Sunday, 5 October 2014

குரங்கு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்

குரங்கு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்

 

 பொள்ளாச்சி : மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால் குரங்கு அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. அதில் குளிக்க அனுமதி எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் உள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது குரங்கு அருவி.உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்வார்கள். இதனால் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இந்த அருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும்.

 கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து குறைவாகவே இருந்தது. அந்த தண்ணீரில் சுற்றுலா பயணிகள் தலையை நனைத்து சென்றனர்.  தொடர் வறட்சி காரணமாக மார்ச் இறுதியில் அருவி தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. அதன்பின் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பெய்த தென்மேற்கு பருவமழை காரணமாக குறைந்த அளவு தண்ணீர் கொட்டியது. இந்நிலையில் கடந்த சிலநாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. வால்பாறை, பரம்பிக்குளம், டாப்சிலிப் பகுதியில் தொடர்ந்து மழைபெய்து கொண்டிருக்கின்றது. இதனால் குரங்கு அருவியில் தண்ணீர் கொட்ட துவங்கியுள்ளது.

இந்நிலையில் புலிகள் காப்பக பகுதியில் சுற்றுலாவுக்கு விதித்திருந்த தடையை நீக்கி உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இருந்தாலும், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சுற்றுலா பகுதிகளுக்கு, சுற்றலா பயணிகளுக்கு அனுமதி குறித்து இன்னும் அறிவிக்கப்பட வில்லை. உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து,  சுற்றுலா பயணிகள் பலர் நேற்று குரங்கு அருவிக்கு வந்தனர்.  ஆனால் அவர்களை வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. வால்பாறையிலிருந்து வாகனங்களில் பொள்ளாச்சி நோக்கி வருவோர் குரங்கு அருவியில் கொட்டும்  அழகை ரசித்து செல்கின்றனர். குரங்கு அருவிக்கு செல்ல அனுமதி விரைந்து வழங்கப்பட வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

 

No comments:

Post a Comment