திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்கள்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய இடங்கள்
கோயில்கள்
அபிராமி அம்மன் கோயில் :
திண்டுக்கல் நகரில்
அருள் பாலிக்கும் அபிராமி அம்மனுக்கு வைக்கப்படும் நவராத்திரி கொலு மிகவும்
பிரசித்தி பெற்றது. இந்தக் கோயில் திண்டுக்கல் நகரின் மையத்தில்
அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள ஞானாம்பிகை அம்மனுக்கு லட்சார்ச்சனை
செய்வார்கள். ஆடி வெள்ளிக்கிழமையின்போது அபிராமி அம்மன் பூப்பல்லக்கில்
வலம் வந்து பக்தர்களுக்கு அருள் தருவார்.
நடுப்பட்டி ஆஞ்சநேயர் கோயில்
ஆற்றங்கரையில்
அமைந்திருக்கும் அருள்மிகு ஆஞ்சநேயர் கோயில். இங்குள்ள சிலை பெரும்பாலும்
நீரால் சூழப்பட்டிருக்கும். திண்டுக்கல்லிலிருந்து 35 கி.மீ. தொலைவில்
நிலக்கோட்டை வட்டத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. மதுரை நகரிலிருந்தும்
சென்று வரலாம்.
ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயில்
மாவீரன்
திப்புவின் படைவீரர்கள்தான் மலையடிவாரத்தில் இக்கோயிலின் சிலையை
நிறுவியுள்ளார்கள். இந்தக் கோயில் 200 ஆண்டுகள் பழமையானது. சதுர வடிவில்
கட்டப்பட்ட கோயிலின் தெற்கில் வெற்றி விநாயகர் கோயிலும் வடக்கில் முருகன்
கோயிலும் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள சிங்கமுகச் சிற்பம் நம்மைப்
பார்க்கும். கர்ப்பக் கிரகம் கூட சதுர வடிவில்தான் அமைந்திருக்கும்.
பெரியநாயகி அம்மன் கோயில்
நாயக்கர்
கால கட்டடப் பாணியில் கட்டப்பட்ட அம்மன் கோயில். பழனி மலை தண்டாயுதபாணி
துணைக்கோயில்களில் முக்கியமானது இக்கோயில். பெரிய நாயகி அம்மன்கோயில்
திருவிழா என்றால் ஊரே திரண்டுவரும். இங்குள்ள சிற்பங்கள் கலையழகின் உச்சம்.
பிரதான மண்டபத்தின் உயரமான தூண்கள் எல்லாவற்றிலும் முருகப்பெருமானின்
உருவங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ காளகதீஸ்வரர் கோயில்
காளகதீஸ்வரர்
ஞானாம்பிகை அம்மன் குடிகொண்டுள்ள இக்கோயில் பழமையானது. நாயக்கர் ஆட்சிக்
காலத்தில் புதுப்பிக்கப்பட்ட கோபுரங்களில் இதுவும் ஒன்று. சித்திரை
மாதத்தில் இங்கு நடக்கும் பிரம்மசாரத் திருவிழா கோலாகலமாகக்
கொண்டாடப்படுகிறது. இந்தக் கோயிலுக்கு பத்மகிரி நகர் அபிராமிதேவி அம்மனைக்
கொண்டு வருவது இத்திருவிழாவின் முக்கிய அங்கம். இங்குள்ள மண்டபம் 14 ஆம்
நூற்றாண்டில் திருவிழாவிற்கென அழகுப்படுத்தப்பட்டது. திண்டுக்கல்
செல்கிறவர்கள் கட்டாயம் சென்று வர வேண்டிய திருத்தலம் இது.
தாடிக்கொம்பு பெருமாள் கோயில்
சித்ரா
பௌர்ணமி அன்று அழகர் பெருமாள் தரிசனம் பக்திப் பரவசம். சித்திரை மாதத்தில்
பன்னிரண்டு நாட்கள் நிகழும் அழகர் பெருமாள் சிறப்புப் பூஜை
சிறப்புக்குரியது. திண்டுக்கல்லிலிருந்து கரூர் செல்லும் சாலையில் 5 கி.மீ.
தொலைவில் அமைந்துள்ளது. அனைவருக்கும் அருள் தரும் பெருமாள் அழகர்பெருமாள்.
குறிஞ்சியாண்டவர் கோயில்
மலையும்
மலைசார்ந்த இடங்களுக்கான கடவுள் முருகப்பெருமாள் வீற்றிருக்கும் ஆலயம்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிப்பூ இக்கோயிலுடன்
தொடர்புடையது. குறிஞ்சியாண்டவர் கோயிலிலிருந்து பார்த்தால் பழனி
திருக்கோயிலும் வைகை அணையும் தெரியும்.
பழநி முருகன் கோயில்
தமிழ்க்கடவுள்
பழந்தமிழர்களின் கடவுள். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. தமிழகத்தில்,
பழநி மலை முருகன் கோயிலுக்குச் சென்று மொட்டை போடாதவர்கள் இருக்க
மாட்டார்கள். தென்னிந்தியாவின் மிகப்பெரிய புண்ணியத்தலமான இக்கோயிலின்
மூலவர் நவபாசாணத்தால் வடிக்கப்பட்டவர். எனவே, இச்சிலையின் அபிஷேக நீரை
அருந்தினால் நோய்தீரும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். மின்வடக்கயிறு
ஊர்தி மூலம் மலைமீதேறி முருகப்பெருமானை வணங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
புனித ஜான் தேவாலயம்
புனித
ஜான் தேவாலயம் சுமார் 125 ஆண்டுகளுக்கு முன் தாமஸ் பெர்னாண்டோ என்ற
ஆங்கிலேயரால் கட்டப்பட்டது இத்திருத்தலம். 1866 இல் தொடங்கி 1872 இல் ஆலய
நிர்மாணப் பணி நிறைவடைந்துள்ளது. மிகப்பிரபலம் வாய்ந்த கிறிஸ்தவப் பேராலயம்
இது. தொலைபேசி - 0451-2423557.
பேகம்பூர் பெரிய மசூதி
மலைக்கோட்டை
அடிவாரத்தின் தெற்கில் அமையப் பெற்றுள்ள இது பழமையான வரலாறுகளை தன்னுள்
புதைத்து வைத்திருக்கிற மிகப்பெரிய மசூதி. ஹைதர் அலி திண்டுக்கல்லை ஆட்சிப்
புரிந்த போது கட்டிய மூன்று மசூதிகளில் இதுவும் ஒன்று. இந்த மசூதியைப்
பராமரிக்க ஹைதர் அலி நிறைய மானியங்கள் வழங்கியுள்ளார். அவரும்
படைவீரர்களும் மக்களும் வழிபடத் தனித்தனியே மூன்று மசூதிகளை
மலைக்கோட்டையின் அருகிலேயே வெவ்வேறு இடங்களில் கட்டியுள்ளார். ஹைதர்
அலியின் இளைய சகோதரியும் கோட்டைப் படைத்தலைவர் மிர்கா அலிகானின் மனைவியுமான
அடுர் உன்னிசாபேசம் இறந்தபின் பெரிய மசூதி வளாகத்திற்குள்ளேயே
புதைக்கப்பட்டார். திண்டுக்கல்லின் ஒரு பகுதியான பேகம்பூர் ராஜவம்சப்
பெண்ணின் நினைவைப் போற்றும் வகையில் இது அமைந்துள்ளது.
திண்டுக்கல் கோட்டை
மலையின்
மீது 280 அடி உயரத்தில் கம்பீரம் காட்டும் இந்தக் கோட்டையை கி.பி. 1605
இல் மதுரையை ஆண்ட முத்துகிருஷ்ண நாயக்கர் கட்டத் தொடங்கினார். அதன்பின்
திருமலை நாயக்கர் பணிகளைத் தொடங்கி கி.பி. 1659 இல் நிறைவு செய்தார்.
பழம்பெரும் வரலாற்றின் அசையாத ஆவணமாக இருக்கிறது இக்கோட்டை. கி.பி. 1755
இல் ஹைதர் அலி தன் காதல் மனைவி பகருன்னிசாவையும் ஐந்து வயது மகன்
திப்புவையும் ஆங்கிலேயர்களுக்குத் தெரியாமல் இங்குதான் மறைத்து வைத்தார்.
திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தில் சையத் இப்ராகிம் என்ற அதிகாரியிடம்
கட்டளையிட்டு இந்தக் கோட்டையில் பல அறைகள் கட்டப்பட்டதாகவும் கோட்டையின்
மதில்களை சீரமைத்ததாகவும் ஒரு வரலாறு உண்டு. மைசூர் போரில் 1790 இல் திப்பு
சுல்தான் தோற்கடிக்கப்பட்ட பின் இக்கோட்டை ஆங்கிலேயப் படைகளின் கைகளில்
வந்தது. இச்சிறு வரலாறு கோட்டையின் பிரமாண்டத்தை ரசிக்க உதவும்.
மலைக்கோட்டை கோவில்
திண்டுக்கல்
மலையில் கி.பி.13ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட மன்னன் முதலாம் சடைவர்மன்
குலசேகர பாண்டியன் இக்கோவிலை கட்டினார். அன்று முதல் இக்கோவில்
ராஜராஜேஸ்வரி கோவில் என்றழைக்கப்பட்டது. தற்போது இந்த மலைக்கோவிலில் ஐந்து
கடவுள்களுக்கான கருவறைகள் தனித்தனியாக இருந்த போதிலும் எந்தக் கருவறையிலும்
சிலைகள் இல்லை. எனவே இந்தக் கோவிலில் வழிபாடும் இல்லை. இந்தமலைக்கோட்டை
முழுவதும் இந்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இருப்பினும் இங்குள்ள கருவறை ஒன்றிலிருந்த சிவலிங்கத்தின் லிங்கமில்லாத
ஆவடைப்பகுதி கருவறைக்கு வெளியே தனியே கிடக்கிறது.
No comments:
Post a Comment