்த்தம்

இராவணனிடமிருந்து சீதையைக் காப்பதற்காக ஜடாயு என்ற பறவை சண்டையிட்டபோது அதன் இறகு ஒன்று இந்த இடத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கோயிலையும் குளத்தையும் சுற்றி நிறைய மணற்குன்றுகள் சூழ்ந்துள்ளன. இந்தக் குளத்தில் உள்ள தண்ணீர் இளநீரைப் போன்று சுவையுள்ளது.

கோதண்டசாமி கோயில்

இராமேஸ்வரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தக் கோயில்.

குருசடை தீவு

பாம்பன் பாலத்தின் மேற்குக் கரைக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் உள்ள அழகிய சிறு தீவு இது. இராமநாதபுரம் மண்டபத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தீவைச் சுற்றி பவளப்பாறைகளும் டால்பின் போன்ற அரியவகை மீன்களும், கடல் பசுக்களும் உள்ளன. கடல் மற்றும் உயிரியல் ஆய்வாளர்களுக்கு மிகப்பிடித்த தீவு இது. மீன்வளத்துறையின் அனுமதி பெற்றுத்தான் இங்கு செல்ல முடியும்.

சிவபெருமானின் ஜோதி லிங்கம்

இந்தியாவில் உள்ள ஜோதிலிங்கத் கோயில்களில் இராமநாத சுவாமி கோயிலும் ஒன்று.

இராமநாதபுரம்

மன்னர் சேதுபதியின் ஆட்சிக்குட்பட்ட நகரம். இப்போது மாவட்டத்தின் தலைநகரம். இராமலிங்க விலாசம் என்ற அரண்மனையும், தாயுமானவரின் கல்லறையும் இங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்.

கஞ்சிரங்குளம் மற்றும் சித்திரக்குடி பறவைகள் சரணாலயம்

பருவகாலங்களின் மாற்றத்துக்கு ஏற்ப பறவை இனங்கள் கண்டம் விட்டுக் கண்டம் வந்து இளைப்பாறும் இயல்பு கொண்டவை. பறவைகளின் இந்தப் பயணத்தை வலசை வருதல் என்று அழைப்பார்கள். இப்படி வரும் பறவைகள் இந்தப் பகுதியில் வந்து தங்கி கூடிக் குலாவி குஞ்சுகளும் பொரிக்கின்றன. நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை இந்தக் காட்சியைக் காண முடியும்.

மண்டபம்

இராமநாதபுரத்திலிருந்து செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் அழகிய கிராமம். இராமேஸ்வரத்திலிருந்து 19 கி.மீ. தூரத்தில உள்ளது. 1914 க்கு முன்பு இராமேஸ்வரத்துக்கு நேரடியாக இரயிலில் செல்ல முடியாது. மண்டபத்தில் வந்து இறங்கி படகில்தான் இராமேஸ்வரத்துக்குச் செல்ல வேண்டும். தற்போது குருசடை தீவிற்கு படகு சவாரி செல்லலாம்.

ஒரியூர்

போர்ச்சுக்கீசியரான அருளானந்தர் என்ற ஜான் டீ பிரிட்டோ உயிர்த்தியாகம் செய்த இடம் இது. கி.பி. 1693 ஆம் ஆண்டு இந்தத் துறவியின் தலையை வெட்டுமாறு தண்டனை நிறைவேற்றப்பட்டது. தண்டனையை நிறைவேற்றுபவர்களை நோக்கி அருள் அருளானந்தர் தன் தலையை மனமுவந்து தந்த வண்ணம் நிற்கும் சிலை ஒன்று இங்குள்ள போர்ச்சுகீசிய கட்டடத்தின் முகப்பில் உள்ளது. இந்தத் துறவியின் தலையை வெட்டும்போது தெறித்த ரத்தத்தால் இந்தப் பகுதியில் உள்ள மணற்குன்றுகள் அனைத்தும் சிவப்பாக மாறி உள்ளதாகக் கூறப்படுகிறது. உலக அளவில் கிறிஸ்தவர்கள் போற்றி வணங்கும் புனிதத் தலமாக இது திகழ்கிறது.

கடல் மீன் காட்சியகம்

இராமேஸ்வரப் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது இந்தக் காட்சியகம். இந்தியாவிலேயே மிகப்பெரிய இந்தக் கடல் மீன் காட்சியகத்தில், ஆக்டோபஸ், பாம்பு மீன், கிளி மீன், கடல் பல்லி, பசு மீன், சிங்க மீன், எலி மீன், நெருப்பு மீன், வெண்ணெய் மீன், கோமாளி மீன், கார்பஸ், பெருங்கடல் நண்டுகள், கடல் தாமரை, பீச்டாமெட், நட்சத்திர மீன்கள், கடற்குதிரைகள், சுறாமீன் மற்றும் இறால் வகைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்கள் காண்போர் மனத்தைக் கொள்ளை கொள்ளும். தொலைபேசி - 04573-222811.

தொடர்பு அலுவலர் - தி வைல்டு லைஃப் வார்டன், மன்னார் வளைகுடா, கடல் நீர் தேசியப் பூங்கா, இராமநாதபுரம் - 623 503.

திருப்புல்லாணி

'தர்பசயனம்' என்று அழைக்கப்படும் திருப்புல்லாணியில் விஷ்ணு கோயில் உள்ளது. ஆதி ஜகந்நாதப் பெருமாள் குடி கொண்டுள்ள இராமேசுவரத்திலிருந்து 64 கி.மீ. தொலைவில உள்ளது இந்தப் புண்ணியத் தலம்.

சாட்சி அனுமன் கோயில்

கண்டேன் சீதையை என்று இராமனிடம் வந்து அனுமன் சொன்ன இடம். அந்த நிகழ்வுக்கு சாட்சியாக இந்தக் கோயில் நிற்கிறது.

உத்திரகோச மங்கை

இராமேசுவரத்திலிருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ளது. மரகதத்தால் செதுக்கப்பட்ட லிங்கம் உள்ள பழம்பெரும் சிவன் கோயில் இங்கு உள்ளது. இங்கு டிசம்பர் மாதம் நடக்கும் ஆருத்தா தரிசனம் பிரபலமான திருவிழாவாகும்.

நம்புநாயகி அம்மன் கோயில்

இராமநாதபுர மாவட்ட மக்களால் விரும்பி வழிபடப்படும் இந்தக் கோயில் இராமேசுவரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் தனுஷ்கோடி அருகில் உள்ளது.

வில்லூண்டி தீர்த்தம்

இராமனுடன் சென்று கொண்டிருந்த சீதாபிராட்டிக்கு இராமன் தன் கையிலிருந்த வில்லை ஊன்றி அதிலிருந்து பீறிட்ட நீரைக் கொண்டு தாகத்தைக் தணித்துள்ளான். இதனால் இந்த இடத்துக்கு வில்லூண்டித் தீர்த்தம் என்று பெயர் வந்துள்ளது. இராமேசுவரத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய இடங்கள் 

 

ஐயாறு

சித்தன் குட்டி மலையின் உச்சியில் தோன்றும் ஐந்து ஆறுகளான ஆரோச்சி ஆறு. கானப்பாடி மூலை ஆறு, மாசி மலை அருவி, நக்காட்டு ஆறு எனும் ஐந்து ஆறுகளும் சங்கமித்து ஒன்றாக உருவெடுத்து

வருவதால் இந்த ஆற்றுக்குப் பெயர் ஐயாறு. 4500 அடி உயரத்திலிருந்து வரும் இந்த ஆற்றுக்கு வெள்ளைப் பாழி ஆறு என்றும் பெயர். கொல்லி மலையின் பல இடங்களைத் தொடும் இந்த ஆறு.

அங்குள்ள அரப்பள்ளி ஈஸ்வரர் கோயிலுக்கு அப்பால் விழுந்து ஆகாச கங்கை எனப் பெயர் பெறுகிறது. அங்கிருந்து இம்மாவட்டத்தைவிட்டு வெளியேறி புளியஞ்சோலை என்னும் இடத்தில் காவிரியுடன்

கலக்கிறது.

கொல்லிமலை ஆகாச கங்கை அருவி

பச்சை மாமலைபோல் மேனி என்று கொல்லி மலையைப் பார்த்துத்தான் ஆழ்வார்கள் பாடி இருப்பார்களோ என்னவோ! அப்படி ஒரு பசுமை? எங்கு பார்த்தாலும் பச்சைப் படுதாவை போட்டு மூடிய

மலைவெளிபோலவிரியும் கொல்லிமலைத் தொடர். நாமக்கல்லிலிருந்து 40 கி.மீ. தூரத்தில் உள்ளது. கொல்லிமலை கடல் மட்டத்திலிருந்து 1190 மீ. உயர்ந்து நிற்கும் கொல்லிமலையின் பரப்பு ஏறத்தாழ

400 சதுர மைல்கள். 28 கி.மீ. வடமேற்காக நீண்டும் 19 கி.மீ. கிழக்கு மேற்காக அகன்றும் கிடக்கும் இந்த மலைவெளியின் வளம் பெறும் பசுமை அன்று. அவ்வளவும் அரிய மூலிகைகள்.

அரப்பள்ளீஸ்வரர் கோயில் அரசு மூலிகைப் பண்ணை தாவரத்தோட்டம் என பார்ப்பதற்கு ரம்மியமான பல இடங்கள் உண்டு. அரப்பள்ளீஸ்வரர் கோயில் அருகில் விழும் ஆகாச கங்கை அருவி மூலிகை

மகத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியங்களில் புகழ்ந்து பாடப்பட்ட கடையெழு வள்ளல்களில் ஒருவரான வள்ளல் ஓரிக்கு ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தில் பெரிய திருவிழாவே நடத்தப்படுகிறது.

பல்வேறு சித்தர்கள் வாழ்ந்த குகைகளும் இங்கு உள்ளன. இந்தக் காற்று பட்டாலே நோய் விலகும் என்கிறார்கள் தமிழ் மருத்துவ வல்லுநர்கள்.

ஆஞ்சநேயர் கோயில்

ஒரே கல்லில் 200 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட அனுமன் சிலை இங்குள்ளது. இதையடுத்துத்தான் கோட்டை அமைந்துள்ளது. இரண்டு குடவரைக் கோயில்களும் அமைந்துள்ளன. தொலைபேசி -

04286-233999.

அர்த்தநாரிஸ்வரர் கோயில்

தமிழகத்திலேயே சிவபெருமான் அர்த்தநாரிஸ்வரராகக் காட்சியளிக்கும் ஒரே கோயில் இதுதான். திருச்செங்கோடு மலையில் உள்ள இந்தக் கோயில் மூலவரின் உயரம் 5 அடி. இந்த மூலவர் சிலையை

சித்தர்கள் மூலிகைகளால் வடித்துள்ளதாகக் கருதப்படுகிறது. செங்கோட்டு வேலவர் என்ற பெயரில் முருகனுக்கும் விஷ்ணுவுக்கும் தனித்தனி சந்நிதிகள் இந்தக் கோயிலில் உள்ளன.

கைலாசநாதர் கோயில்

அர்த்தநாரிஸ்வரர் கோயில் குன்றின் மீது இருப்பதால், இந்த சிவன் கோயிலை கீழ் கோயில் என்று அழைக்கின்றனர். பாண்டிய மன்னன் விக்கிரமன் இக்கோயிலைக் கட்டியதாகக் கருதப்படுவதால்

விக்கிரம பாண்டீஸ்வரர் என்றும் கூறுவார்கள்.

கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவில்லம்

20 ஆம் நூற்றாண்டு தமிழ்க் கவிஞர்களில் புகழ்பெற்ற பெருங்கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை. 10.10.1888 இல் பிறந்த இவர் 1932 ஆம் ஆண்டு நடந்த உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில்

பங்கேற்ற விடுதலை வீரர். காந்தியத்தின் மீது ஈடுபாடு கொண்ட கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு 21.2.2000 அன்று நினைவில்லம் திறக்கப்பட்டது. இது 39 கவிஞர் ராமலிங்கம் தெரு நாமக்கல் என்ற

முகவரியில் உள்ளது.

நாமக்கல் துர்க்கம் கோட்டை

உறுதி வாய்ந்த இந்தக் கோட்டை தூண் வரலாற்றுத் தொடர்ச்சியாக இந்த மாவட்டத்தை அடையாளப்படுத்தி நிற்கிறது. 1792 ஆம் ஆண்டு இந்தக் கோட்டையை மீட்டெடுத்த சில மாதங்களிலேயே மீண்டும்

ஆங்கிலேயரிடம் பறிகொடுத்தார். ஹைதர் அலி வரலாறு என்பதே வீழ்ச்சியும் எழுச்சியும் பின்னிப் பிணைந்ததுதானே!

பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய இடங்கள் 

 

பண்டைய சோழமண்டலத்தின் ஒரு பகுதி. 1995 ஆம் ஆண்டு,நவம்பர் 1 ஆம் தேதி முதல் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. தெற்கே திருச்சிராப்பள்ளி மாவட்டமும், கிழக்கே நாமக்கல் மாவட்டமும், மேற்கே தஞ்சை மாவட்டமும், வடக்கே கடலூர் மாவட்டமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. பெரம்பலூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை என்ற மூன்று வட்டங்களை உள்ளடக்கியது பெரம்பலூர் மாவட்டம். பெரும் புலியூர் என்று ஒரு தலம். அது மருவி இன்று பெரம்பலூர் என்று ஆகிவிட்டது என்று சொல்பவர்களும் உண்டு. இம்மாவட்டம் 1752 சதுர கி.மீ பரப்பளவுடையது.

செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபானி சுவாமி கோயில்

இந்த மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் கிராமத்தில் இந்த இரண்டு ஆலயங்களும் அமைந்துள்ளன. குலசேகர பாண்டியனால் கட்டப்பட்ட இந்தக் கோயில்கள் பெரம்பலூரிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலத்தூர் கேட்டுக்கு மேற்கில் 8 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளன. அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் தைப்பூசத்தின் போது 10 நாள் திருவிழா கோலாகலமாக நடக்கும். பழந்தழிழரின் கட்டடக்கலைக்குச் சான்றாக இருக்கும் இந்தக் கோயில்கள் , பார்க்கப்பட வேண்டியவை தொலைபேசி : 0432-268008

சோழகங்கம் ஏரி

முதலாம் இராசேந்திர சோழன் தனது வெற்றியைக் குறிக்கும் 'வெற்றி நீர்த்தூணாக' இந்த ஏரியை உருவாக்கி உள்ளான். ஜலமயம் மற்றும் ஜெயசம்பம் என்று இது அழைக்கப்பட்டுள்ளது.திருவாலங்காடு செப்பேடுகளில் சோழகங்கம் என்று குறிப்பிடபட்டுள்ள இந்த ஏரி, தற்போதும் அவ்வாறே அழைக்கப்பட்டு வருகிறது. ஐந்து கிலோ மீட்டர் நீண்டு பரந்து கிடக்கும் இந்த ஏரி 130 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வயல்களுக்குப் பாசனம் அளித்து வருகிறது.
ரஞ்சன் குடி கோட்டை

கர்நாடக நவாப்பிடம் ஜாகிர்தாராக இருந்த ஒருவர் 17 ஆம் நூற்றாண்டில் இந்தூர் கோட்டையைக் கட்டியுள்ளார். பெரம்பலூரில் இருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள இந்தக் கோட்டை கச்சிதமாகச் செதுக்கப்பட்ட கல் சதுரங்களைக் கொண்டு கட்டப்பட்டது. முப்புறமும் உள்ள கோட்டைச் சுவர்களின் உயரத்தின் அளவு வெவ்வேறாக இருக்கிறது. கடைசி கீழ்தள காப்பரண் நீள் சதுரவடிவிலும், கோட்டைக் காவலுக்கான தளம், அதைச் சுற்றிலும் நன்றாகத் திட்டமிட்டுக் கட்டப்பட்டுள்ளது.மேலும் கோட்டைக்குள் ஓர் அரண்மனை, குடியிருப்புக் கட்டடங்கள், பாதாள அறை, மசூதி மற்றும் கொடி மேடை ஆகியவையும் உள்ளன. 1751 ஆம் ஆண்டு ஒரு பக்கம் ஆங்கிலேயரும் முகமது அலியும், இன்னொருபக்கம் சந்தாசாகிப் மற்றும் பிரெஞ்சுக்காரர்களும் எதிரெதிர் நின்று நடத்திய வலிகொண்டபோரின் சாட்சிக் களமாக இந்தக் கோட்டை இருந்து வருகிறது. தற்போது மத்திய அரசின் செல்லியல் துறை இந்தக் கோட்டையைப் பராமரித்து வருகிறது.

சாத்தனூர் மரப்படிவு

சாத்தனூருக்கு கிழக்கே தற்போது 10 கி.மீ. அப்பால் உள்ள கடல், சுமார் 120, 000, 000 ஆண்டுகளுக்கு முன்னால் சாத்தனூருக்கும் மேற்கில் 8 முதல் 10 கி.மீ. தூரத்தில் இருந்ததாக புவியியல் துறை ஆய்வுகள் கூறுகின்றன. காலப்போக்கில் ஆறுகளின் மண் மேடானது. இதில் கடல் வாழ் உயிரினங்களும், கடலோரத் தாவரங்களும் மண்ணின் அடியாழத்தில் புதையுண்டன. காலச் சுழற்சில் புதையுண்டிருந்த மரங்கள் மீண்டும் மேற்பரப்புக்கு இழுத்துவரப்பட்டு பாறைகளில் தங்கி மரப்படிவுகள் ஆயின.

இப்படி சாத்தனூரில் உள்ள ஒரு பாறைப் படிவில் தங்கிய மரப்படிவின் நீளம் 8 மீட்டர். இதேபோல வாகூர், அணைப்பாடி, அலுந்தலைப்பூர் மற்றும் சாரதாப்பூர் ஆகிய ஊர்களிலும் சில மீட்டர் நீள மரப்படிவுகள் உள்ளன . 1940 ஆம் ஆண்டு இந்திய புவியியல் துறை வல்லுநர் டாக்டர் எம்.எஸ்.கிருஷ்ணன் இத்தைகைய மரப்படிவுகள் குறித்து முதன் முதலாகக் கண்டறிந்து கூறியுள்ளார்.

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மிகப் பிரபலமான கோயில்களில் இதுவும் ஒன்று. பங்குனி மாதத்தின் கடைசியில் இந்தக் கோயிலில் திருவிழா நடக்கும் சித்திரை மாதம் முதல் நாளில் தேர்த் திருவிழா நடக்கும். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகள் தோறும் சிறப்பு வழிபாடுகள் நடக்கும்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய இடங்கள் 

 

அறந்தாங்கி

புதுக்கோட்டையை அடுத்த பெரிய நகரம். முன்பு தஞ்சை மாவட்டத்தில் இருந்தது. பின்னர் புதுக்கோட்டை மாவட்டத்துக்குள் சேர்ந்தது. இங்குள்ள சிதைந்த கோட்டை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.

ஆவுடையார் கோயில்

புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள ஆவுடையார் கோயிலில் உள்ள ஆத்மநாத சாமி கோயிலின் ஆளுயரச்சிலை புகழ்பெற்றது. சிதம்பரம் நடராஜர் கோயிலைப் போலவே

இக்கோயிலின் சந்நிதிக் கூரை தாமிர ஓடுகளால் வேயப்பட்டது. இங்குள்ள மரவேலைப்பாடுகளும் கருங்கல் கூரையும் கலை நேர்த்தி மிக்கவை.

ஆவூர்

புதுக்கோட்டையிலிருந்து 28 கி.மீ. தூரத்தில் உள்ள இவ்வூரில், கி.பி. 1547 ஆம் ஆண்டு ஃபாதர் ஜான் வெனான்டியஸ் பச்சட் என்பவரால் கட்டப்பட்ட பழம்பெரும் தேவாலயம் அமைந்துள்ளது. மேலை

நாட்டு தமிழறிஞரான வீரமா முனிவர் (ஜோசப் பெஸ்கி) இந்தத் தேவாலயத்தில் இறைப்பணி ஆற்றியுள்ளார். கோடை காலத்தில் இங்கு நடக்கும் ஈஸ்டர் பண்டிகையும், தேரோட்டமும் அனைத்து

மதத்தினரும் கலந்து கொள்ளும் பெரு விழாக்களாகும்.

திருக்கோகர்ணேஸ்வரர் பிரகதாம்பாள் கோயில்

திருக்கோகர்கணத்தில் உள்ள கோகர்ணேஸ்வரர், பிரகதாம்பாள் குடைவரைக் குகைக் கோயில், மகேந்திர வர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்தது. காந்திநகரில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம்

பஸ் நிலையத்துக்கு அருகே உள்ள ஜியான் ஜூப்ளி, சேக்ரட் ஹார்ட் தேவாலயம், மார்த்தாண்டபுரம், இரண்டாவது தெற்கு வீதியில் உள்ள பெரிய மசூதி ஆகியவை புகழ்பெற்ற இடங்களாகும்.

காட்டுபாவா பள்ளி வாசல்

புதுக்கோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் திருமயம்-மதுரை நெடுஞ்சாலையில் இந்தப் பள்ளி வாசல் அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் புனிதத் தலமென்றாலும் இந்துக்களும் இங்கு சென்று

தொழுவது தனிச்சிறப்பு. நபியுல் அகிர் மாதத்தில் இங்கு நடக்கும் உர்ஸ் திருவிழா பிரபலமானது.

அரசு அருங்காட்சி சாலை

புதுக்கோட்டை இரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள திருக்கோகர்ணத்தில் அமைந்துள்ளது. இங்கு புவியியல், விலங்கியல், மானுடவியல், கல்வெட்டியல், வரலாற்று ஆவணங்கள்,

ஓவியங்கள் என்று ஏராளமான சேகரிப்புகள் இடம் பெற்றுள்ளன. வெவ்வேறு காலக்கட்டங்களைச் சேர்ந்த அற்புதமான சிலைகளும் வெண்கலக் கலைப்பொருட்களும் காண்போரை வியப்படையச்

செய்யும்.

பார்வை நேரம்- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. அனுமதி இலவசம். வெள்ளி விடுமுறை. தொலைபேசி - 04322-236247.

கொடும்பாளூர்

புதுக்கோட்டையிலிருந்து 36 கி.மீ. தொலைவிலும், திருச்சியிலிருந்து 42 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சோழர்களுடன் உறவாக இருந்த இருக்கு வேளிர் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்த இந்த ஊரில்

பூதி விக்கிரமகேசரி 10 ஆம் நூற்றாண்டில் மூன்று கோயில்களைக் கட்டியுள்ளார். இவற்றில் தற்போது இரண்டு கோயில்கள் மட்டுமே உள்ளன. தென்னிந்திய கட்டுமானக் கலைக்கும் சிற்பக் கலைக்கும்

இந்தக் கோயில்கள் எடுத்துக் காட்டாக உள்ளன. இவற்றில் அமைந்துள்ள களரி மூர்த்தி, கஜசம்ஹார மூர்த்தி, அர்த்தநாரி, கங்காதர மூர்த்தி ஆகியவை சிற்பக் கலையின் உன்னத சாட்சியங்களாகும்.

இதன் அருகே சோழர்கால முச்சுகொண்டேஸ்வரர் கோயிலும் உள்ளது. கொடும்பாளூர் என்றாலே மூவர் கோயில்தான் நம் நினைவுக்கு வரும்.

குடுமியான் மலை

இங்குள்ள சிவன் கோயிலில் சிறந்த சிற்பங்களும், பழமையான கல்வெட்டுகளும் உள்ளன. இவற்றில் ஒரு கல்வெட்டு மகேந்திர வர்ம பல்லவனின் இசை ஞானத்தையும் பிரிவதனி என்ற எட்டிழை

வாத்தியத்தில் அவர் செய்த பரிசோதனைகளையும் பற்றி விவரிக்கிறது.

நார்த்தா மலை

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடம் முன்பு முத்தரையர் படைத்தலைவர்களின் தலைமையிடமாக இருந்துள்ளது. பழங்கால வட்ட வடிவக் கோயிலை முத்தரையர்கள் கட்டினார்கள் என்றால்

விஜயாலய சோழேஸ்வரன் கோயிலை பிற்காலச் சோழர்களின் முதல் அரசனான விஜயாலய சோழன் கட்டியுள்ளான். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கோயில்கள் பார்க்கப்பட வேண்டியவை.

புதுக்கோட்டையில் இருந்து 17 கி.மீ. தொலைவில் நார்த்தா மலை இருக்கிறது.

சித்தன்னவாசல்

உலகப்புகழ் பெற்ற ஓவியர்கள் நிறைந்த குகைக் கோயில் இங்குதான் உள்ளது. இந்தக் குகைக் சுவரில் வரைந்துள்ள அஜந்தா வகை ஓவியங்கள் ஓவியக் கலைஞர்களால்கொண்டாடப்படுபவை.

நடுநாயகமாக வரையப்பட்டிருக்கும் ஓவியத்தில் ஒரு தாமரைக் குளம், அங்கு நடனமாடும் இரு கந்தர்வப் பெண்கள், குளத்திலிருக்கும் தாமரை மலரைக் கொய்து கொண்டிருக்கும் சிலர், சுற்றிலும்

மீன்கள், அன்னப் பறவைகள் என காவியமாய் விரியும். 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளும் இங்குள்ளன. சித்தன்னவாசல் சுற்றுப்புறத்தில் ஆதிகால இடுகாடுகளும், புதைக்கப்படாத

முதுமக்கள் தாழீகளும் உள்ளன.

குமரமலை

புதுக்கோட்டையிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த மலையின் உச்சியில் முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலின் திருக்குள நீர் புனித நீராகக் கருதப்படுகிறது.

திருமயம்

இந்தியாவிலேயே பெருமாள் அனந்தசயனத்திலிருக்கும் மிகப்பெரிய குகைக் கோயில் இங்குதான் உள்ளது.இயற்கையில் அமைந்த குகையே அற்புதமான கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. இந்தக் கோயில்

அமைந்துள்ள குன்றைச் சுற்றிலும் கம்பீரமான கோட்டை எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கோட்டை கி.பி. 1687 ஆம் ஆண்டு சேதுபதி விஜயரகுநாத தேவரால் 40 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டுள்ளது. குன்றின்

கீழ்ப்புறமாகப் பெருமாள் கோயிலோடு சிவன் கோயிலும் உள்ளது. தொண்டைமான் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர் காலத்தில் முக்கியப் பங்காற்றியுள்ள இந்தக் கோட்டை, புதுக்கோட்டையிலிருந்து 19

கி.மீ தொலைவில் உள்ளது.

வேடன்பட்டி

புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள மீனாட்சி சொக்கேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள நெய் நந்தி மிகப் பிரபலமானது.

விராலிமலை

இந்த மலைக் குன்றின் உச்சியில் முருகன் கோயில் உள்ளது. 15 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே இந்தக் கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள மயில் காப்பகத்தில் முருகன் வள்ளி

தெய்வயானையோடு மயில் மீதமர்ந்து காட்சி அளிக்கிறார். திருச்சியிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும் புதுக்கோட்டையிலிருந்து 40 கி.மீ தொலைவிலும் விராலிமலை அமைந்துள்ளது.

அருள்மிகு நாகநாதசாமி திருக்கோயில்

புதுக்கோட்டையில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது. இந்தக் கோயிலில் உள்ள சுனையின் சுற்றுச் சுவரில் ஒரு சூலம் வரையப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பங்குனிமாதம் சுனையின் நீர்மட்டம்

இந்தச் சூலக் குறியிட்ட இடத்திற்கு வரும் வேளையில் வழிபாட்டின் போது ஒலிக்கப்படும் ஒருவித இசையொலி கேட்பதாக நம்பப்படுகிறது. ஆதிசேஷன் பூமிக்கு அடியிலுள்ள அருள்மிகு நாகநாதரை

வழிபடும்போடு ஏற்படும் இசைஒலிதான் அது என்றும் கூறப்படுகிறது. இதை சுனை முழக்கம் என்றும் அழைக்கிறார்கள். ஆடிமாத ஆடிப்பூரத் திருவிழா 9 ஆம் நாள் தேரோட்டம் உள்பட 10 நாட்களும்,

புரட்டாசி மாதம் நவராத்திரி, விஜயதசமி, அம்புபோடுதல் போன்ற திருவிழாக்களும், ஐப்பசி மாதம் 6 ஆம் நாள் கந்தர்சஷ்டி உற்சவமும், கார்த்திகை மாத தீபத்திருவிழாவும், மார்கழி கந்தர்சஷ்டி

உற்சவமும், கார்த்திகை மாத தீபத்திருவிழாவும், மார்கழி மாதம் 10 நாட்கள் ஆருத்ரா தரிசனம் மற்றும் திருவாதிரை உற்சவங்களும் இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களாகும்.