சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய இடங்கள்
சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய இடங்கள்

கலை நேர்த்தியும், கம்பீரமும் மிகுந்த செட்டிநாட்டு மாளிகைகளை உள்ளடக்கியது
சிவகங்கை. ஒரு பக்கம் காரைக்குடியைச் சுற்றி பிள்ளையார்பட்டி போன்ற
கோயில்களும், இன்னொரு பக்கம் மருதுபாண்டியர் வாழ்ந்த வீரம் மிகுந்த
பகுதியும் சிவகங்கை மாவட்டத்தின் சிறப்புக்கு சான்றுகள். கி.பி.
1674-1710க்கும் இடைப்பட்ட காலத்தில் இராமநாதபுரத்தின் ஏழாவது அரசனாகிய
ரகுநாத சேதுபதி ஆட்சியின்கீழ் இருந்துள்ளது.
இடைக்காட்டுர் தேவாலயம்
மதுரையிலிருந்து
இராமநாதபுரம் செல்லும் சாலையில் 36 கி.மீ. தொலைவில் இந்தத் தேவாலயம்
உள்ளது. பிரான்சில் உள்ள நீம்ஸ் கதீட்ரல் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ள
இக்கோயில், முழுவதும் கோதிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டதாகும்.
இங்குள்ள எல்லா அழகிய சிலைகளும் பிரான்ஸ் நாட்டிலிருந்து 110 ஆண்டுகளுக்கு
முன் வரவழைக்கப்பட்டவை.
காளீஸ்வரர் கோயில்
தேவகோட்டையிலிருந்து
மானாமதுரை செல்லும் வழியில் 30 கி.மீ. தொலைவில், மதுரையிலிருந்து தொண்டி
செல்லும் வழியில் 66 கி.மீ. தொலைவிலும் உள்ள இந்தக் கோயில் பண்டையக்
கட்டடக்கலைச் சிறப்புக்கு எடுத்துக்காட்டு. காளீஸ்வரர் கோயில் இருப்பதால்
இதற்கு காளையார் கோயில் என்று பெயர். இதைச் சுற்றியுள்ள கல் மதில் 18 அடி
உயரம் ஆகும். சிறியதும் பெரியதுமாக இரண்டு இராஜ கோபுரங்களைக் கொண்ட இந்தக்
கோயிலின் தென்புறம் பெரிய தெப்பக்குளம் ஒன்றுள்ளது.
கண்டதேவி கோயில்
தேவகோட்டையிலிருந்து
3 கி.மீ தொலைவில் உள்ள கிராமத்தில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. அருள்மிகு
ஸ்வர்ண மூர்த்தீஸ்வரர், பெரிய நாயகி அம்மன் சமேதராய் இக்கோயிலில்
வீற்றிருக்கிறார். கிரகிலி நாதர் எனவும் அழைக்கப்படுகிறார். 350
ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், ஆனி மாதத் திருவிழா
சிறப்பாக நடைபெறுகிறது. இத்திருவிழாவுக்கு, சுற்றியுள்ள 75
கிராமங்களிலிருந்தும் மக்கள் கூடுவார்கள்.
கண்ணதாசன் மணிமண்டபம்
'நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை.எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை' என்று
பிரகடனம் செய்த கவியரசு கண்ணதாசனுக்கு, காரைக்குடி புதிய பேருந்து நிலையம்
எதிரே, அழகான மணிமண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பிள்ளையார் பட்டியின்
அருகில் உள்ள சிறுகூடல் பட்டிதான், கண்ணதாசன் பிறந்த ஊர்.
குன்றக்குடி கோயில்
முருகனின்
சிறப்பு வாய்ந்த எட்டுக்குடிகளில் இந்தக் கோயிலும் ஒன்று. காரைக்குடியில்
இருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்தக் குன்றத்துக் கோயிலில்
சண்முகநாதனாக முருகப்பெருமான் கோலோச்சுகிறார். கி.பி. 1000 இல் இந்தக்
கோயில் கட்டப்பட்டதாக மயூரகிரி புராணம் கூறுகிறது. மருது பாண்டியர்களால்
புதுப்பிக்கப்பட்டது. தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை
மற்றும் கந்தசஷ்டி திருவிழாக்கள் இந்தக் கோயிலில் வெகு விமரிசையாகக்
கொண்டாடப்படும்.
மருதுபாண்டியர் நினைவாலயம்
சிவகங்கைச்
சீமையை ஒரு காலத்தில் திறம்பட ஆண்ட வேலு நாயக்கர் பரம்பரையில்
வந்தவர்கள்தான் மருது பாண்டியர்கள். பெரிய மருது 1748லும், சின்னமருது
1753லும் பிறந்தனர். வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய இவர்களை 1801இல்
வெள்ளையர்கள் தூக்கிலிட்டுக் கொன்றனர். இம் மாவீரர்களுக்கான நினைவாலயம்
ஸ்வீடிஷ் மருத்துவமனை வளாகத்தில் 21.10.1992 இல் திறக்கப்பட்டது.
காரைக்குடி
நகரத்தார்
என்று கூறப்படும் செட்டியார்கள் வாழும் செட்டி நாட்டுப் பகுதியின்
தலைநகரம் போல் விளங்குவது இந்தக் காரைக்குடி நகரத்தாரின் ஒவ்வொரு வீடும்
ஒவ்வொரு மாளிகை. மதில் போன்ற சுற்றுச் சுவர்களும், பளிங்குத் தரையும், சுதை
ஓவியங்களும், வண்ணச் சித்திரக் கண்ணாடி சாளரங்கள், அலங்கார தொங்கு
விளக்குகள், அழகான தேக்குமர வேலைப் பாடுகள் இப்படியாக இன்றும் கலைநயத்தோடு
மிளிர்கின்றன. இவர்களின் வீடுகள் விருந்தோம்பல் பண்பில் சிறந்த இவர்கள்,
கடல்கொண்ட பூம்புகாரை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிள்ளையார்பட்டி
காரைக்குடியிலிருந்து
12 கி.மீ. தொலைவில் மதுரை செல்லும் வழியில் உள்ள கோயில் இது. பாண்டிய
மன்னர்களால் கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது
என்பதைக் கல்வெட்டு மூலம் அறியமுடியகிறது. ஒரு குன்றிலிருந்து
துண்டிக்கப்பட்ட பாறையில் கோயிலையும் கட்டி, ஒரே கல்லில் கற்பக விநாயகர்
மற்றும் லிங்கவடிவு ஆகியவற்றையும் வடித்துள்ளனர். இவற்றை வடித்த எக்கத்தூர்
கூன்பெருபரணன் என்ற சிற்பி அதற்கு அடையாளமாகக் கல்வெட்டில் தனது
கையெழுத்தைப் பொறித்து வைத்துள்ளார். இங்கு 14 கல்வெட்டுகள் உள்ளன. இவை
கி.பி. 400 முதல் கி.பி 1238 வரை பொறிக்கப்பட்டவை. திருவீங்கைக்குடி,
மருதக்குடி, ராஜநாராயணபுரம் எனப் பல பெயர்களைக் கொண்டிருந்த இந்த ஊர்,
தற்போது பிள்ளையார்பட்டி என்று அழைக்கப்படுகிறது. தொலைபேசி: -
04577-264240.
இளையான்குடி
63 நாயன்மார்களில் ஒருவரான
இளையான்குடி மாறன் நாயனார் பிறந்த ஊர். ஒரு விவசாயியான இவர் சிவனையும்
சிவனடியாரையும் உயிரென மதித்து வாழ்ந்து வந்திருக்கிறார்.
திருக்கோஷ்டியூர்
108
திருப்பதிகளில் ஒன்றான பெருமாள் திருத்தலம் இது. இராமானுஜரே வந்து வழிபட்ட
பெருமை பெற்றது. ஒவ்வோர் ஆண்டும் மாசிமக தீபம் இந்தக் கோயிலில் விசேஷமாகக்
கொண்டாடப்படுகிறது.
திருவேங்கடமுடையான் கோயில் - தென்திருப்பதி
ஸ்ரீனிவாசப்
பெருமாள் குடிகொண்டுள்ள இந்தக் கோயில் தென் திருப்பதி எனப் பெயர் பெற்றது.
நாட்டுக்கோட்டை நகரத்தார்களால் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக்
கோயில் காரைக்குடிக்கு மிக அருகில் உள்ள அரியக் குடியில் அமைந்து உள்ளது.
No comments:
Post a Comment