பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்
பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

பண்டைய சோழமண்டலத்தின் ஒரு பகுதி. 1995 ஆம் ஆண்டு,நவம்பர் 1 ஆம் தேதி முதல்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது.
தெற்கே திருச்சிராப்பள்ளி மாவட்டமும், கிழக்கே நாமக்கல் மாவட்டமும், மேற்கே
தஞ்சை மாவட்டமும், வடக்கே கடலூர் மாவட்டமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
பெரம்பலூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை என்ற மூன்று வட்டங்களை
உள்ளடக்கியது பெரம்பலூர் மாவட்டம். பெரும் புலியூர் என்று ஒரு தலம். அது
மருவி இன்று பெரம்பலூர் என்று ஆகிவிட்டது என்று சொல்பவர்களும் உண்டு.
இம்மாவட்டம் 1752 சதுர கி.மீ பரப்பளவுடையது.
செட்டிக்குளம் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபானி சுவாமி கோயில்
இந்த
மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் கிராமத்தில் இந்த இரண்டு ஆலயங்களும்
அமைந்துள்ளன. குலசேகர பாண்டியனால் கட்டப்பட்ட இந்தக் கோயில்கள்
பெரம்பலூரிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் திருச்சி-சென்னை தேசிய
நெடுஞ்சாலையில் உள்ள ஆலத்தூர் கேட்டுக்கு மேற்கில் 8 கி.மீ. தொலைவிலும்
அமைந்துள்ளன. அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி
மாதம் தைப்பூசத்தின் போது 10 நாள் திருவிழா கோலாகலமாக நடக்கும்.
பழந்தழிழரின் கட்டடக்கலைக்குச் சான்றாக இருக்கும் இந்தக் கோயில்கள் ,
பார்க்கப்பட வேண்டியவை தொலைபேசி : 0432-268008
சோழகங்கம் ஏரி
முதலாம்
இராசேந்திர சோழன் தனது வெற்றியைக் குறிக்கும் 'வெற்றி நீர்த்தூணாக' இந்த
ஏரியை உருவாக்கி உள்ளான். ஜலமயம் மற்றும் ஜெயசம்பம் என்று இது
அழைக்கப்பட்டுள்ளது.திருவாலங்காடு செப்பேடுகளில் சோழகங்கம் என்று
குறிப்பிடபட்டுள்ள இந்த ஏரி, தற்போதும் அவ்வாறே அழைக்கப்பட்டு வருகிறது.
ஐந்து கிலோ மீட்டர் நீண்டு பரந்து கிடக்கும் இந்த ஏரி 130 சதுர கிலோ
மீட்டர் பரப்பளவு வயல்களுக்குப் பாசனம் அளித்து வருகிறது.
ரஞ்சன் குடி கோட்டை
கர்நாடக
நவாப்பிடம் ஜாகிர்தாராக இருந்த ஒருவர் 17 ஆம் நூற்றாண்டில் இந்தூர்
கோட்டையைக் கட்டியுள்ளார். பெரம்பலூரில் இருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள
இந்தக் கோட்டை கச்சிதமாகச் செதுக்கப்பட்ட கல் சதுரங்களைக் கொண்டு
கட்டப்பட்டது. முப்புறமும் உள்ள கோட்டைச் சுவர்களின் உயரத்தின் அளவு
வெவ்வேறாக இருக்கிறது. கடைசி கீழ்தள காப்பரண் நீள் சதுரவடிவிலும், கோட்டைக்
காவலுக்கான தளம், அதைச் சுற்றிலும் நன்றாகத் திட்டமிட்டுக்
கட்டப்பட்டுள்ளது.மேலும் கோட்டைக்குள் ஓர் அரண்மனை, குடியிருப்புக்
கட்டடங்கள், பாதாள அறை, மசூதி மற்றும் கொடி மேடை ஆகியவையும் உள்ளன. 1751
ஆம் ஆண்டு ஒரு பக்கம் ஆங்கிலேயரும் முகமது அலியும், இன்னொருபக்கம்
சந்தாசாகிப் மற்றும் பிரெஞ்சுக்காரர்களும் எதிரெதிர் நின்று நடத்திய
வலிகொண்டபோரின் சாட்சிக் களமாக இந்தக் கோட்டை இருந்து வருகிறது. தற்போது
மத்திய அரசின் செல்லியல் துறை இந்தக் கோட்டையைப் பராமரித்து வருகிறது.
சாத்தனூர் மரப்படிவு
சாத்தனூருக்கு
கிழக்கே தற்போது 10 கி.மீ. அப்பால் உள்ள கடல், சுமார் 120, 000, 000
ஆண்டுகளுக்கு முன்னால் சாத்தனூருக்கும் மேற்கில் 8 முதல் 10 கி.மீ.
தூரத்தில் இருந்ததாக புவியியல் துறை ஆய்வுகள் கூறுகின்றன. காலப்போக்கில்
ஆறுகளின் மண் மேடானது. இதில் கடல் வாழ் உயிரினங்களும், கடலோரத் தாவரங்களும்
மண்ணின் அடியாழத்தில் புதையுண்டன. காலச் சுழற்சில் புதையுண்டிருந்த
மரங்கள் மீண்டும் மேற்பரப்புக்கு இழுத்துவரப்பட்டு பாறைகளில் தங்கி
மரப்படிவுகள் ஆயின.
இப்படி சாத்தனூரில் உள்ள ஒரு பாறைப் படிவில்
தங்கிய மரப்படிவின் நீளம் 8 மீட்டர். இதேபோல வாகூர், அணைப்பாடி,
அலுந்தலைப்பூர் மற்றும் சாரதாப்பூர் ஆகிய ஊர்களிலும் சில மீட்டர் நீள
மரப்படிவுகள் உள்ளன . 1940 ஆம் ஆண்டு இந்திய புவியியல் துறை வல்லுநர்
டாக்டர் எம்.எஸ்.கிருஷ்ணன் இத்தைகைய மரப்படிவுகள் குறித்து முதன் முதலாகக்
கண்டறிந்து கூறியுள்ளார்.
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில்
பெரம்பலூர்
மாவட்டத்தில் உள்ள மிகப் பிரபலமான கோயில்களில் இதுவும் ஒன்று. பங்குனி
மாதத்தின் கடைசியில் இந்தக் கோயிலில் திருவிழா நடக்கும் சித்திரை மாதம்
முதல் நாளில் தேர்த் திருவிழா நடக்கும். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகள்
தோறும் சிறப்பு வழிபாடுகள் நடக்கும்.
No comments:
Post a Comment