கோவை மாவட்ட சுற்றுலா தளங்கள்
கோவை மாவட்ட சுற்றுலா தளங்கள்
வெள்ளியங்கிரி மலை : கோவையிலிருந்து மேற்கே 37 கி.மீ தூரத்தில் பூண்டி
எனப்படும் வெள்ளியங்கிரித் திருத்தலம் அமைந்துள்ளது. மேற்குதொடர்ச்சி
மலைகளின் பிரம்மாண்டமான வடிவங்களில் ஒரு பகுதியாக விளங்குகிற இங்கே
சிவபெருமான் லிங்கத்திரு மேனியராக எழுந்தருளியுள்ளார் அடிவாரத்திலிருந்து
அடுக்காக தொடரும் மலைகளுக்கு அப்பால் உயரமான இடத்தை தனக்குரிய தலமாக
தேர்ந்தடுத்துள்ளார் நில மட்டத்திலிருந்து 5400 மீட்டர் தூரத்திலும், 1200
மீட்டர் உயரத்திலும் வெள்ளிங்கிரி ஆண்டவன் குகைகோயில் பக்தி மணம் கமல
அமையப்பெற்றுள்ளது.
கொங்கு நாட்டின் மேற்கு எல்லையாக விளங்குகிற
இந்த மலை கோயிலுக்கு வருடத்தின் மாசி, பங்குனி, சித்திரை குறிப்பிட்ட
மாதங்களில் மட்டும்தான் பக்தர்கள் சென்று வருகின்றனர். வெள்ளை விநாயகர்
ஆலயம், வழுக்குபாறை, பாம்பாட்டிமலை, கைதட்டிசுனை, சீதை வனம், பொய்ப்பாலம்
நாம் செல்கிற வழிகளில் மலைகளின் முக்கிய அம்சமாக விளங்குகிறது.
வெள்ளிங்கிரி மலைக்கும் பின்புறம் இருப்பது கேரளபகுதியாகும்.
வெள்ளிங்கிரியின் தென்பகுதியில்தான் சிறுவாணி அணைக்கட்டும் உள்ளது.
இத்திருத்தலத்தை அருணகிரி நாதார் பக்தி உள்ளத்தால் பூஜித்து பாடியுள்ளார்
ஆணைமுடி:
ஆணைமுடி
தென்னகத்திலேயே அதிக மழை பெறும் வளமான காட்டுப்பகுதி இங்கு ஆண்டுக்கு 203
செ.மீ. மழை பெய்கிறது. நீலகிரி லங்கூர் குரங்கு, சிங்கவால் குரங்கு
நீலகிரி, டாஹர் எனும் மலையாடுகள் உள்ளன. இது 2000 மீட்டர் உயரமுள்ளள
சிகரமாகும்.
சிறுவாணி அணைக்கட்டு :
பாவனி நதியின்
துணைநதியான சிறுவாணி கேரளத்தில் பாலக்காடு மாவட்டத்திலுள்ள மேற்குத்
தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகிறது. அங்கு அட்டப்பாடி பள்ளத்தாக்கு வழியாக
வடகிழக்கே ஓடி நீலகிரி மலையடிவாரத்தில் உள்ள மேட்டுப்பாளையத்திற்கும்
மேற்கே பவானியுடன் கலக்கிறது. இந்த சிறுவாணி ஆற்றில் ஒரு சிறு அணைகட்டி
அந்த அணையில் தேங்கிய நீரை ஒரு குகை மூலம் மலையின் மறுபுறம் அதாவது
கிழக்குப் பக்கம் கொண்டு வந்து கோவை நகருக்கு குடிநீர் விநியோகம்
செய்யப்படுகிறது.
அணையின் கட்டுமானப்பணி 1927 – தொடங்கப்பட்டு
1931-ல் முடிக்கப்பட்டது. அணையின் உயரம் 23 அடிகளாகும். நகர வளர்ச்சி,
மக்கள்தொகைப் பெருக்கம் இவற்றின் காரணமாக ஏற்பட்ட குடிநீர்ப்
பற்றாக்குறையைப் போக்க இந்த அணைக்குக் கீழே 2.2 கி.மீட்டர் தொலைவில்
மூத்திகுளம் நீர்வீழ்ச்சி நீர், கோபி ஆறு, அணசோலை ஆறு மற்றும் பட்டி ஆறு
ஆகியவற்றின் நீர்களைத் தேக்கும் விதத்தில் 1984 - ஆம் ஆண்டு புதிய அணை
கட்டப்பட்டது. இவ்விரு அணைகளிலிருந்தும் பல மில்லியன் காலன் குடிநீர் கோவை
மாநகருக்கு விநியோகம் செய்யப்பட்டுகிறது. இந்தியாவின் வேறெந்த நகருக்கும்
கிடைக்காத தூய்மையான, சுவைமிக்க இச்சிறுவாணி நீர் கோவை மக்களுக்குக்
கிடைத்த அரிய வரப்பிரசாதமாகும். கோவைக்கு மேற்கே 37 கி.மீ தொலைவில்
அமைந்துள்ள சிறுவாணி அணைக்கட்டும், நீர்விழ்ச்சி, இவ்வழியில் அமைந்துள்ள
கோவை குற்றாலம் எனப்படும் முத்தி குளம், வைதேகி நீர்விழ்ச்சியும்
அமைந்துள்ளது.
கோவைக் குற்றாலம் : கோவையிலிருந்து 37 கி.மீ.
தொலைவில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், சிறுவாணி நதியில் அமைந்துள்ளது.
வனப்பகுதி என்பதால் மாலை 5 மணிக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை.
வ.உ.சி.
பூங்கா: வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவாக அமைக்கப்பட்ட பூங்கா. சிறு
மிருகக்காட்சி சாலை, சிறுவர் ரயில், சிறுவர் விளையாட்டுக் கருவிகள் ஆகியவை
உள்ளன. அருகிலுள்ள விளையாட்டரங்கில் நடக்கும் கால்பந்து போட்டிகளும்
அரசியல் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் கோவையின் உயிரோட்டமாக விளங்குகின்றன.
நொய்யல் :
வெள்ளிங்கிரி
மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு பெரியாறு சின்னாறுகளுடன் கலக்கிறது.
பேரூர் வழியில் ஓடி வரும் போது காஞ்சி மகாநதி என்றும் சிறப்பு பெருகிறது.
இது கோவை நகர பகுதிகளில் 15 கி.மீ. பாய்கிறது. பருவமழையால் மட்டுமே இதில்
தண்ணீர் வரும்.
அமராவதி ஆறு :
கேரள மாநிலம் அஞ்சநாடு
பள்ளத்தாக்கில் இது உற்பத்தியாகி ஆணைமலை, பழனிமலை பள்ளத்தாக்கு வழியாக இது
ஓடி வருகிறது. தாராபுரம் வழியாக ஓடி வரும்போது உப்பாறு இத்துடன் சேருகிறது.
ஆழியாறு:
இது பொள்ளாச்சி வட்டத்திலுள்ள ஆணைமலை பகுதியில்
உற்பத்தியாகிறது. இத்துடன் பல காட்டாறுகளும் சேர்ந்து கொள்கிறது. இது கோவை
மாநகர குடிநீர் திட்டத்தில் முக்கிய பங்கு வருகிறது.
பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில்
பேரூர்
பட்டீஸ்வரர் திருக்கோவில் கொங்குநாட்டின் மிகப்பழம்பெரும் கோவிலாகும்.
“மேலை சிதம்பரம்” என வழங்கப்படுகிற இக்கோவில் கோவைக்கு மேற்கே 6 கி.மீ
தொலைவில் அமைந்துள்ளது. ஆதிசங்கரர் எழுதிய சங்கர பாராயணத்தில்
இத்திருத்தலத்தின் பெருமைகள் போற்றப்படுகின்றன. பஞ்சபாண்டவர்கள் இங்கு
வந்து வழிபாடு செய்திருக்கிறார்கள். அதன் பின்னரே வெள்ளியங்கிரிக்கு
சென்றார்கள் என்னும் குறிப்புகள் தல புராணத்தில் இருந்து கிடைக்கின்றன.
இரவாத பனை, பிறவாத புளி, புளுக்காத சாணம், எலும்பு கல்லாவது, வலது காது
மேல் நோக்கியிருப்பது ஆகிய ஐந்து வகை சிறப்புகள் இத்தெய்வ தல
திருத்தலத்திற்கு உண்டு. இறைவன் திருநாமம் பட்டீஸ்வரர் இறைவி பச்சைநாயகி,
அரச மரம் கோவிலின் ஸ்தல விருட்சமாகும். சமயக் குரவர்களால் பாடப் பெற்று
எழுந்தருளியுள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதரும் பாடி சிறப்பித்துள்ளார்.
ஆனி மாதத்தில் கிருத்திகை நாள் அன்று நடைபெறும் ‘நாற்று நடவு உற்சவம்’
பிரசித்தி பெற்றது.
ஈச்சனாரி விநாயகர்
கோவையிலிருந்து 10
கி.மீ தூரத்தில் பொள்ளாச்சி செல்லும் பிரதான சாலையில் ஈச்சனாரி விநாயகர்
திருக் கோயில் அமைக்கபட்டுள்ளது. சிறியதாக இருந்து பழைய கோயிலை பின்பு
பெரியதாக கட்டி கும்பாபிசேகம் நிகழ்த்தியுள்ளனர். கிழக்குப் பார்த்துள்ள
கருவறையில் பெரிய தோற்றத்தில் வீற்றிருக்கிற விநாயகப் பெருமான் பக்தர்களின்
நெஞ்சங்களை குளிர்வித்து அருள் வழங்குகிற வல்லமை யோடு காட்சி தருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி இங்கு மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு
வருகிறது. ஏனைய பண்டிகை நாட்களிலும் மாதத்தின் முக்கிய நாட்களிலும் இங்கு
விசேச பூஜைகள் நிகழ்த்தப்படுகிறது. ஞானசம்பந்தரின், திருநாவுக்கரசரின்,
தேவாரங்களும், திருமூலரின் திருமந்திரமும் மற்றும் பலரின் பாடல்களும்
விநாயகப் பெருமானின் பெருமையை போற்றுகின்றன.
ஆனைமலை மாசாணியம்மன் கோவில்
கோவை
மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து தென்மேற்கே 15 கி.மீ தூரத்தில்
ஆனைமலையிலிருந்து சேத்துமடை செல்லும் பிரதான சாலையில் மாசாணியம்மன் கோவில்
நுழைவு வாயில் உள்ளது. கொடுங்கோண்மையை எதிர்க்கும் போது மாரியம்மனாய்
உருவெடுக்கும் இந்த மாதேவி மாசாணியம்மனாக இருந்து மகிமை புரிகிறாள். இந்த
கோவில் மயான மண்ணில் அமைந்திருப்பதாலும், மூலவரான அம்மனும் மயான மண்ணில்
குடிகொண்டு விளங்குவதாலும் மாசாணியம்மன் என்னும் பெயர் அழைப்புப் பெயராக
அமைந்து பின்னர் நிலைபெயராகிவிட்டது.
17 அடி நீளமுள்ள பெரிய உருவமாக
மேற்கில் தலைவைத்து கிழக்கில் கால்கலை நீட்டி படுத்த நிலையில் காட்சி
தருகிற இந்த அம்மனின் திருக் கோலமானது பார்ப்பவர்களுக்கு மெய் சிலிர்ப்பை
உண்டாக்குகிறது. இங்கு வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி, சூனியம்,
மாந்திரீகம் ஏவல் கட்டு போன்றவைகளால் பாதிப்பு இருந்தால் அவற்றிலிருந்து
நிவாரணம் கிடைக்கிறது.
பிறரால் வஞ்சிக்கப்பட்டவர்களும் ,
சொத்துக்களை பரிகொடுத்தவர்களும், திருட்டு போன்ற ஏமாற்றங்களுக்கு
ஆளானவர்களும் இங்கு வந்து அம்மனின் முன்னால் நின்று முறையிட்டால்
எதிராளிகள் மிகுந்த தண்டனைக்கு ஆளாகின்றனர். மாசாணியம்மன் கோவிலில் தினசரி
மூன்று கால பூஜைகளும் செவ்வாய், வெள்ளி நாட்களில் சிறப்பு பூஜைகளும்
நடைபெறுகின்றன. தையம்மாவாசை அன்று கொடியேற்றம் செய்வித்து பதினேழாம் நாளில்
குண்டம் இறங்கும் நிகழ்ச்சி சிறப்புற நடைபெற்று வருகிறது.
தண்டு மாரியம்மன் கோவில்
கோவை
மாநகரில் அவினாசி நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கி இந்த இறைவியின் திருக்
கோவில் அமையப் பெற்றுள்ளது. கொங்கு நாட்டு கோட்டைகளில் முக்கியமானதாக
விளங்கிய கோயம்புத்தூர் கோட்டை 1768 லிருந்து 1791 ஆம் ஆண்டு வரை மூன்று
தடவை முற்றுகையிடப்பட்டது. ஆங்கிலேய படைகளுடன் திப்பு சுல்தான் படைகள்
மும்முரமாக மோதிக் கொண்டிருந்த சமயம் இதில் கலந்து கொள்ள மைசூர் படைகளும்
வந்து சேர்ந்து இருந்தன. மைசூரிலிருந்து வந்த படைகளுடன் ஒரு படைக்கலமாக
இந்த அம்மனின் லிங்க வடிவத்திலான உருவமும் கலந்து கொண்டு வந்து சேர்ந்து
விட்டது. போர் முடிந்து புறப்படும் போது இந்த லிங்கத்தை எடுத்து சென்று
விட்டனர். ஆனால் அங்கு சென்று பார்த்தால் இந்த லிங்கம் மாயமாய் மறைந்து
விட்டது. மறுபடியும் இங்கு வந்து பார்த்தபோது மாரியம்மன் இங்கேயே
குடியமர்ந்திருக்கின்ற அபூர்வம் அவர்களுக்கு புலப்பட்டிருக்கிறது. இதை
எடுத்த செல்ல முயன்றும் அவர்களால் முடியவில்லை.
படைக்கலன்களுக்கு
தண்டு என்று பொருள் அதனாலேயே தண்டுமாரியம்மன் எனும் பெயர்
நிலைபெயராகிவிட்டது. ஒவ்வாரு ஆண்டும் சித்திரை மாத்தின் முதல் செவ்வாய்
கிழமை தொடங்கி 13 நாட்களுக்கு பிரம்மாத்சவமும், ஆண்டு திருவிழாவும்
நடைபெற்று வருகிறது. அது தவிர வருடத்தின் முக்கிய தினங்களில் சிறப்பு பூஜை
நடைபெற்று வருகிறது.
பேரூர் சாந்தலிங்கர் திருமடம்
இந்து
மதத்தில் தோன்றிய உட்பூசல்கள் பொருளற்ற சடங்குகள்,மூட நம்பிக்கைகள்,
சாதி,சமய வேறுபாடுகள் ஆகியவற்றின் காரணமாக தெற்கே பிற மதங்களான சமணமும்,
புத்தமும், செல்வாக்கு பெறத் தொடங்கிய காலம் அது. அறிவில் சிறந்த சமய
சான்றோர்கள் வைதீக தர்மத்தை காக்கும் பொருட்டு மடாலயங்களை நிறுவி சைவ சமயம்
மற்றும் வீர சைவ சமயத்திற்கு புத்துயிர் ஊட்ட தொடங்கினர். வீர சைவம்
தோன்றியது கன்னட நாட்டில் பசவேசர் வீர சைவத்திற்கு புத்துயிர் கொடுத்தார்.
தமிழ்நாட்டில் பல மடங்கள் தோன்றின. வீரசைவம் தலையெடுத்து பரவ தொடங்கியது.
வீர சைவர்களின் திருமடங்கள் தமிழ்நாட்டில் 12 உண்டு. பேரூர் மட்டும்
அவற்றில் ஒன்று. இதனை நிறுவியவர் தவத்திரு சாந்தலிங்க சுவாமிகள் ஆவார்.
இவர் சந்தான சாரியர்கள் நால்வருள் ஒருவரான மெய்கண்ட தேவரான பரம்பரையில்
வந்த துறையூர் சிவப்பிரகாசரின் மாணவராவார். 17ம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் தோன்றியவர். சில காலம் இத்திருமடம் முகமதியர் படையெடுப்பால்
காலத்தின் வேகத்தால் இருக்கும் இடம் தெரியாமால் இருந்தது. ஆனால்
சாந்தலிங்கர் இயற்றிய கொலை மறுத்தல் வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம்
முதலான நூல்கள் அறிஞர்கள் மத்தியில் சிறந்து விளங்கியதால் இத்திருமடம்
பிற்காலத்தில் சிறப்புறலாயிற்று. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்
இம்மடத்தின் வரலாற்றில் ஒரு மறுமலர்ச்சி ஏற்ப்பட்டது. மெளவுன சுவாமிகள்
இராமலிங்க சுவாமிகள், மாணிக்க சுவாமிகள் காலத்தின் மாற்றத்தில் செல்வாக்கு
வளர தொடங்கியது. கொங்கு நாட்டு தனவந்தர்களின் ஆதரவினால் மடத்தின் சர்பாக பல
கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டன. அவற்றில் குறிப்பிடத்த்க்கது பிரசித்தி
பெற்ற பேரூர் தமிழ் கல்லூரியாகும். தற்பாதைய மடாதிபதியாக விளங்குபவர்
தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாவார். தவத்திரு மருதாசல அடிகளார்
இளவரசு பட்டம் ஏந்தியுள்ளர்.
சிரவணபுரம் கெளமார மடாலயம்
இது
இந்து மதத்தின் ஆறு உட்பரிவுகளில் கெளமாரமும் ஒன்று. முருகப் பெருமானை
முதல்வனாகக் கொண்டு பக்தி நெறியைப் பரப்பும் மையங்கள் கெளமார மடாலயங்கள் என
அழைக்கப் பெறும். இத்தகைய மடாலயங்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கது
சிரவணபுரம் கெளமாரமடாலயம். கோவையை அடுத்து கணபதி அருகே அமைந்துள்ளது.
வண்ணச் சரபம் புகழ் அருள்திரு தண்டபாணி சுவாமிகளின் சீடரான ராமானந்த
சுவாமிகள் இதன் நிறுவனராவர். கொங்கு நாட்டின் 20-வது நூறாறாண்டின் பெரும்
புலவரும், துறவியுமான தவத்திரு கந்தசாமி சுவாமிகள் இம்மடத்தின் 2-வது
மடாதிபதி. இத்திருமடத்தில் உருவாகிய தவச்சீலர்களே மூன்று தலைமுறையாக பேரூர்
சாந்தலிங்கர் திருமடத்து தலைவர்களாய் திகழ்கின்றனர். அந்நாளில் இம்மடத்து
தலைவராக விளங்கிய தவத்திரு சுந்தர சுவாமிகள் தம் சிறுவயதிலேயே
இத்திருமடத்தின் குருகுல முறைப்படி கல்வி பயின்று புலமை பெற்று
துறவியானவர். தமிழுடன் கெளமாரத்தை வளர்த்து வந்தவர். வெள்ளி கிழமை தோறும்
மதியம் பஜனை நடக்கிகறது. மாலை கெளமார நூல்கள் ஆராயப்படுகின்றன. இம்மடத்தின்
அங்கங்களாக திகழ்பவை தண்டபாணி சுவாமி கோயிலும், கனக சபையும் ஆகும்.
சபாலயம், ராமானந்த சுவாமிகளும், கந்தசாமி சுவாமிகளும் சமாதி காண்டிருக்கும்
இடமாகும். கனகசபை இராமானந்த சுவாமிகள் தனது குருவான தண்டபாணி சுவாமிகள்
திருவுருவை வைத்து பூஜித்த இடம். மூலவர் முருகப் பெருமானுக்கு தண்டபாணி
என்பது திருநாமம். உற்றுவரின் பெயர் குமரகுருபரர். கீரணம் கெளமார சபையும்,
வெள்ளகிணறு ஞான மணிப்பிள்ளை இராமானந்த ஆசிரமமும், முதலிபாளையம் இராமானந்த
மடலயமும் இத்திருமடத்தின் கிளைகளாகும்.
கோவை ஸ்ரீ ஜெகந்நாதர் ஆலயம்
ஒரிஸ்ஸா
மாநிலத்தின் பூரியில் வீற்றிருந்து அருள்பாலித்துவரும் பகவான் ஸ்ரீ
ஜெகந்நாதர் தென்னிந்தியாவில் கோவை மாநகரிலும் எழுந்தருளி உள்ளார். கோவையில்
அமைந்துள்ள இந்த ஸ்ரீ ஜெகந்நாதர் திருக்கோயில் கோவை மாவட்டத்தின்
பெருமைகளுக்கெல்லாம் சிகரம் வைத்த்து போலாகும். கோவை நகர மக்களுக்கு
மாநகரின் மையப் பகுதியான புகைவண்டி நிலையத்திலிருந்து சுமார் 8 கி.மீட்டர்
தொலைவில் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையான அவினாசி சாலையில் பொறியியர்
கல்லூரியின் எதிர்புறம் சுமார் 8.3 ஏக்கர் நிலப்பரப்பில் அகில உலக கிருஷ்ண
பக்தி இயக்கத்தால் (இஸ்கான்) கட்டப்பட்டுள்ளது. இந்த ஜெகந்நாதர் ஆலயத்தில்
கும்பாபிஷேகம் பிப்ரவரி மாதம் 4ம் தேதி மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ ஜெகந்நாதர் ஆலயத்தின் கோபுரம் பூரி கோவிலின் கோபுரத்தை
நினைவுபடுத்தும் வகையில் கட்டிடக் கலை நுணுக்கத்துடன் கலசம் வைணவக் கொடி,
சுதர்ஸன சக்கரம் ஆகியவற்றை தாங்கி கம்பீரமாக நிற்கிறது. இந்த ஆலயத்தின்
பகவான் ஸ்ரீ ஜெகந்நாதர் பலராமன் மற்றும் சுபத்ரா தேவியுடன் கெளரிதாய்
மற்றும் ஸ்ரீநரசிம்மமூர்த்தி தன் பக்தன் பிரகலாதருடன் எழுந்தருளியுள்ளார்.
புனித மிக்கேல் அதிதூதர் பேராலயம்:
இது
கோவை மாநகரின் மையப்பகுதியான டவுன்ஹாலில் அமைந்துள்ளது. கி•பி 16,17
நூற்றாண்டுகளில் கோவையும், அதனை சுற்றியுள்ள பகுதிகளும் மதுரை மிசன் உடன்
அமைந்திருந்தன. 1650ல் கிருஸ்துவ சமயம் வேர் விட ஆரம்பித்தன. இவ்வருடத்தில்
தான் முதன்முதலாக புனித பிரான்சிஸ் சவரியர் பெயரில் ஆலயம் கட்டப்பட்டது.
1773 வரை சேசு சபையை சார்ந்தவர்கள் இறை ஊழியம் செய்தனர். 1775-ல் பாரிஸ்
வேத போதக சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 1845ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள்
கருமத்தம்பட்டி கோவை மாவட்டத்தின் தலைமையிடமானது. பிரேசியாக் ஆயர் கோவையில்
1850ஆம் ஆண்டு இறுதியில் மேற்றிராசனக் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த பேராலயம் கட்டி முடிக்க 17 ஆண்டுகள் ஆயின. 1867ஆம் ஆண்டு ஏப்ரல் 28ம்
நாள் மேதகு தெப்பாமியா ஆயர் அவர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
மேற்றிராசனக் கோவிலில் மூன்று மணிகளும் நேர்த்தியான மர வேலைபாடுகளும் புனித
சூசையப்பர் பீடமும் உள்ளது. 1931ல் ஆலய வளாகத்தில் சிறுவாணி குடிநீர்
குழாய்கள் அமைக்கப்பட்டது. 1947ம் ஆண்டு முதல் இந்திய ஆயராகிய உபகாரசாமி
அவர்கள் எல்லா மக்களும் ஆலயத்தின் எல்லா பகதிகளிலும் அமரலாம் என்று ஏற்பாடு
செய்தார். கோவை மக்களின் ஆயராக 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 26ம் நாள் மேதகு
பிரான்சிஸ் சவரிமுத்து உயர்த்தப்பட்டார். 1947ஆம் ஆண்டு கோவை மறைமாவட்ட
நூறாவது ஆண்டு விழா நினைவாக மேற்றிராசனக் கோயிலருகில் மேற்கு புறம்
சேசுவின் திரு இருதய கெபியினை கட்டினார். கோவை மறைமாவட்ட நூற்றி ஐம்பதாவது
ஆண்டு நிறைவு விழா மேதகு ஆயர் அம்ரோஸ் அவர்கள் திருநிலைப்படுத்தப்பட்ட 25
ஆண்டு நிறைவு விழா நினைவாக ஆலயம் முன்பு மண்டபம் கட்டப்பட்டது. தற்போது
பேராலய பங்கின் இருதுணைப் பங்குகள் ஒன்று என்.எச் சாலையில் உள்ள புனித
சவேரியர் கோயிலும் மற்றது ஆத்துப்பாலம் நஞ்சுண்டாபுரம் இட்டேரி
பகுதியிலுள்ள புனித மார்டினார் ஆலயமும் ஆகும்.
கிருஸ்துவ அரசர் ஆலயம்
கொங்கு
திருநாடு நீர்வளமும், நிலவளமும், பொருள் வளமும் செறிந்த நாடு. ஆங்காங்கு
எழுந்துள்ள கோயில்கள் இதை காண்பிக்கின்றன. சென்ற அரை நூற்றாண்டுகளாக
இறைமகன் இயேசுவின் அன்பின் ஆட்சியை பறைசாற்றி வரும் கிருஸ்துவ அரசர் ஆலயம்
தற்போது அருளோடும் பொழிவோடும் கம்பீர தோற்றத்தோடும் இவ்வாலயம் எழுந்துள்ள
சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை திருமதி சைமன் அம்மையார் தானமாக வழங்கினார்.
1933 அக்டோபர் 22 கோவை மறை மாவட்ட ஆயராக இருந்த மிக்-வந்-லூயிஸ் துரினியே
என்பவர் அடிக்கல் நாட்டினார். இது 27.10.1935ல் கட்டி முடிக்கப்பட்டது.
சங்சர்லஸ் சர்வியோ சுவாமிகள் 1936ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல் காட்டூர்
கிருஸ்தவ அரசர் தேவாலய பங்கின் முதல் பங்கு தந்தையாக பங்கு பெற்றார். இவரே
பங்கு மக்களின் ஆன்மீக மறுமலர்ச்சிக்கு அடிகோலியவர் இவரே பாலர், வாலிபர்,
கன்னியர், ஆண், பெண், முதியோர் அனைவரும் தத்தம் வயதுக்கு ஏற்றபடி பங்கு
கொள்ளும் சர்பிரசாத வீரர் சபை, மரியாவின் மைந்தர் சபை ,மகளிர் சபை,
கத்தோலிக்க சங்கம் தாய்மார் சபை என பல சபைகளை நிறுவி பலன் கண்டார். ஆலய பலி
பீடத்திற்கே அழகு சேர்க்கும் பின்புற சுவற்றில் பதிக்கப்பட்டிருக்கும்
வண்ணக்கண்ணாடி சித்திரங்களை பிரான்ஸ் தேசத்திலிருந்து வரவழைத்து அழகுற
அமைத்தார். ஆலயத்தில் ஒளிப்பதற்கென முதல் மணி 1937ல் வாங்கி கோயிலின்
பின்புறம் அமைக்கப்பட்டது. ஆண்டு தோறும் பெரிய வெள்ளியன்று ஏழைகளுக்கு
அன்னதானம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இம்மானுவேல் ஆலயம்
வரலாற்று
சிறப்புமிக்க கோவைக்கு கி.பி.1830ஆம் ஆண்டு இலண்டன் மிஸன் சங்கத்தின்
மிஸனரியாக வந்தவர்கள் தான் திரு ஆடிஸ் அவர்கள். இவருடைய முயற்சியால் தான்
1831ஆம் ஆண்டு இம்மானுவேல் ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் 1880ஆம் ஆண்டு
விரிவுபடுத்தப்பட்டது. ஆரம்ப காலத்தில் திரு.ஆடிஸ் அவர்களே கெளரவ குருவாக
இருந்தார். இந்த ஆலயத்தின் 150ஆம் ஆண்டு விழா 1981 ஆம் ஆண்டு சிறப்பாக
கொண்டாடப்பட்டது. பின்னர் மக்கள் வருகை அதிகரித்ததால் புதிய ஆலயம் கட்டப்பட
வேண்டும் என அனைவரின் மனதிலும் ஏற்பட்டது. காலஞ்சென்ற பேராயர் பேரருள்
திரு.ஜெ.தங்கமுத்து அவர்களால் 01.01.1983 புத்தாண்டு தினத்தன்று அடிக்கல்
நாட்டப்பட்டது. தொடக்கத்தில் திரு. ராஜாசிங் அவர்களின் மேற்பார்வையில்
கட்டப்பட்டது. பின்னர் டாக்டர். அலெக்சாண்டர், டாக்டர் இராஜேந்திரன்
அவர்களின் மேலான ஆலோசனையால் கட்டப்பட்டது. இது கட்டி முடிக்க சுமார் ஒரு
கோடி செலவானது. இத்தொகை முழுவதும் இந்த சபை மக்களே கொடுத்தார்கள் என்பது
பெருமைக்குரியது. இதன் கீழ் அல்போனிய மேல்நிலைப்பள்ளியும் சிறப்பாக
நடைபெற்று வருகிறது. 2001ஆம் ஆண்டு கோவை மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண்
பெற்ற மாணவியும் இந்த பள்ளியில் பயின்றார் என்பது சிறப்புக்குறியது.
அத்தார் ஜமாத் பள்ளி வாசல்
நூறு
ஆண்டுகளுக்கு முன்பு நெல்லையிலிருந்து அத்தார்விற்கும் வியாபாரிகள் சிலர்
வந்து கோவை மைய பகுதியில் தங்கினர். அவர்கள் வீடுகளும் வியாபாரத்திற்கு
கடைகளும் அமைத்து அதன் மூலம் அமையப்பெற்ற குடும்பமே அத்தார் குடும்பம் என
அழைக்கப்பட்டது. இந்த பள்ளி வாசல் முதன் முதலில் ஓலை மூலமே அமைத்தனர்.
அதன்பின் கி.பி.1900ல் இது பெரிய பள்ளி வாசலாக கட்ட தொடங்கப்பட்டது.
தற்போது தமிழ்நாட்டில் பெரிய பள்ளி வாசலாக 1904ல் உருவானது முதலில் 100
பேர் மட்டுமே தொழ முடியும். தற்போது மூன்றாயிரம் பேர் தொழக்கூடிய விதத்தில்
அமைந்துள்ள. இதன் பராமரிப்பில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கடைவீதியில்
ஜெமிசாதர்கா என்றும் திருச்சி ரோட்டில் ஜங்கர் பீர்தர்கா என்றும் உள்ளது.
இதன் நிர்வாகத்தில் ஆண்,பெண் உயர்நிலை பள்ளிக்கூடமும் நடைபெற்று வருகிறது.
ஹீதயாத்து இஸ்லாம் ரபிஹீய்யா ஜமாத் பள்ளி வாசல்
கோவை
மாநகரின் இருதயமாக விளங்கிய கோட்டை மேடு மைசூர் திப்பு சுல்தானின் கோட்டை
கொத்தலங்கள் இருந்தமையால் இன்றும் கோட்டை மேடு என்று அழைக்கப்படுகிறது.
இந்து முஸ்லீம் மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ள இடத்தில்
இப்பள்ளி வாசல் உள்ளது. இந்த பள்ளி வாசலை சுற்றிலும் கோயில்கள்
சர்ச்சுக்களும் அமைந்துள்ளன. இந்த பள்ளி வாசல் மைசூர் திப்பு சுல்தானால்
1855-ல் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் வெறும் மட்டைகளால்
வேய்ந்த பள்ளி வாசலாக இருந்த்து. அப்போது நாற்பது பேர் மட்டுமே தொழ
முடியும் இதை ஒரு முஸ்லீம் பெரியவர் பராமரித்து வந்தார் பின்னர்
இப்பகுதியில் வாழ்ந்த மர்ஹிம் ஹாஜி முகமது பிள்ளை ராவுத்தரிடமும் அவரிடம்
இணைத்து வாணிபம் செய்தவர்களிடமும் இப்பள்ளி வாசலை ஒப்படைதார். அன்று முதல்
அப்பள்ளி வாசல் சிறிது சிறிதாக வளர்ந்தது. பின்னர் 1910-ல் வசித்த
குடும்பங்கள் ஒருமித்து ஹீதயாத்து இஸ்லாம் ரபிஹீய்யா ஜமாத் என்ற நிறுவனத்தை
அமைப்பு முறையோடு செயல்படுத்தி தமிழகத்திலேயே சிறப்பு மிக்க பள்ளி வாசலாக
உருவாக்கினார். அக்காலத்தில் சிமெண்ட் இல்லாமையால் மட்டி காரை சுண்ணாம்பு
போன்றவற்றை கொண்டே இப்பள்ளி வாசலை கட்டி முடித்தனர். தற்போது இதன் மூலம்
ஒரு மேல்நிலைப் பள்ளியும் அரபிக் கல்லூரியும் மகளிர் தையற்பயிற்சி
நிலையமும் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.
குருத்துவார கோயில் (சிங்)
கோவை
மாநகரில் அனைத்து மதத்தினரும் வழிபடும் வகையில் சீக்கியர்களின் புனித
கோயிலும் அமைந்துள்ளது. இந்த குருத்துவார கோயில் 1972-ல் ராய்சாப் கிண்லால்
என்ற இந்துவின் தலைமையில் அப்போது இருந்த 7 சீக்கிய குடும்பங்களும்
சேர்ந்து கட்டுமான பணி தொடங்கப்பட்டு 1973-ல் முடிக்கப்பட்டது. இந்த
கோயிலின் சார்பில் இலவச மருத்துவமனையும், செயல்பட்டு வருகிறது. அனைத்து
மதத்தினரும், இங்கு வழிபாடு செய்கின்றனர். தற்போது 150க்கு மேற்பட்ட
சீக்கிய குடும்பங்கள் கோவை மாநகரில் வசித்து வருகின்றனர். சீக்கியர்களின்
புனித பண்டிகையான வைசாகி பண்டிகையும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
ஜெயின் கோவில்
பக்தி
என்னும் எண்ணத்தினால் சூழபட்ட பக்தி குளமாகிய தேவாதி தேவர்களின் அன்பினால்
நிறைந்த புனித பூமியாகிய தென்னிந்தியா பிரதேசத்தில் உள்ள தமிழ்நாட்டின்
ஒரு முக்கியமான வியாபார நகரமாகிய கோயம்புத்தூரில் உள்ள ரங்கே கௌண்டர்
தெருவில் ஸ்ரீ ராஜஸ்தான் ஜைன ஸ்வேதம்பர் மூர்த்தி பூஜக்(உருவ வழிபாடு பூஜை)
சங்கத்தினர் புனிதாமான பரந்த பூமி வளாகத்தில் ஒரு பிரமாண்டமான சித்திர
வேலைபாடுள் மற்றும் குளிர்ந்த நிலவு போல் கண்ணை கவரும் மேற்கிந்திய அழகிய
வெள்ளைநிற பிரகாசமான பளிங்கு கற்களினால் ஆகாயத்தை ஈர்க்கக்கூடிய வசீகரமான
சிகரம் போல் ஜைன கோவில் நிறுவப்பட்டுள்ளது. நவீனமான இந்த ஆலயம ஜைனதுவதின்
கடவுள்களின் ஒருமித்த உருவங்களை பிரதிபலிக்கும் இந்து மதத்தின்
மூர்த்திகளின் கண்காட்சி ஒரு எடுத்துகாட்டகவும் ஜைன கோவிலின் சித்திர
கலைகள் மனதை ஈர்க்கும்படியாகவும்,வாஸ்து கலைக்கு ஒரு கடலாகவும் இணையற்ற
எடுத்துகாட்டகவும் விளங்குகிறது. நவீன தேவாலயம் மூல நாயகன் பகவான் ஸ்ரீ
சுபாஸ்ர்வநாத் சுவாமி அவார் இவர் மக்களின் பிரகாசமான வாழ்வுக்கும்
வளர்ச்சிகளும் அன்பை பொழிபவரகவும் வீற்றிருக்கிறார்.இந்த பிரமாண்ட கோவில்
101 அடி நிளமும் 41 அடி அகலமும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.இங்கு
பஞ்ச உலோகத்தால் ஆனா கிரஹ சிலைகளும் உள்ளது.கர்ப கிரஹதிற்கு வெளியே மூல
நாயகன் ஸ்ரீ சுபர்ஸ்வநாத் பகவானின் அதிர்ஷ்ட தேவதை ஸ்ரீ மாதங்யக் மற்றும்
அதிர்ஷ்ட தேவதை ஸ்ரீ சாந்தி தேவி ஆகிய இரண்டு அழகிய அமைதி அளிக்கு பெண்
தெய்வங்களும் விற்றிருக்கின்றன. புகழ்மிக்க கோயம்புத்தூர் நகரின் அழகிய
உற்சாகம் மிக்க தட்பவெட்ப சூழ்நிலையில் பூஜைக்கும் வணக்கத்திற்கும் உரிய
ஆட்சாரிய பகவான் ஆன்மிகவாதி ஸ்ரீமத் விஜயகாலபுர்ன சுரிஸ்வர்ஜி,மகராஜ்
சாஹிப் சுப்பிரீயர் ஸ்ரீ கால பிரம்ம விஜய ஜி மற்றும் பலரால் புனித நாளில்
9.12.1996 அன்று காலை சூரியோதய வேலையில் 8.00 மணி 11 நிமிடத்தில்
கும்பாபிஷேகம் நிறைவேறியது.
அருகில் உள்ள சுற்றுலாத் தளங்கள்
***
ஊட்டி - (90 கி.மீ. வடமேற்கு): மிகப் பிரபல மலை வாசஸ்தலம். அதிக
சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் பெருக்கத்தால் திணறினாலும் இன்றும்
எல்லோரையும் ஈர்க்கிறது.
*** குன்னூர்: ஊட்டி செல்லும் வழியில் உள்ள மலை வாழிடம். இங்குள்ள சிம்ஸ் பூங்கா புகழ்பெற்றது.
*** முதுமலை வனவிலங்கு காப்பகம்: ஊட்டி வழியாக தமிழக எல்லையில் உள்ள பெரிய சரணாலயம் இதுவாகும்.
*** மலம்புழா அணை : பாலக்காடு அருகில் உள்ளது.
*** பழனி - (100 கி.மீ., தெற்கு): குன்றின் மீதமைந்த முருகன் கோவில். ஆறு படை வீடுகளில் ஒன்று.
*** அமராவதி அணை : முதலை பண்ணை
*** திருமூர்த்தி அணை : பஞ்சலிங்கம் அருவி
*** ஆழியாறு அணை : குரங்கு அருவி
*** டாப் ஸ்லிப் ( இந்திரா காந்தி வன விலங்கு சரணாலயம்)
*** வால்பாறை நல்ல மலை வாசஸ்தலம்
*** கோவை குற்றாலம் - கோவையில் இருந்து சிறுவாணி செல்லும் வழியில் உள்ள ஓர் அருவி
No comments:
Post a Comment